"சமுதாயத்தை மாற்றும் ஆயுதம் வாக்குரிமை!"

‘நம் விரல்... நம் குரல்!’ கருத்தரங்கம்

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் இணைந்து நடத்தும் ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வுக் கருத்தரங்கம், காரைக்குடி அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வேல்மணிராஜன், சிவகங்கை சார் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், துணை கலெக்டர் சண்முகம்  ஆகியோர் பேசினர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இதேபோன்று கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கூடுதல் கலெக்டர் ரோஹிணி ராம்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இரண்டு கல்லூரிகளிலும் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். கருத்தரங்கில், தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து மாணவ - மாணவிகளிடையே பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

காரைக்குடி

காரைக்குடி உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், “புதிய வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும். எந்தவொரு உரிமையையும்விட வாக்களிக்கும் உரிமையை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும். பார்வையாளராக இருந்து அரசியலை விமர்சிப்பதைவிட, தேர்தல் நாளன்று வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

சரவணக்குமார் என்ற மாணவர், ‘‘சாதாரணமாகக் கல்லூரித் தேர்தலில் 50 சதவிகிதம் பேர் வாக்களிக்கும்போது 30 சதவிகிதம் பேர் வாக்குப் பெற்றவர் வெற்றி பெற்றுவிடுகிறார். வாக்களிக்காத 50 சதவிகிதத்தையும் கூட்டிப் பார்த்தால், 70 சதவிகிதம் பேருக்கு பிடிக்காதவர்தான் வெற்றி பெற்றவராகிறார். இது எப்படிச் சரியாகும்? இதை மாற்ற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள 100 சதவிகிதம் பேரும் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க முடியும்’’ என்றார்.

கார்த்திகை செல்வி என்ற மாணவி, ‘‘அச்சமில்லாத, அடிமைப்படுத்தாத, லஞ்சம் வாங்காதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம். புதிய விடியலில் புதிய வாழ்வு மலர அனைவரும் ஓட்டு போடவேண்டும்’’ என்றார்.

ராஜேஸ்வரி என்ற மாணவி, ‘‘பொதுச் சொத்துக்களைக் கொள்ளை அடிக்காதவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சாதி, மதம், மொழியின் பேரால் வாக்குக் கேட்போரை ஒதுக்கி வைப்போம்’’ என்று வலியுறுத்தினார்.  சுமதி என்ற மாணவி, ‘‘நோட்டு வாங்கி ஓட்டு போடுபவர்கள் ஓட்டு போட்டு முடித்ததும் செல்லாக்காசாகி விடுகின்றனர். எதற்கும் ஆசைப்படாமல் மனசாட்சியோடு ஓட்டு போடுவோம்’’ என்றார்.

அபிராமி என்ற மாணவி, ‘‘நாட்டின் குடிமகன் என்ற ஒரே தகுதிக்காக வாக்களிக்கும் உரிமையை அரசியல் சட்டம் நமக்கு வரமாகத் தந்துள்ளது. வாக்கு என்னும் ஒற்றை ஆயுதத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் நல்ல மாற்றத்தைத் தருவோம்’’ என்றார்.

பார்த்திபன் என்ற மாணவன், ‘‘ஏப்ரல் முதல் நாளில் மட்டும்தான் முட்டாளாக்கப்படுவோம். ஆனால், தேர்தல் நாளன்று சரியான நபருக்கு நாம் வாக்களிக்கத் தவறினால் ஐந்து வருடங்களுக்கு நாம் ஏமாற்றப்படுவோம் என்பதை உணரவேண்டும்’’ என்றார்.

மதுரை

மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், ‘‘மே 16-ம் தேதி வாக்குப்பதிவின்போது, 100 சதவிகிதம் அனைவரும் ஜனநாயகக் கடமை ஆற்றும் சாதனையை மதுரை மாநகரம் அடையவேண்டும். நாட்டின் ஜனநாயகம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமெனில், ஒவ்வொருவரும் வாக்களிப்பது அவசியம். மாணவர்களில் பலர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளீர்கள். இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நாட்டின் தலைவர்களைத் தீர்மானிக்கும் தகுதி உங்களிடம் உள்ளது. இளமையும், வேகமும், ஆற்றலும் நிறைந்த உங்கள் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது. வாக்களிப்பது உங்கள் கடமை என்பதைவிட அது உங்கள் உரிமை. உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுத்தராதீர்கள்.

உங்கள் வாக்குகள், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும். எவ்வித சமாதானத்துக்கும் இடமளிக்காமல் உங்கள் வாக்கினைப் பதிவுசெய்தல் வேண்டும். மாணவர்கள் அனைவரும் வாக்களர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் ெபயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற நவீன உலகத்தின் பிள்ளைகளான நீங்கள் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

கூடுதல் கலெக்டர் ரோஹிணி ராம்தாஸ், “மே 16 அன்று வாக்களிப்பது மட்டுமே நமது முக்கியக் கடமையாக இருக்கவேண்டும், அது நமது உரிமையும்கூட. இளைஞர்களாகிய நீங்கள் இதை உணரவேண்டும். உங்கள் நுனி விரலில் உலகமே இருக்கிறது. செல்போன் இல்லாமல் யாரும் இல்லை. அதில் ஏகப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள் வைத்திருப்பீர்கள். அதனுடன் TN ELECTIONS என்ற மொபைல் ஆப் ஒவ்வொரு வாக்காளருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார். 

திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், ‘‘அனைத்து உரிமைகளும் இருப்பதாகக் கூறப்படும் அமெரிக்காவில் 1920-லிருந்து தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அப்போது கறுப்பின மக்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கவில்லை. 1964-ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் கறுப்பின விடுதலைக்காகப் போராடிய பின்னர்தான் கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால், நம் நாட்டில் சுதந்திரத்துக்குப் பின் பாகுபாடு இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. நம் எல்லோருக்கும் வெவ்வேறு அடையாளங்கள் இருக்கும். ஆனால், நம் அனைவருக்கும் பொதுவான ஓர் ஒற்றை அடையாளம் உண்டு. அது இந்தியன் என்ற அடையாளம். அந்த ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய நாள் மே 16. 

சுதந்திரத்துக்கு முன்பு வரி கட்டுபவர்கள், ஐ.சி.எஸ் படித்தவர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. சாதி, மதம் என்ற பேதத்தை மாற்றும் ஆயுதமாக வாக்குரிமையைப் போராடி வாங்கிக்கொடுத்தார் அம்பேத்கர். சமுதாயத்தை மாற்றும் ஆயுதம் வாக்குரிமை.

இந்த ஒரு சிந்தனை இருந்தாலே போதும் நாமும், நம் வாக்குரிமையும் விலைபோகாது. பெரும் மழையும் வெள்ளமும் சென்னை நகரத்தை ஒரே வீச்சில் சுத்தம் செய்துவிட்டுச் சென்றது. அதுபோல, இலவசம் என்னும் அழுக்குகளை இளைஞர் வெள்ளம் சீறிப்பாய்ந்து அழித்து, நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்’’ என்றார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், செ.சல்மான், மு.ராகினி ஆத்ம வெண்டி
படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick