காங்கிரஸ் கேட்கும் 50 தொகுதிகள்...

‘வெற்றி கூட்டணி’ என்று சொல்லி அமைக்கப்பட்ட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் சீட் விவகாரத்தில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் கோபாலபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தனர். அன்று நடந்த பேச்சுவார்த்தையில், “காங்கிரஸுக்கு 50 தொகுதிகளாவது வேண்டும்” என்று குலாம் நபி கேட்டாராம். கருணாநிதியோ, “தே.மு.தி.க கூட்டணிக்கு வரும் நிலை உள்ளதால், தொகுதி பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம்” எனச் சொல்லியுள்ளார். ஆனால், கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த தே.மு.தி.க மக்கள் நலக் கூட்டணிக்குப் போய்விட்டது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து குலாம் நபி வரும் தகவல் கடந்த 24-ம் தேதியே கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டது. கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் கோபாலபுரத்தில் 25-ம் தேதி காலை 10 மணிக்கே ஆஜராகிவிட்டனர். ஆனால், நேரம் கடந்தும் ஸ்டாலின் அங்கு வரவில்லை. ஸ்டாலினை அழைத்து வர துரைமுருகன், வேலு, ராசா ஆகியோரை அனுப்பினார். அரை மணிநேரத்தில் ஸ்டாலினை, அவர்கள் அழைத்து வந்தனர்.

குலாம் நபி, இளங்கோவன், தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் ஆகியோர் ஒரே காரில் கோபாலபுரம் வந்தனர். கருணாநிதியும், குலாம் நபியும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். “கை கொடுங்கள்” என புகைப்படக் காரர்கள் சொன்னதற்கு, “பேச்சு வார்த்தையே முடியவில்லை” என்று கைகொடுக்க மறுத்துவிட்டார் கருணாநிதி. வழக்கமாக, முக்கியப் பேச்சுவார்த்தைகளில் கருணாநிதி அருகில் ஸ்டாலின் நிற்பார். இந்த முறை எ.வ.வேலுவும், கனிமொழியும்தான் அங்கு நின்றனர். 

குலாம் நபி, “கடந்த 2011 தேர்தலைப்போல இந்த முறையும் 63 தொகுதிகளை டெல்லி தலைமை எதிர்பார்க்கிறது” என்றாராம். அதற்கு, “அவ்வளவு தொகுதிகளைத் தர முடியாது. 25 தொகுதிகளை ஒதுக்கலாம்” என்று தி.மு.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணியில் நாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி என்று இளங்கோவன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு ஸ்டாலின், “கடந்த தேர்தலில் இருந்த காங்கிரஸ் கட்சியில் பாதிதானே இப்போது உள்ளது. வாசன் இல்லையே” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், 50 தொகுதிகளுக்குக் குறைவாக எங்களால் பெற முடியாது என்று குலாம் நபி கறாராகச் சொல்லியிருக்கிறார்.

“இன்னும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளார்கள். த.மா.கா-கூட வரும் நிலை உள்ளது. அவர்களுக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டிய நிலை வரும்” என்று கருணாநிதி சொல்லியிருக்கிறார். அதை, குலாம் நபி ரசிக்கவில்லையாம். ராகுல் காந்தி, “தொகுதி விவகாரத்தில் நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால், ஒருபோதும் வாசன் இருக்கும் அணியில் நாம் இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நாம் தனித்தே தேர்தலைச் சந்திக்கலாம்” என்று கூறியிருந்தாராம். எனவே, வாசன் வருவார் என்று கருணாநிதி சொன்னவுடன், ‘‘நீங்கள் சொல்லும்  எண்ணிக்கை குறித்து டெல்லியில் பேச வேண்டும்’’ என குலாம் நபி கூறியிருக்கிறார். “இங்கிருந்தே பேசுங்கள்” என கனிமொழி சொல்லியிருக்கிறார். ‘‘உடனே போனில் பேச முடியாது’’ என்ற குலாம், “கூட்டணிக்கு வரவுள்ள கட்சிகளோடு முதலில் எண்ணிக்கையை முடிவு செய்யுங்கள். அடுத்த முறை நாம் பேச்சுவார்த்தையைத் தொடரலாம்” என இருக்கையில் இருந்து எழுந்திருக்கிறார்.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பான பேப்பரை எடுத்துக்கொண்டு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மேலே வந்தார். ஆனால், தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராமலேயே கீழே இறங்கி வந்தார் குலாம் நபி. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி, “தேர்தல் வியூகம் குறித்துப் பேசியுள்ளோம். எண்ணிக்கை குறித்துப் பேசவில்லை” என்று சொல்லிவிட்டு சத்தியமூர்த்தி பவன் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சு நடத்தினார். ‘‘40 தொகுதிகளுக்குக் குறையாமல் வாங்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கறாராகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடம், ‘‘இது தொடர்பாக ராகுல் மற்றும் அகமது படேலிடம் பேசுகிறேன்’’ என்று குலாம் நபி  சொல்லியிருக்கிறார். இந்தக் கூட்டணிக்கு த.மா.கா வந்தால் என்ன செய்வது என்பதையும் டெல்லி தலைமையிடம் தாம் விவாதிப்பதாக குலாம் நபி சொல்லியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் நம்மிடம், “அ.தி.மு.க-வுடன் த.மா.கா போகும் என்று நினைத்தோம். ஆனால், அ.தி.மு.க தரப்பில்  வாசனுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதி தருவதாகச் சொன்னார்களாம். அதனால், வாசன் பார்வை தி.மு.க பக்கம் திரும்பியுள்ளது. அது, இப்போது எங்களுக்குச் சிக்கலாக உள்ளது. எண்ணிக்கை விவகாரத்தில் ஸ்டாலின் கறார் காட்டுகிறார். 35 தொகுதிகள் என்று சொல்லியிருந்தாலே தொகுதிப் பங்கீடு முடிந்திருக்கும். அதையும்கூட அவர்கள் ஏற்கவில்லை” என்று வருத்தமாகச் சொன்னார்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick