மிஸ்டர் கழுகு: இரண்டும் ஒரே இடத்தில்?

“இன்று போய் நாளை வா - என்ற கதையாக சென்றுகொண்டுள்ளது...  தி.மு.க - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை” என்றபடியே உள்ளே வந்தார் கழுகார். அவருக்கு வழிவிட்டு அமைதியாக இருந்தோம்.

‘‘ஆமாம். இரண்டு தரப்பிலும் இறங்கி வர யோசிப்பதால்தான் இந்த நிலை. சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்ற சிதம்பரமும், தங்கபாலுவும் ராகுலைச் சந்தித்து, ‘50  தொகுதிகளுக்குக் குறைவாக நாம் பெறக் கூடாது’ என்று தூபம் போட்டு வந்துள்ளார்கள். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ராகுல் டெல்லி வந்த இளங்கோவனிடம் இந்த எண்ணிக்கையைச் சொல்லியுள்ளார். இளங்கோவன் நிலைதான் திரிசங்காக உள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி அமையும் என்ற கணக்கில் இருந்த அவருக்கு இப்போது விழுந்த இடைவெளி மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தரப்பு 35  தொகுதிகளுக்கு இறங்கிவந்துள்ளார்கள். நாம் 40 தொகுதிகளுக்குப் பேசினால்கூட முடிந்துவிடும் என்று சொல்லியுள்ளார். ஆனால், ராகுல் அதற்குச் சம்மதிக்கவில்லையாம். இரண்டு நாட்கள் கழித்து தி.மு.க தரப்பில் இருந்து 40 தொகுதிகள் தரலாம் என்று இளங்​கோவனுக்குத் தகவல் வந்துள்ளது. அவர் இந்தத் தகவலை குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2-ம் தேதி குலாம் நபி சென்னை வரலாம் என்று சொல்கிறார்கள். 40 தொகுதிகள் என்றால், அக்ரிமென்ட் முடிந்துவிடும் என்கிறார்கள்.”

‘‘தி.மு.க தரப்பு என்னதான் நினைக்கிறது?”

‘‘தி.மு.க தரப்பில் இறுதியாக 35 தொகுதிகளில் இருந்து 40 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று கருணாநிதி நினைக்கிறாராம். முடிந்த அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறாராம் ஸ்டாலின். இந்த முறை தி.மு.க-வே அதிக தொகுதிகளில் நிற்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதிக தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கும் என்று கணித்த தி.மு.க.,  குலாமுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் த.மா.கா-வும் கூட்டணிக்கு வரும் என்று செக் வைத்து உள்ளார்கள்.”

‘‘த.மா.கா-வைச் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு சம்மதமா?”

‘‘ராகுல் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே காங்கிரஸில் சொல்கிறார்கள். ‘காங்கிரஸுக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவருடன் நாம் சேர்ந்து நிற்கக் கூடாது’ என்று அவர் நினைக்கிறாராம். ஆனால், காங்கிரஸில் இளங்கோவன், திருநாவுக்கரசு போன்றவர்கள் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

‘40 தொகுதிகளை வாங்கிப் போட்டியிடுவதும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தி.மு.க-வைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் நம்முடைய இலக்காக இருக்க முடியும்’ என்று சிலர் சொல்கிறார்கள்.”

‘‘தங்கபாலு, ப.சிதம்பரம் போன்றவர்கள் என்ன நினைக்கி றார்களாம்?”

‘‘இந்தத் தேர்தலில் இளங்கோவன் பதவியை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். அதனால், இளங்​கோவனுக்கு சாதகமான விஷயங்கள் நடந்துவிடாமல் பலரும் பார்த்துக்கொள்கிறார்கள். 40 தொகுதிகள் வாங்கிக் கணிசமான இடங்களில் காங்கிரஸ் வென்று விட்டால் இளங்கோவன் தனது பதவியை நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தக்க வைத்துக்கொள்வார் என்பதுதான் பலரது கடுப்பு. தனியாக நின்றால், என்ன என்று இப்போதே சிலர் ஆலோசனை சொல்கிறார்களாம். அதில், முக்கியமானவர் தங்கபாலு என்கிறார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்