பதவிகள் வழங்க பணம் வாங்கினாரா முக்கூர்?

வாட்ஸ்அப் விறுவிறு!

ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன் ஆகியோரைப்போல, அமைச்சராகப் பதவி ஏற்றதுடன் அந்தத் துறையை, தொடர்ச்சியாகக் கையில் வைத்திருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன்தான். இப்போது முக்கூர் சுப்பிரமணியன் மீது அ.தி.மு.க-வினர், கட்சி மேலிடத்துக்குப் புகார் பட்டியல் அனுப்ப ஆரம்பித்துள்ளனர். வாட்ஸ்அப் ஆடியோக்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

முக்கூர் சுப்பிரமணியன் செய்யாறு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். 2012-ம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பதவி பறிக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கூர் சுப்பிரமணியனுக்கு அடித்தது யோகம். தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம்தான். பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். வாட்ஸ்அப் ஆடியோக்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள்தான் இவை.

அமைச்சர் ஆனவுடன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக முக்கூர் ஒரு திட்டம் போட்டார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நகர, ஒன்றியச் செயலாளர்களை லெட்டர் பேடுடன் வரும்படி அழைத்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த லெட்டர் பேடில், மா.செயலாளர் தூசி.மோகன் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அதில் நிர்வாகிகளைக் கையெழுத்துப்போடும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

அமைச்சர் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல், அதில் கட்சி நிர்வாகிகள் கையெழுத்துப் போட்டனர். அந்தக் கடிதங்களைக் கட்சி நிர்வாகிகள் பெயரில் மேலிடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் தூசி.மோகனின் பதவி காலியானது. அந்த இடத்துக்கு முக்கூர் வந்தார். வந்தவாசி தொகுதிச்செயலாளர் ஒருவரின் மனைவி மற்றும் அவரது தம்பிக்கு முக்கூர் சுப்பிரமணியன் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவில் பொறுப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். இதற்காக அந்தத் தொகுதிச் செயலாளரிடம் இருந்து ஸ்கார்பியோ காரை பரிசாகப் பெற்றிருக்கிறாராம். இப்போது திருவண்ணாமலை வடக்கு எம்.ஜி.ஆர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் பெரும் தொகை வாங்கிக்கொண்டுதான் அந்தப் பதவியை வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

எம்.ஜி.ஆர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நபர், திருவண்ணா மலை வடக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி யுடன் தொடர்பில் இருக்கிறாராம். தி.மு.க நிர்வாகியுடன் தொடர்பில் இருக்கும் ஒருவருக்கு முக்கூர் பதவி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். முக்கூரின் ஆட்கள் பலர் லோக்கல் தி.மு.க நிர்வாகி ஒருவருடன் இணைந்து ஒரு பொதுவான பெயரில் பொதுப்பணித் துறை ஒப்பந்தப் பணிகள் செய்து வருகிறார்களாம். முக்கூர் சொன்னபடி முக்கியக் கட்சி நிர்வாகி ஒருவரிடம் செட்டில்மென்ட் செய்துவிட்டு வந்தால்தான் மாவட்டத்தில் பதவி கிடைக்கிறதாம்.

2013-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்யாறு அருகே உள்ள திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலுக்கு 250 கிலோ எடையுள்ள 13 அடி உயர வெள்ளித் தேரை முக்கூர் பரிசளித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதாவை முக்கூர் அழைத்திருக்கிறார். அப்போது முக்கூர் தந்த அழைப்பிதழைப் பார்த்து ஜெ. அசந்துவிட்டாராம். அழைப்பிதழைப் பிரித்தவுடன், முருகனைத் துதிக்கும் பாடல் பாடியதாம். அழைப்பிதழின் பிரமாண்டத்தை ரசித்த முதல்வர், “நான் நாடாளுமன்றத் தேர்தலில் பிஸியாக இருக்கிறேன். ஓ.பி.எஸ்-ஐ வரச் சொல்கிறேன்” என்றாராம். இதன் பின்னர்தான் முக்கூருக்கு செல்வாக்குக் கூடியிருக்கிறது என்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் முதல்வரின் பிறந்த நாளின்போது இந்த வெள்ளித் தேரை இழுப்பது முக்கூரின் வழக்கம். 

இதுகுறித்து விளக்கம் கேட்க அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டோம். “நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். நானே உங்கள் லைனில் வருகிறேன்” என்றார்.

சில நிமிடங்கள் கழித்து செய்யாறு தொகுதிச்செயலாளர் கார்த்திகேயன் நம்மைத் தொடர்புகொண்டார். “முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டு முன்னாள் மா.செ பையூர் சந்தானம் என்பவர் வாட்ஸ்அப் ஆடியோவை வெளியிட்டி ருக்கிறார். ஏற்கெனவே இதுகுறித்து  போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறோம். சில நிர்வாகிகளிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை வைத்து பையூர் சந்தானம் பரபரப்பை ஏற்படுத்துகிறார்” என்று கூறினார்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் பையூர் சந்தானத்திடம் பேசினோம். “கட்சிப் பதவிகள் வாங்கிக் கொடுப்பதற்காக முக்கூர் பணம் வாங்கியது உண்மை. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் பேசி அதனைப் பதிவு செய்யும்படி தலைமைக் கழகத்தில் இருந்து ஒருவர் என்னிடம் கூறினார். கட்சி நிர்வாகிகளிடம் பேசுவதற்காகவே ஒரு போன் வாங்கி, அதன்மூலம் பேசி பதிவுசெய்தேன். முக்கூர் பற்றி, சி.எம் செல்லிலும் தலைமைக் கழகத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் எனக்கும் தொடர்பே இல்லை. அவர் சொல்லி எல்லாம் இதுபோல நான் செய்யவில்லை” என்றார்.

தேர்தல்தான் பதில்சொல்ல வேண்டும்.

- கே.பாலசுப்பிரமணி
படம்: கா.முரளி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick