ஸ்டாலினை நெருங்கும் போலீஸ்!

‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் ‘அட்டாக்’ பாண்டி அரஸ்ட் செய்யப்பட்டிருப்பது, தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளுக்கு திகிலை கிளப்பியிருக்கிறது. ‘நமக்கு நாமே’  நிகழ்ச்சிக்காக ஸ்டாலின் மதுரைக்கு வருகிறார். இந்த நேரத்தில் ஸ்டாலின் பெயரை வழக்கில் சேர்த்துவிட்டால் அவருடைய சுற்றுப்பயணமே ‘கொலாப்ஸ்’ ஆகிவிடுமோ என்று தி.மு.க-வினர் அஞ்சுகிறார்கள். 

‘‘என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பயன்படுத்தவும் செய்யலாம், பலிகடாவும் ஆக்கலாம்’’ - ஒரு மாதத்துக்கு முன்பு ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் ‘அட்டாக்’ பாண்டி சொன்ன வார்த்தைகள் இவை. ‘அட்டாக்’ பாண்டி கைதுக்குப் பிறகு நடக்கும் ‘மூவ்’ அனைத்தும் அவர் சொன்னது போலவே நடக்கிறது.

‘பொட்டு’ சுரேஷ் படுகொலை தொடங்கி ‘அட்டாக்’ பாண்டியின் கண்ணாமூச்சி ஆட்டம் வரையில், நடந்த அத்தனை விவகாரங்களும் ஜூ.வி. வாசகர்கள் அறிந்தவைதான். ‘வெட்டிப் போடப்பட்ட பொட்டு... அண்ணனை பார்க்க ஏண்டா வந்தே?’ என்ற தலைப்பில் ‘பொட்டு’ சுரேஷ் மரணத்தின் முதல் கவர் ஸ்டோரி, 2013 பிப்ரவரி 6 தேதியிட்ட இதழில் எழுதப்பட்டிருந்தது. அப்போது முதல் இப்போது வரையில் 10 கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘அட்டாக்’ பாண்டி கைதுக்குப் பிறகு அழகிரியையோ, ஸ்டாலினையோ காக்கிகள் குறிவைத்துள்ளன என்று செய்திகள் ரவுண்ட் கட்டுகின்றன. ‘அட்டாக்’ பாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, யாரை அவர் கைகாட்டுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான விடை, பழைய ஜூ.வி. இதழ்களைப் புரட்டினால் தெரியும். ‘பொட்டு’ கொலைக்குப் பிறகு எழுதப்பட்ட கட்டுரைகளில் இருந்து கொஞ்சம் ஃபிளாஷ்பேக்... 

ஜூ.வி-யில் வெளியான தகவல்கள்!

சென்னை பாண்டி பஜார் ஹோட்டல் ஒன்றில் நடந்த சந்திப்புதான் கொலைக்கு மையப்புள்ளி என்பது பற்றி, 2013 பிப்ரவரி 20-ம் தேதி இதழில் ‘பொட்டு மர்டர்... மதுரை கொலைக்கு சென்னையில் பிளான்?’ என்ற தலைப்பில் சொல்லியிருந்தோம். அதன்பிறகு, 2013 பிப்ரவரி 24-ம் தேதி இதழில் ‘ஆபத்தில் அழகிரி மகன்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில், ‘பொட்டு சுரேஷ் கொலையில் அழகிரி வட்டாரத்தை அதிரவைக்க போலீஸ் ஸ்கெட்ச் போடுகிறது. ‘பொட்டு’ கொலைக்கு பாண்டி பஜார் ஹோட்டலில் சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீஸ் கையில் படபடக்கிறது’ என எழுதியிருந்தோம். ‘அழகிரியிடம் ‘அட்டாக்’ கேட்ட 5 சத்தியங்கள்! விஜயபாண்டி வர்ணிக்கும் ஹோட்டல் காட்சிகள்’ என்ற தலைப்பில் 2013 மார்ச் 3-ம் தேதி இதழில் சொன்ன விஷயங்கள் இவை.

‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் முதலில் 7 பேர் சரண் அடைந்தனர். அதன்பிறகு சேலத்தில் ‘அட்டாக்’ பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியும், ஆரோக்கிய பிரபுவும் சரண் அடைந்ததே வழக்கின் திருப்புமுனையாக மாறியது. வழக்கின் மையப்புள்ளியான விஜயபாண்டியும் ஆரோக்கிய பிரபுவும் போலீஸ் கஸ்டடியில் கொட்டிய வாக்குமூலம்தான் வழக்கையே அதிர வைத்தது. ‘‘2013 ஜனவரி முதல் வாரத்தில் பாண்டி பஜார் ஹோட்டலில் அழகிரியையும் அவரது மகன் துரை தயாநிதியையும் ‘அட்டாக்’ பாண்டி சந்தித்தார். ‘பொட்டுவால் எங்களுக்குப் பெரிய தலைவலி. குடும்பத்துக்கும் தொந்தரவு’ என்று அழகிரி சொன்னதாக ‘அட்டாக்’ எங்களிடம் சொன்னார்’’ என வாக்குமூலம் கொடுத்தார்கள். இந்த ஹோட்டல் சந்திப்புக்குப் பிறகுதான் ஜனவரி 31-ம் தேதி திடீரென ‘பொட்டு’ சுரேஷ் கொலை செய்யப்​பட்டார்.

‘ஸ்டாலினுக்கு சம்மன்? உடன் இருந்தார் டி.ஆர்.பாலு... அழைத்துச் சென்றார் மா.சு... சென்னைக்கு நகரும் மதுரை கொலை’ என்ற தலைப்பில் 2013 மார்ச் 13-ம் தேதி இதழில் விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு அளித்த வாக்குமூலம் விரிவாக வெளியிடப்பட்டது. ‘‘மாமாவோட வளர்ச்சியை ‘பொட்டு’ சுரேஷால் ஜீரணிக்க முடியலை. ஜெயம் ஃபைனான்ஸ் பிரச்னையில் தேவையில்லாம சிக்கவெச்சு, மாமாவை ஊர் ஊரா ஓட வெச்சாரு. இதை வெச்சே, மாமாவோட ‘மண்டல வேளாண் விற்பனைக் குழுத் தலைவர்’ பதவியையும் பறிச்சிட்டாரு. அதுக்குப் பிறகும் நிம்மதியா இருக்கவிடவில்லை. அதனால மாமா ரொம்ப நொந்துட்டார். மாமாவைப் போட்டுத்தள்ள ‘பொட்டு’ சுரேஷ் ஏற்பாடு செஞ்ச தகவல் வந்தது. இதற்கிடையே, வி.கே.குருசாமி தரப்பினர் மு.க.ஸ்டாலின் அணிக்கு வந்துவிடும்படி மாமாவுக்குத் தூது விட்டாங்க. ‘‘முரசொலியில் ‘பொட்டு’ விளம்பரம் குடுத்திருக்கான் பாத்தியா? இப்ப நீ தொண்டர் அணியில இருக்கே. அந்த பதவியையாச்சும் காப்பாத்திக்க’’ என்று அவர்கள் சொன்னார்கள். மாமாவும் ஏத்துக்கிட்டார். அதன்படி, 23.12.12 அன்று மாமாவுடன் வி.கே.குருசாமி, அவரது மகன் மணி, மருமகன் முகேஷ் சர்மாவுடன் நான், ஆரோக்கிய பிரபு, சந்தானம் ஆகியோர் சென்னைக்குப் போனோம். அதன்பிறகு சில நாட்கள் கழித்து முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனோடு ஸ்டாலின் வீட்டுக்கே போய் அவரைப் பார்த்தோம். அப்ப டி.ஆர்.பாலுவும் இருந்தார். இந்த விஷயம் தெரிஞ்சதும் துரை தயாநிதி, மாமாவிடம் பேசினார். ‘எதுக்காக நீ அங்க போய்ச் சேர்ந்தே?’ என்று துரை கேட்டாரு. ‘இத்தனை வருஷமா நான் உங்களுக்கு விசுவாசமா இருந்தேன். ஆனா, இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறோம். ‘பொட்டு’ என்னை ஓட ஓட விரட்டுனான். யாராச்சும் ஏதாச்சும் கேட்டீங்களா? இதைப்பத்தி அண்ணன்கிட்ட பேசணும்னு கெஞ்சினப்ப, நீங்க கண்டுக்கலை. அதனால நான் போயிட்டேன். இப்பகூடப் பாருங்க முரசொலியில ‘பொட்டு’ விளம்பரம் கொடுத்திருக்கான். நீங்க இடம் கொடுக்காமலா, இதெல்லாம் நடக்குது? நீங்க என்னைய விட்டுருங்க. நான் போயிக்கிறேன்’ என்று மாமா சொன்னார். ‘நீ வருத்தப்படாத. அப்பாகிட்ட நான் பேசுறேன். 4-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு சென்னை ரெஸிடென்ஸி ஹோட்டலுக்கு வந்துடு. நேர்ல பேசுவோம்’ என்றார்.

அதன்படி ஜனவரி 4-ம் தேதி காலையில் நான், பிரபு, சந்தானம் மூணு பேரும் மாமாவோட பாண்டி பஜார் ஹோட்டலுக்குப் போனோம். நான், பிரபு, சந்தானம் மூணு பேரும் ரிசப்ஷனிலேயே உட்கார்ந்துட்டோம். மாமா மட்டும் லிஃப்ட்டில் ஏறி ஒரு ரூமுக்குப் போனார். ரெண்டு மணி நேரம் கழிச்சு, துரை தயாநிதி மட்டும் லிஃப்ட்ல இறங்கி ஹோட்டல்ல இருந்து வெளியே போனாரு. எங்களைப் பார்க்காத மாதிரியே கடந்துபோயிட்டாரு. அடுத்த 10 நிமிஷத்துல மாமாவும் இறங்கி வந்தாரு. அதுக்கப்புறம் ஹோட்டல்ல என்ன நடந்ததுன்னு மாமா எங்ககிட்ட சொன்னார். ‘உள்ளே அழகிரி அண்ணனும் இருந்தாரு. அண்ணனும் துரையும்தான் என்கிட்ட பேசுனாங்க. ‘பொட்டு சுரேஷுக்கு நீங்கள் முக்கியத்துவம் தரக் கூடாது என்பது உட்பட நான் அஞ்சு கோரிக்கை வெச்சிருக்கேன்’னு சொன்னாரு. ஆனா, சொன்னபடி எதுவும் நடக்கலை. இதுதொடர்பா அட்டாக் மாமாவும் துரை தயாநிதியும் ஏழெட்டு தடவை மாறி மாறி போன்ல பேசிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. கொஞ்ச நாள்ல, ‘ஊருக்குக் கிளம்பிப் போங்க’ன்னு மாமா சொல்லிட்டாரு. நாங்களும் மதுரைக்கு வந்துட்டோம்’’ என வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார்கள்.

இப்படி அழகிரி, துரை தயாநிதி, ஸ்டாலின் என முக்கோண வட்டத்தில் ‘பொட்டு’ கொலை வழக்கு பின்னப்பட்டிருந்தது. ‘அட்டாக்’, ஸ்டாலின் ஆதரவாளராக மாறியது, ஹோட்டலில் அழகிரி மற்றும் துரை தயாநிதியுடன் சந்திப்பு, அதன்பிறகு நடந்த ‘பொட்டு’ கொலை... இந்த மூன்றும் முடிச்சுப் போட்டு வைத்திருந்த காக்கிகள், இப்போது அட்டாக்கை வளைத்ததன் மூலம் வழக்கை ஃக்ளைமாக்ஸுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் உருளப் போவது அழகிரி தலையா, ஸ்டாலின் தலையா, துரை தயாநிதி தலையா எனத் தெரியவில்லை.

தப்பவிடப்படும் ராமகிருஷ்ணன்!

இரண்டரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ‘அட்டாக்’ பாண்டி பற்றியும், ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கு பற்றியும் எழுதி வந்த நிலையில், ‘அட்டாக்’ பாண்டியே ஒரு மாதத்துக்கு முன்பு ஜூ.வி-க்கு போன் செய்தார். ‘பொட்டு சுரேஷ் கொலையில் முக்கியப் புள்ளிக்கும் தொடர்பு. ஜூ.வி-க்கு போன் போட்ட அட்டாக் பாண்டி’ என்ற தலைப்பில் 9.9.15 தேதியிட்ட இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டோம். ‘அட்டாக்’ குறிப்பிட்டிருந்த பெயரை நேரடியாகச் சொல்லாமல் அவரின் பெயரை அப்போது மாற்றியிருந்தோம். அவர் வேறு யாருமல்ல. துரை தயாநிதியின் பி.ஏ-வான ராமகிருஷ்ணன்தான்.

‘‘விஜயபாண்டியையும் ஆரோக்கிய பிரபுவையும் மதுரை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தார்கள். அப்போது ராமகிருஷ்ணனை பற்றி இருவரும் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்கள். நேர்மையான இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி என்பவர் உடனே ராமகிருஷ்ணனை அழைத்து விசாரித்தார். அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது நள்ளிரவு மூன்று மணிக்கு டி.எஸ்.பி-யான கணேசன் என்பவர், இன்ஸ்பெக்டரிடம்  பேசியிருக்கிறார். ‘டி.சி., கமிஷனர் எல்லாம் பிரஷர் கொடுக்குறாங்க. ராமகிருஷ்ணனை உடனே அனுப்பிவிடுங்கள். அவரைத் தொட்டால் பெரிய பிரச்னைகள் வரும்’ எனச் சொல்கிறார். அதன்பிறகு ராமகிருஷ்ணனை எந்த விசாரணையும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். ‘ஹை கமாண்ட் ரெகமென்ட்’ எனச் சொல்லி அவரை விடுவிக்கிறார்கள். ராமகிருஷ்ணனை தொட்டால், பின்னால் என்ன வரும்னு போலீஸுக்குத் தெரியும். ஒருநாள் இரவு முழுவதும் ராமகிருஷ்ணனை ஸ்டேஷனில் வைத்துவிட்டு ஏன் விட்டுவிட்டார்கள்? அதற்கான காரணம் என்ன? விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஸ்டேட்மென்ட்டில் ராமகிருஷ்ணன் பெயர் இருந்தும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்றத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உலகத்துக்குத் தெரிய வேண்டுமா, இல்லையா? இதில் நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். ‘பொட்டு சுரேஷ் இருந்தால் நம்ம ஆட்கள் இருக்க முடியாது’ எனச் சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன். அவர் பேசிய உரையாடல்கள் நம்பர் எல்லாமே போலீஸில் இருக்கிறது. அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒருநாள் இரவு முழுவதும் ராமகிருஷ்ணனை ஜட்டியோடு நிற்கவைத்து விசாரித்தவர்கள், கடைசியில் ஏன் ரிமாண்ட் செய்யாமல் விட்டார்கள்? என்னோட இருந்த என் உறவினர்களை மட்டுமே கைதுசெய்திருக்கிறார்கள். ஏன் மற்றவர்களைப் பிடிக்கவில்லை?” என நமக்கு அளித்த பேட்டியில் சொன்ன அட்டாக், ‘அண்ணன் பி.ஏ-வான பிரபுவை பற்றியும் விரிவாகச் சொல்வேன்’’ எனச் சொல்லியிருந்தார்.

‘பொட்டு’ சுரேஷுக்கும் தனக்குமிருந்த மோட்டிவ்-ஐ வைத்து, தன்னை மட்டும் சிக்கவைத்திருப்பதாகச் சொல்கிறார் ‘அட்டாக்’ பாண்டி. அதாவது, ‘பொட்டு’ சுரேஷுக்கு வெளியில் தெரியாமல் நிறைய எதிரிகள் இருந்திருக்கிறார்கள் என்பதே ‘அட்டாக்’ பாண்டி சொல்ல வந்த கருத்து. ‘அந்தக் கோணத்தில் போலீஸ் ஏன் விசாரணை நடத்தவில்லை?’ என்பதுதான் ‘அட்டாக்’ பாண்டியின் ஆதங்கம்.

ராமகிருஷ்ணன் செல்வாக்கு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வந்தவர் ராமகிருஷ்ணன். எப்படியோ அழகிரி மகன் துரை தயாநிதியின் நட்பு வட்டத்துக்குள் சென்றவர் அப்படியே தன் எல்லையை விரிவுபடுத்தி, துரை தயாநிதிக்கு எல்லாமும் அவர்தான் என்றாகிவிட்டார். பாரம்பர்யமான மதுரை பேட்மின்டன் அசோஸியேஷனில் நுழைக்கப்பட்டு அதன் செயலாளராக ஆனார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அசோஸியேஷனை தன் வசமாக்க போலியான ஆவணங்களைத் தயாரித்தார் என்று தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது. இவர் தம்பிக்கு, அழகிரி சிபாரிசில் அரசு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பதவி வாங்கினார். ராமகிருஷ்ணனுக்கும் ‘பொட்டு’ சுரேஷுக்கும் யார் பெரிய ஆள் என்பது குறித்த தகராறு இருந்தது. ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினால் அந்த விசாரணை துரை தயாநிதி, அடுத்து அழகிரி என்று செல்லும். ‘‘ ‘அட்டாக்’ ஆட்களிடம் ராமகிருஷ்ணன் தொடர்பில் இருந்ததையும் அப்போது நடந்த செல்போன் உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ராமகிருஷ்ணனை மட்டும் போலீஸ் ஏன் காப்பாற்ற நினைக்கிறது?’’ என கேள்வி எழுப்புகிறார்கள் ‘அட்டாக்’கின் நண்பர்கள்.

‘‘யாரும் அழ வேண்டாம்!”

மும்பையில் கைதுசெய்யப்பட்டு ‘அட்டாக்’ பாண்டி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, ‘அட்டாக்’கின் உறவினர்களும் ஆதரவாளர்களும் குவிந்திருந்தனர். ‘அட்டாக்’கின் தாய் ராமுத்தாயும், மனைவி தயாளுவும் கண்ணீர் வழிய காத்துக்கிடந்தனர். மாதக்கணக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளிகளைக் கைதுசெய்தால் எப்படி பிடித்தோம் என்பதை போலீஸ் விலாவாரியாகச் சொல்லும். ஆனால், ‘அட்டாக்’ விஷயத்தில் போலீஸ் மூச்சுவிடவில்லை. முகமூடி போட்டு ‘அட்டாக்’கை அழைத்து வந்தனர். அவரது உறவினர்கள் எல்லோரும் ஒப்பாரி வைத்து அழுதனர். சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். திரும்ப அழைத்துச் சென்றபோது, முகமூடி அணியாமல் அழைத்துச் செல்ல உத்தரவிடுமாறு ‘அட்டாக்’கின் வழக்கறிஞர்கள் முறையிட்டார்கள். அதனால், முகமூடி இல்லாமல் வெளியே வந்தார். உறவுக்கார பையன்கள் எல்லோரும், ‘‘மாமா... மாமா... மாமாவை கொண்டு போகாதீங்க’’ எனக் கோஷமிட்டனர். மனைவியும், தாயும் அழுவதைப் பார்த்த ‘அட்டாக்’, ‘‘யாரும் அழ வேண்டாம்... ஆத்தாவை அழாமல் பார்த்துக்குங்க’’ என்றார்.

 ‘‘என்கவுன்டர் செய்துவிடுவார்கள்!”

மறுநாள் கஸ்டடி பெட்டிஷனை விசாரிக்க கோர்ட்டுக்கு ‘அட்டாக்’கை அழைத்து வந்தார்கள். ‘‘வெளி மாநிலத்துக்கு அழைத்துப்போய் விசாரிக்க வேண்டியிருக்கிறது. 18 சிம்களில் பேசியிருக்கிறார். அதில் யார் யார் தொடர்புகொண்டார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அதனால் 10 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டும்’’ என போலீஸ் கேட்க... அதற்கு சம்மதம் என்றார் ‘அட்டாக்’.

‘அட்டாக்’கின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜா, ‘‘சிம் கார்டில் யாரிடம் பேசினார் என்பதை இங்கிருந்தே கண்டுபிடித்துவிடலாம். இதற்காக வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கேட்பது, அவரை போலி என்கவுன்டரில் கொல்வதற்கு முயற்சிக்கும் செயல்” என்றார். நீதிபதி பால்பாண்டி, வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று சொல்லிவிட்டு, நான்கு நாட்களுக்கு மட்டும் கஸ்டடி எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். ‘அட்டாக்’ பாண்டி மகிழ்ச்சியாகவே இருக்கிறார். போலீஸுக்கும், தமிழக அரசுக்கும் ‘அட்டாக்’ பாண்டி இப்போது தேவைப்படுகிறார். எனவே, ‘அட்டாக்’ பாண்டி நினைத்ததுபோல் எல்லாம் நடக்கும் என்கிறார்கள்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, செ.சல்மான், சே.சின்னதுரை,
அட்டை படம்: எம்.விஜயகுமார்,
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், ராஜாமுருகன், நா.விஜயரகுநாதன்


“தி.மு.க. எங்களை கைவிட்டுவிட்டது”  -  ‘அட்டாக்’ மனைவி பேட்டி

‘அட்டாக்’ பாண்டியை காண நீதிமன்றத்தில் காத்திருந்த அவரது மனைவி தயாளுவிடம் பேசினோம்.

‘‘ ‘பொட்டு’ சுரேஷ் கொலை வழக்கில் உங்கள் கணவரை முக்கியக் குற்றவாளியாக போலீஸ் சேர்த்திருக்கிறதே?’’

‘‘இந்த வழக்கில் தேவையில்லாமல் அவரைச் சேர்த்திருக்கிறார்கள். முழுமையாக இந்த வழக்கை விசாரிக்கவில்லை. இதில் இவரை மட்டும் பலிகடாவாக்கி விட்டார்கள். அவர் 2011-லேயே மதுரையைவிட்டு வெளியூர் போய்விட்டார். ஆனால், போலீஸ் ஏனோ என் கணவரை திட்டமிட்டு இந்த வழக்கில் சேர்த்துவிட்டது.

‘‘போலீஸ் உங்களை டார்ச்சர் செய்ததா?’’

‘‘சொல்ல முடியாத அளவுக்கு டார்ச்சர் செய்தார்கள். விசாரணை என்ற பெயரில் என்னையும் அவருடைய அக்காவையும், எட்டு நாட்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தார்கள். ‘பொட்டு’ சுரேஷ் கார் டிரைவரை மிரட்டினோம் என்று எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள். எங்கள் குடும்பத்தையே படாதபாடுபடுத்தினார்கள். எங்கள் சொத்துகளை முடக்கி கஷ்டப்படுத்தினார்கள். பொய்யான வழக்கால் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்துவிட்டோம். அவர் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளுமே ஜோடிக்கப்பட்டவைதான். உன் கணவருக்கு போன் செய்து சரணடையச் சொல். உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்கிறோம் என்று சில அதிகாரிகள் பேசினார்கள். செய்யாத குற்றத்துக்கு எதற்கு சரணடைய வேண்டும் என்று நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.’’

“ ‘பொட்டு’ சுரேஷ் போலவே உங்கள் கணவரும் தி.மு.க-காரர். கட்சி உங்களுக்கு உதவியதா?’’

“என் கணவரின் குடும்பம் மட்டுமல்ல, என் குடும்பமும் பரம்பரை தி.மு.க. குடும்பம். அதனால்தான் எனக்கு தயாளு என்றும், சகோதரருக்கு கருணாநிதி என்றும் எங்கப்பா பெயர் வைத்தார். அப்படிப்பட்ட எங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்ட பிறகு யாரும் வந்து எட்டிப்பார்க்கவில்லை. ஓர் ஆறுதல்கூட சொல்ல வந்தது இல்லை. கட்சியை வைத்து சம்பாதித்தவர்கள் சுகமாக இருக்கிறார்கள். கட்சிக்காக உழைத்த நாங்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம். கட்சி எங்களை கைவிட்டது. எப்போதும் போலீஸ் எங்களைப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick