குமரியில் தொடக்கப்புள்ளி... தேர்தலில் முற்றுப்புள்ளி!

ஸ்டாலின் பிரசாரம்

ன்னைத் தானே நம்பி தனிப்பயணம் தொடங்கிவிட்டார் ஸ்டாலின்!

தி.மு.க பொருளாளர் ஸ்டாலினின் பிரசாரப் பயணம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ‘நமக்கு நாமே’ லோகோவை அறிமுகம் செய்து பேசினார் அவர்.

‘முடியட்டும் விடியட்டும்’, ‘நமக்கு நாமே’ பயணம். எல்.இ.டி டிவி பொருத்தப்பட்ட வாகனத்தில், 25 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அதில் விவசாயம், தண்ணீர், மது, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு தி.மு.க ஆட்சியின் சாதனைகளை சொல்லி இருக்கிறார்கள். இறுதியாக, ‘கோபப்படுங்கள்... கோபப்படுங்கள் அநீதிக்கு எதிராகக் கோபப்படுங்கள்’ என்று ஸ்டாலின் முழக்கமிட்டபடி நடந்து வருகிறார். அத்துடன் அந்தக் குறும்படம் முடிகிறது.

குறும்பட வெளியீட்டுக்குப் பிறகு ஸ்டாலின் மைக் பிடித்தார். ‘‘நேற்றைய தினமே தலைவர் கலைஞரிடமும் பொதுச் செயலாளர் பேராசிரியரிடமும்  நமக்கு நாமே சுற்றுப் பயணத்தை குமரியில் இருந்து தொடங்க, ஆசிபெற்று வந்திருக்கிறேன். உங்களின் ஆதரவையும் எனக்குத் தரவேண்டும். இப்போது அ.தி.மு.க ஆட்சியிலே  சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துவிட்டது, தொழில் வளர்ச்சி இல்லை, உள்கட்டமைப்பு இல்லை... என மக்கள் உணர்ந்துவிட்டார்கள். நமது உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இனி அரசை நம்பிப் பயன் இல்லை. நமக்கு நாம்தான் என்கிற உணர்வு வேண்டும். இனி உங்கள் பயணம் விடியலை நோக்கித்தான். 16-5-2011 அன்று முதல் தமிழகத்தை இருள் சூழ்ந்தது. விவசாயப் பிரச்னை, சட்டம்  - ஒழுங்குப் பிரச்னை, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை... என மக்கள் விரோதப் போக்கு தலை எடுக்கத் தொடங்கியது. எத்தனைக் காலம் இப்படி நடக்கும்? நாமக்கு நாமே பயணம் மூலமாக இந்தப் பயணம் அடியெடுத்து வைக்கப்படுகிறது.

ஆட்டோவில் பயணம், ரோட்டு கடையில் டீ... அடடே ஸ்டாலின்! மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க..

இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட இன்னும் 238 நாட்கள்தான் உள்ளன. இந்தப் பயணம் மக்கள் இயக்கமாக மாறிவிட்டது. அராஜக ஆட்சியை அகற்ற உறுதி எடுத்த இந்த நாளில் அ.தி.மு.க-வின் கவுண்டவுன்  தொடங்கிவிட்டது. இந்த ஆட்சியின் ஓராயிரம் வேதனைகளை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எத்தனையோ தேர்தல்களை தி.மு.க சந்திக்கிறது. சிங்க நடை போட்டு எதிரிகளை சந்தித்தவர்கள் நாம். இப்போது அ.தி.மு.க பணம் சேர்க்கும் நோக்கில் எல்லாவித ஊழல்களையும் கமிஷன்களையும் செய்து சேர்த்த பணத்தைத் தேர்தல் நேரத்தில் மக்களிடமே கொண்டுவருவார்கள். அவர்களுக்கு நீங்கள்தான் பாடம் புகட்ட வேண்டும். அதை நீங்கள் செய்வீர்களா...?

ஆட்டோவில் பயணம், ரோட்டு கடையில் டீ... அடடே ஸ்டாலின்! மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க..

 

சட்ட சபையிலே 110 விதியின் கீழ் படிக்கிற எந்த அறிவிப்பையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை விரட்டி அடிப்பது தி.மு.க தொண்டர்களின் கடமை. ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மிக விரைவிலேயே தி.மு.க ஆட்சி மலரவிருக்கிறது. அ.தி.மு.க-வின் முகத்திரையை கிழிக்கப் புறப்படுங்கள். ஜனநாயகத்தை மீட்டெடுங்கள். அதன் தொடக்கப்புள்ளி இன்று குமரியில் தொடங்குகிறது. முற்றுப்புள்ளி விரைவில் வரும். தமிழகத்தின் துருப்பிடித்த அ.தி.மு.க ஆட்சி முடியட்டும். தி.மு.க ஆட்சி விடியட்டும். இன்று தொடங்குகிற இந்தப் பயணம் திருச்சியில் அக்டோபர் 2-ம் தேதி முதல் கட்டம் முடிகிறது. அதன்பின் இரண்டாவது கட்டம். கிட்டதட்ட ஒரு கோடி பேரை சந்தித்து, அவர்களின் இரண்டு கோடி கரங்களைப் பிடித்துப் பேசப் போகிறேன். முடியட்டும் அ.தி.மு.க.! விடியட்டும் தி.மு.க’’ என்று பேசினார்.

அதன்பின் ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் டி.ஐ.ஜி ஜான்சன் நிக்கல்சன் தி.மு.க-வில் இணைந்தார். உடுப்பி ஹோட்டலில் அர்ச்சகர்கள் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். கிறிஸ்தவ பேராயர் தேவகடாட்சத்தையும் கத்தோலிக்க குமரி மாவட்ட ஆயர்களான பீட்டர் ரெமீஜியஸ், மார் இராஜேந்திரன், மார் பவுலோஸ், பெந்தேகோஸ்தே கூட்டமைப்பு தலைவர் போதகர் தேவசுந்தரம்  மற்றும் குமரி மாவட்ட முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஊர் ஊராய் போய் மக்களது எண்ணங்களைக் கேட்பதுதான் ஸ்டாலினின் திட்டம். அவரோடு உளவுத் துறையும் பின்தொடர்ந்து வருகிறது.

- த.ராம், படங்கள்: ரா.ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick