குடும்பத்துக்குள் சர்வே நடத்த ஸ்டாலின் தயாரா?

சவால் விடும் முல்லைவேந்தன்

1996 சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை தோற்கடித்ததில் முக்கியப் பங்காற்றியவர், தி.மு.க-வின் ஒருங்கிணைந்த தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்த முல்லைவேந்தன். அதற்காக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அங்கீகரித்தது தி.மு.க. தலைமை. அதே முல்லைவேந்தன் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது தே.மு.தி.க-வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

முல்லைவேந்தனை சந்தித்தோம். தே.மு.தி.க-வில் இணைந்த பிறகும், அவரது விரலில் இன்னும் கருணாநிதி கையெழுத்துடன் கூடிய மோதிரம் மின்னிக்கொண்டிருக்கிறது.

“தே.மு.தி.க-வில் இணைந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

“1967-க்கு முன்பு தி.மு.க-வில் இளைஞர்கள் கொள்கைத் துடிப்புடன் எப்படி இருந்தார்களோ, அதுபோல தே.மு.தி.க உள்ளது. சாதி அரசியலை பா.ம.க வெளிப்படையாகச் செய்கிறது என்றால், தி.மு.க-வோ அதை மறைமுகமாகச் செய்கிறது. தே.மு.தி.க-வில் சேர்ந்த பிறகு, சமத்துவபுரத்தில் இருப்பதைப்போல நான் உணர்கிறேன்.”

 “ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க-வின் வாக்கு வங்கி குறைந்துவருகிறது. எந்த நம்பிக்கையில் இந்தக் கட்சியில் இணைந்தீர்கள்?”

“எல்லா கட்சிகளுக்குமே வாக்கு வங்கியில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது சகஜம். கூட்டணி, பிரசார பலம், வேட்பாளர் தகுதி என அதற்குப் பல காரணங்கள் உண்டு.”

 “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் சரியாகப் பணியாற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டதே?”

“ஸ்டாலினும், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட ஆட்களும்தான் அப்படிச் சொல்கிறார்கள். எனக்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டபோதிலும், நான் எவ்வளவு தீவிரமாகப் தேர்தல் பணி ஆற்றினேன் என்பது கலைஞருக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.”

“கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட பலர் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டார்கள். நீங்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை?”

“நான் ஏன் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? மாவட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத செல்வகணபதியை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்கள். ஓர் ஊழல் குற்றவாளியைப் பொறுப்பாளராக நியமித்தால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள்? தோல்விக்குக் காரணமான செல்வகணபதியை ஸ்டாலின் ஏன் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை?”

“2003-ல் சிறையில் நீங்கள் தாக்கப்பட்டபோது, சேலம் வந்து உங்களிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனார் ஸ்டாலின். பிறகு எப்படி உங்களுக்குள் பகைமை உண்டானது?”

“ஸ்டாலினுடன் இருக்கும் ஜால்ரா கும்பல்தான் அதற்குக் காரணம். அவருடன் சுற்றிக்கொண்டிருக்கும் எ.வ.வேலு, செல்வகணபதி போன்றவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துகிறார்கள். தொண்டர்கள் செல்வாக்கு பெற்ற என்னைப் போன்ற நிர்வாகிகளை இவர்கள் வளரவிடுவதே இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், ‘ஆமாஞ்சாமி’ போடக்கூடிய டம்மி ஆட்களை மட்டுமே இவர்கள் ஆதரிக்கிறார்கள்.  கன்னியாகுமரி முதல் கோபாலபுரம் வரை உள்ள தி.மு.க. தொண்டர்களின் குமுறல் இது.”

“முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் கருணா​நிதியை ஸ்டாலின் முந்துவதாகக் கருத்துக்கணிப்பு​ வந்துள்ளதே?”

“ஸ்டாலினை முன்னிலைப்படுவதற்காக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அது. கலைஞரைவிட செல்வாக்கான மனிதர் தமிழகத்தில் யாருமில்லாதபோது, எந்தத் தகுதியில் கலைஞரை ஸ்டாலின் மிஞ்சிவிட்டார்? யாருக்குச் செல்வாக்கு என்பதை முதலில் கட்சிக்கு உள்ளேயும், குடும்பத்துக்கு உள்ளேயும் கருத்துக்கணிப்புகளை ஸ்டாலின் நடத்தட்டும். யாருக்கு செல்வாக்கு என்று அப்போது தெரியும். அதற்கு ஸ்டாலின் தயாரா?”

“வரும் தேர்தலில் தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்தால் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?”

“ஸ்டாலின் வேண்டுமானால் கூட்டணி தர்மத்தை மீறலாம். நான் மீறமாட்டேன். கேப்டன் என்ன முடிவெடுத்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு செயல்படுவேன்.”

“தி.மு.க-வில் இருந்த வரைக்கும் அழகிரி ஆதரவாளர் என்று உங்களைச் சொன்னார்கள்.  கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருடன் பேசினீர்களா? அழகிரியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?”

“என் மகள் திருமணத்துக்கு ஸ்டாலினை நேரில் அழைத்தேன். அவர் வரவில்லை. ஆனால், நேரில் சென்று அழைப்பிதழ் வைக்காமலேயே, நட்பின் அடிப்படையில் வந்து திருமணத்தைச் சிறப்பித்தார் அழகிரி. இதனால் என்னை அழகிரி ஆதரவாளர் என்று கூறி ஓரம்கட்டுவது எந்த வகையில் நியாயம்? அழகிரிக்குத் தெரிந்த நாகரிகம் அடுத்த தலைவர் என்று கூறிக்கொள்பவருக்கு இல்லையே! அழகிரி அரசியல் செய்யும் மதுரையில், அவருக்குப் போட்டியாக சிலரை தூண்டிவிட்டதுதான் அவருக்கு வருத்தம். அவர் என்றுமே தி.மு.க-வின் தொண்டர்தான். ‘விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போபவர் விட்டுக்கொடுப்பதில்லை’ என்ற அண்ணாவின் பொன்மொழியை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.”

- ஆ.நந்தகுமார், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick