24x7 டோல்கேட் கொள்ளை

பல்லிளிக்கும் சாலைகள் - அடாவடி வசூல்

டோல்கேட் வசூலை பகல் கொள்ளை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பகல், இரவு என 24 மணி நேரமும் இந்தக் கொள்ளை நடந்து வருவது பற்றிய தகவல்களை கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தோம். இதில் மிகப்பெரிய மோசடியும் நடந்துவருகிறது. ஒவ்வொரு டோல்கேட்டிலும் இவ்வளவு காலத்துக்குத்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று காலவரையறை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் காலவரையறை காலாவதியாகி ஆண்டுகள் பல கடந்தும்கூட, பல டோல்கேட்களில் சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அன்றாட அடாவடிகள்!

இது மட்டுமல்ல, பெரும்பாலான டோல்கேட்களில் ஒவ்வொரு நாளும் அடாவடிகள் அரங்கேறிவருகின்றன. ஒரு வாகனம் ஒரு நாளில் டோல்கேட்டை கடக்கும் ஒவ்வொரு முறையும் டோல்கேட் கட்டணம் கேட்டு வாகனத்தை வழிமறிக்கும் அநியாயம் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு மதுரை அருகே டோல்கேட் அடாவடிக்கு எதிராக சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆக்ரோஷமான போராட்டத்தை நடத்தினர். சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பாய்ந்தன.

“இந்த டோல் பிளாஸாவை நடத்துபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இங்கு வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வடஇந்தியர்கள். இவர்களுக்கு மதுரை மாவட்ட போலீஸாருடன் நல்ல தொடர்பு இருக்கிறது. டோல்கேட்டில் ஏதாவது பிரச்னை வந்தால், வாகன ஓட்டிகள் தாக்கப்படுகிறார்கள். தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு பாய்கிறது. தாக்கியவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை” என்றார் மேலூரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்.

பணிகள் முடியாமல், வசூல் ஆரம்பம்!

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணியை ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருகிறது. அதன் பணிகளை இன்னொரு தனியார் நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.  நான்கு வழிச்சாலை பணிகள் முழுமை பெறாத நிலையில், பணிகள் முடிவடைந்துவிட்டது என்று சொல்லி துவாக்குடி அருகே சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்கள். திருச்சி திருவெறும்பூர், தொழில் மையமான இடம். அங்குதான் பெல் நிறுவனம், துப்பாக்கித் தொழிற்சாலை, தொழில்நுட்பப் பூங்கா, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உட்பட பல தொழிற்சாலைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் இன்றும் முடியவில்லை. பல இடங்களில் பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. சாலையில் ஹெல்ப்லைன் வசதிகள் இல்லை. ஆனால் கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்கள்.

மேலும், இந்த தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை சர்வீஸ் சாலைகள் இல்லை. இதனால், இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்கிறார்கள். திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை ஒவ்வொரு 15 கி.மீ-க்கும் தினமும் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. அதில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கை கால்களை இழந்து முடங்கிப்போனவர்கள் ஏராளம். விபத்துகளைத் தவிர்க்க துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை சாலையின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. 2011-ம் ஆண்டு, சட்டமன்ற முதல் கூட்டத்திலேயே, அங்கு சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக  தே.மு.தி.க எம்.எல்.ஏ செந்தில்குமார் பேசினார். அதையடுத்து, சர்வீஸ் சாலை அமைக்க ரூ. 84.50 கோடி ஒதுக்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்த வேலையும் நடக்கவில்லை. எனவே, அணுகு சாலை அமைக்காத  திருச்சி – தஞ்சை எக்ஸ்பிரஸ் வே லிமிட் நிறுவனம் மீது உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ‘அணுகு சாலை மீட்புக் கூட்டமைப்பினர்’ சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் டோல் கட்டணங்கள் குறைக்கப்பட்டன. அப்போது, சமயபுரம் டோல்பூத்தில் தனிநபர் வாகனக் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. மாதக் கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டது. இந்த டோல்கேட்டின் அருகேயுள்ள ஒத்தக்கடை, மாணிக்கபுரம், செளமியா நகர், ராகவேந்திரா நகர், ச.புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, டோல்கேட் கட்டண விவகாரமும் ஒன்று என சொல்லப்படுகிறது. டோல்கேட் விவகாரத்தை தன் அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக்கொண்டது நவநிர்மான் சேனா. டோல்கேட் கட்டணத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. அதன் தொண்டர்கள் ஒரே நாளில் 22 சுங்கச்சாவடிகளை அடித்து நொறுக்கினர். அதன் பிறகு சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிராவில் உள்ள 166 சுங்கச்சாவடிகளில் 44 சுங்கச்சாவடிகள் மூடப்படும். இதில் 34 சுங்கச்சாவடிகள் மராட்டிய மாநில சாலை மேம்பாட்டுக் கழகமும், 10 சுங்கச்சாவடிகள் பொதுப்பணித் துறையும் அமைத்த சாலைகளில் உள்ளவை ஆகும். இந்தச் சுங்கச்சாவடிகள் மூடப்படுவதன் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்படும் 306 கோடி நஷ்டஈட்டை அரசு செலுத்தும்’ என்று சொல்லப்பட்டது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளை மூடுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.

களமிறங்கும் லாரி உரிமையாளர்கள்

வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர், லாரி உரிமையாளர்கள். இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் சென்னகேசவனிடம் பேசினோம்.

“ஆண்டுக்கு 16,500 கோடி ரூபாய் டோல்கேட் கட்டணங்கள் மூலம் பெறப்படுவதாகவும் அதில் 72 சதவிகிதம் லாரிகளின் கட்டணம் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதனால், இந்தத் தொகையைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவர வேண்டும். இதனால், ஊழல் முறை தடுக்கப்படும். நரேந்திர மோடி பிரதமராக வந்த பிறகு ஒரு லிட்டர் டீசல் 2 ரூபாயாக இருந்த செஸ் வரி, 6 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் இந்த செஸ் வரி சாலை பராமரிப்பு கட்டணம் என்று வசூலிக்கும்போது, ஏன் தேவை இல்லாமல் இந்த அளவுக்கு டோல் கட்டணம் வசூலிக்கிறார்கள். முறைகேடாக இருக்கும் பல டோல்களை அகற்றினாலே பல பிரச்னைகள் தீரும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்’’ என்றார்.

டோல்கேட் கட்டண வசூலை தமிழகத்திலும் தடைசெய்ய வேண்டும் என்று பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்ப ஆரம்பித்துள்ளன. பலர் போராட்டக் களத்திலும் குதித்தனர். அந்த மாதியான போராட்டத்தில் 4 ஆயிரம் தமிழ் மாநில காங்கிரஸார் கைதானார்கள்.

(அடுத்த இதழில்)


இரும்பு கேட் போட்ட கிராமத்தினர்!

எட்டூர்வட்டம் கிராமத்தினர் வேறுவிதமான ஒரு பிரச்னையை சந்தித்தனர்.

“டோல்கேட்டில் பணம் கட்டாமல் தப்பிக்க, எங்கள் கிராமம் வழியாக ஒரு கி.மீ தூரம் உள்ள மேட்டமலைக்கு வாகனங்கள் எல்லாம் செல்லத்தொடங்கின. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றாலைகள் அமைப்பதற்கான பெரிய உபகரணங்களை ஏற்றிச்செல்லும் நீண்ட கனரக லாரிகள்கூட இந்த வழியாகச் செல்லத்தொடங்கின. அதிவேகமாக லாரிகள் வருவதால், தெருக்களில் குழந்தைகள் விளையாட முடியாத சூழலும், குழாய்களில் பெண்கள் தண்ணீர் பிடித்து பாதுகாப்பாக வீட்டுக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், கிராமத்தின் நுழைவாயிலில் இரும்பு கேட் அமைத்தோம். அதன் பிறகுதான், எங்களுக்கு நிம்மதி திரும்பியது” என்றார், எட்டூர்வட்டத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி.

ஸ்மார்ட் கார்டு வருமா?

லாரிகளுக்கு ‘ஒரு முறை டோல்கேட் கட்டணம்’ என்கிற திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிவருகின்றனர். அதேபோல, இந்தியா முழுவதையும் இணைக்கும் டோல் சாலைகளில் ஸ்மார்ட் கார்டு திட்ட முறையை அமல்படுத்த வேண்டும். அதன்மூலம், இதுவரை வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி கொள்ளை லாபம் ஈட்டுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள், லாரி உரிமையாளர்கள். ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அரசு அமல்படுத்துமா?

வழிகாட்டும் கேரளா!

கேரளாவில் டோல்கேட் எண்ணிக்கை குறைவு. அங்கு, டோல்கேட் கட்டணங்களை அரசே வசூலிக்கிறது. காருக்கு 5 ரூபாய், லாரிகளுக்கு 7 ரூபாய் என கட்டணம் பெறப்படுகிறது. மதுவிலக்கில் மட்டுமின்றி, டோல்கேட் விவகாரத்திலும் கேரளாவின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது என்றும், டோல்கேட் விவகாரத்தில் கேரளாவை பின்பற்றி மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick