“தீவிரவாதத்துக்குப் பலியான கடைசி உயிராக இருக்கட்டும்!”

உறவினர் கண்ணீர்ப் பேட்டி

மார்ச் 22-ம் தேதி பெல்ஜியத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் பலியான உயிர்களில் ஒரு தமிழரும் உண்டு. அந்த நாட்டுக்குக் கனவுகளைச் சுமந்து சென்ற ராகவேந்திரன் கணேசனின் உடல் இன்று சவப் பெட்டிக்குள் தாயகம் திரும்பியுள்ளது.

கடந்த 22-ம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரஸ்செல்ஸில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. காணாமல் போனது தனது மகன் என்றும் அவரை மீட்டுத் தர  வேண்டும் என்றும் ராகவேந்திரனின் பெற்றோர் மத்திய - மாநில அரசுக்குக்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

ராகவேந்திரனின் தாயாரைத் தொடர்பு கொண்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆறுதல் தெரிவித்தார். தீவிரத் தேடுதல் பணியில் இறங்கிய இந்தியத் தூதரகம், பிரஸ்செல்ஸில் மெட்ரோ ரயிலில் பயணம்  செய்ததும்  குண்டுவெடிப்புக்கு முன் அவர் தொலைபேசி யில் பேசியதையும் தெரிவித்திருந்தது. தன் மகன் உயிருடன் இருக்கிறார், ஆனால் அவர்  நிச்சயம் வருவார் என்று நம்பிய பெற்றோர் உடனடியாக பெல்ஜியம் கிளம்பிச் சென்றனர். ராகவேந்திரன் உயிரிழந்துவிட்டதாக இந்தியத்  தூதரக அதிகாரிகள் பின்னர் அறிவித்தனர். ராகவேந்திரன் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட  நிலையில்,  அவருடைய  பெற்றோர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். அவருடைய மனைவி  வைஷாலியின் அழுகை பார்ப்போரை கண்கலங்க  வைத்தது.

‘‘பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்த ராகவேந்திரன் கணேசன், பள்ளியில் பெஸ்ட் ஸ்டூடண்ட் என்று பெயரெடுத்தவர்.  அனைவரிடமும் அன்பாகப் பழகிய கணேசன், அமைதியை விரும்பக்கூடியவர். திருப்பத்தூரில் பொறியியல் படிப்பை   முடித்த அவர், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குப் பணியமர்த்தப்பட்டார். புனேவில் பணியாற்றிய  அவர் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸில் உள்ள இன்ஃபோசிஸ் கிளைக்குப் பணிக்குச் சென்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் கலந்துவிட்ட போதிலும் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றுவதில் அவர்  எப்போதும் தவறியதில்லை’’ என்றனர் அவரது உறவினர்கள்.

விப்ரோவில் பணிபுரிந்த வைஷாலியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் குழந்தை பிறந்து 40 நாட்கள்தான் ஆகின்றன. பிரசவத்துக்காக வைஷாலி சென்னை வந்தார். ‘‘தீவிரவாதத்துக்குப் பலியான கடைசித் தமிழனின் உயிராக ராகவேந்திரன் கணேசன் இருக்கட்டும்’’ என்றார் ராகவேந்திரனின் அத்தைமகன் ஸ்ரீதரன் ராமமூர்த்தி.

அமைதியை விரும்பக்கூடிய ஓர் அப்பாவியின் உயிர் தீவிரவாதத்துக்குப் பலியாகி உள்ளது.

- கே.புவனேஸ்வரி
படங்கள்: பா.காளிமுத்து


வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு!

வெளிநாடுகளில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் விரைவாக முன்னேறிவிடலாம் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. அவர்களுக்குச் சில டிப்ஸ்.

மத்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற ஏஜென்ஸிகளே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவை. ஒருவேளை, நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு ஏஜென்ஸியை அணுகும்போது, அவர்களிடம் அரசாங்கத்தின் லைசென்ஸ் எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வெப்சைட்டில் பரிசோதித்துக் கொள்ளுங்கள். (www.moia.gov.in).

பின், அந்த ஏஜென்ஸிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள், தேவைக்கான டிமாண்ட் லெட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விவரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த லெட்டரை கேட்டுப் பெற்று தெரிந்துகொள்ளுங்கள். அந்த டிமாண்ட் லெட்டரில், வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர், அந்த நாட்டில் பெற்ற லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

        அவசர உதவிக்கு!

டோல் ஃப்ரீ எண்: 1800113090 (இந்தியாவிலிருந்து மட்டுமே அழைக்கலாம்). டோல் ஃப்ரீ எண்: 8000911913 (அரபு நாடுகளிலிருந்து மட்டும் அழைக்கலாம்).

மினிஸ்டரி ஆஃப் ஓவர்சீஸ் இண்டியன் அஃபயர்ஸ் ஹாட்லைன் டெலிபோன் நம்பர் - +9111-40503090 (இதில், எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம். இது கட்டண தொலைபேசி).

- சு.நந்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick