“அம்மா தியேட்டர் எல்லாம் சும்மாதான்!”

ம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் வரிசையில் சென்னையில் ‘அம்மா தியேட்டர்’ அமைக்கப்போவதாக அறிவித்து ஓராண்டு ஆகியும் கிணற்றில்போட்ட கல்லாகக் கிடக்கிறது.

சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில், “சென்னையில் அம்மா தியேட்டர்கள் குளிர்சாதன வசதியுடனும் நவீன டெக்னாலஜியுடனும் உருவாக்கி புதிய படங்கள் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும்” எனக் கூறப்பட்டது. இதுகுறித்து அப்போது விளக்கம் அளித்த மேயர் சைதை .துரைசாமி, “சென்னையில் பெரும்பாலான தியேட்டர்கள், வணிக வளாகங்களாக மாறி அதிகக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. எனவே, ஏழை எளிய மக்களுக்காகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். 

தியாகராய நகர், கோடம்பாக்கம், தங்கச்சாலை, புளியந்தோப்பு, வால்டாக்ஸ் ரோடு, பேசின் பிரிட்ஜ், கோட்டூர்புரம், முகப்பேர் இடங்களில் ‘அம்மா தியேட்டர்’ அமைக்க தமிழக அரசின் அனுமதிக் கேட்டு மாநகராட்சி, ஃபைல் அனுப்பியது. அதன்பிறகு, ஓராண்டு கடந்த நிலையில் என்ன ஆனது அம்மா தியேட்டர்?

அம்மா தியேட்டர் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்தோம். தி.நகரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இப்போது மாநகராட்சி பழைய அலுவலகம் உள்ளது. அதுவும், அறிவிக்கப்படாத குப்பைமேடாக இருக்கிறது. அந்த வளாகத்துக்கு உள்ளேயே தி.நகர் எம்.எல்.ஏ அலுவலகம், தீயணைப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றன. புளியந்தோப்பு மாநகராட்சி பழைய அலுவலகத்தில் அம்மா உணவகம், அரசு இ-சேவை மையம், மாநகராட்சி நலவாழ்வு மையம், அங்கன்வாடி மையங்கள் உள்ளன. வள்ளலார் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் காலியாகவே இருக்கிறது. கோடம்பாக்கத்தில் தேர்வான இடம், குப்பை சேகரிக்கும் மையமாக உள்ளது. இந்த இடங்களில் எல்லாம் ‘அம்மா தியேட்டர்’ வருவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.

இதுகுறித்து முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “திட்டங்களின் சாத்தியக்கூறுகள் பற்றி முன்யோசனையே இல்லாமல் சைதை துரைசாமி பேசி வருகிறார். அம்மா வாரச்சந்தை, அம்மா குடிநீர், அம்மா கம்ப்யூட்டர் சென்டர், அம்மா மகளிர் தங்கும் விடுதி என்று நான்கரை ஆண்டுகளில் என்னென்னவோ கலர் கலரான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஒன்றுமே நடக்கவில்லை என்பது சென்னை மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதாவைக் குளிரவைக்க ‘அம்மா தியேட்டர்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். ‘முதலில் 7 இடங்களில் பல அடுக்கு மாளிகை கட்டி, ஷாப்பிங் மால்களை உள்ளடக்கி ஒரே வளாகத்தில் பல தியேட்டர்கள் அமைக்கப்படும்’ என்று சொன்னார். ‘2015 டிசம்பருக்குள் அம்மா தியேட்டர் வந்துவிடும்’ என்று சொன்னார். 2014 பட்ஜெட்டில் அறிவித்த திட்டம், அறிவித்த இடத்திலேயே நிற்கிறது. தியேட்டர் கட்டுவதற்கான பூர்வாங்க வேலைகள்கூட நடக்கவில்லை. அம்மா தியேட்டர் திட்டம் எல்லாம் சும்மாதான். ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி பூச்சாண்டி காட்டும் வேலைதான் நடக்கிறது” என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், “கொசு ஒழிப்பு, சுகாதாரம், குடிநீர்  என்று மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதே மாநகராட்சியின் முக்கிய வேலை. அதை விட்டுவிட்டு ஜெயலலிதாவின் புகழ்பாடும் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. தியேட்டர் கட்டுவது மாநகராட்சியின் தலையாயப் பணியா?... இருந்தாலும் அறிவித்துவிட்டோமே என்று அதை நிறைவேற்ற முயற்சி எடுக்காதது வேதனை அளிக்கிறது. அம்மா தியேட்டர் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு” என்றார்.

மேயர் சைதை துரைசாமியிடம் பேசினோம். “இந்தத் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி பில்டிங்ஸ் செயற்பொறியாளர் முருகனிடம் விவரம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று அவரின் செல்போன் எண்ணையும் கொடுத்தார். மாநகராட்சி பில்டிங்ஸ் செயற்பொறியாளர் முருகன், “இடங்களை ஆய்வுசெய்து தியேட்டர் அமைக்கும் சாத்தியக்கூறுகளை உறுதி செய்துதான் ‘அம்மா தியேட்டர்’ திட்டம் உருவாகியது. தியேட்டர் அமைக்க கன்சல்டன்ஸி மூலம் ஆய்வுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டம் நிறைவேற்றப்படும்” என்று சொன்னார்.

அம்மா தியேட்டர் வரும்... ஆனா வராது!

- எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.மகேஷ்
படங்கள்: ப.சரவணகுமார், மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick