“மனித ஆசைகளின் மீது தேரோட்டும் ஜெயலலிதா!” - பரபர பழ.கருப்பையா

சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 1-ம் தேதி திராவிடர் கழகம் நடத்திய ‘சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’ என்ற கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பழ.கருப்பையா கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க-வை அதிரடியாக விமர்சித்தார் பழ.கருப்பையா. ‘‘ஒரு சிந்தனையாளனின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்றால், பெரியாரின் நூல்களைப் படிக்க வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை எடுத்துவைத்தவர் அவர். அந்தக் காலத்தில் மக்கள் எல்லாம் படிக்காதவர்களாக இருந்தார்கள், தலைவர்கள் எல்லாம் சிந்தனை வாதிகளாக இருந்தார்கள். இந்தக் காலத்தில் மக்கள் எல்லாம் படித்தவர்களாக இருக்கிறார்கள், தலைவர்கள் எல்லாம் மொக்கையாக இருக்கிறார்கள். நாள்தோறும் ஒரு கட்சி முளைக்கிறது. கட்சி ஆரம்பித்த மறுநாளே, முதல்வர் என்று தன்னை அறிவித்துக்கொள்கிற பின்தங்கிய காலத்துக்கு தமிழ்நாடு வந்துவிட்டதே என்ற வருத்தம் தோன்றுகிறது.

அன்று தலைவர்கள் எல்லாம், சிந்தனை ஓட்டத்தை மடைமாற்றம் செய்தனர். இன்றோ என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் பேசுபவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்கள். திராவிட இயக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். திராவிட இயக்கங்கள் ஒழிக்கப்பட்டால், மீண்டும் நாம் சூத்திரர்களாகி விடுவோம். பெரியார் போட்ட பாதையில் இருந்து விலகி தமிழ்நாட்டு அரசியலை யாராலும் கொண்டுபோக முடியாது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போட்டவர் கலைஞர். மதமாற்றம் தடைச்சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அந்தக் கட்சி ஆரிய கட்சியாகத்தான் உள்ளது. திராவிடச் சாயம் பூசிக்கொண்டிருக்கும், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
 
இந்த நாட்டில் உதிரி உதிரியாக இருந்த ஊழலை மையப்படுத்தப்பட்ட ஊழலாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவுக்குத்தான் உண்டு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போல், ஜெயலலிதாவும் 33 மந்திரிகளும் உள்ளார்கள். தேர்தலுக்குப் பின்னும் இந்த ஆட்சி தொடருமானால், தமிழ்நாடு தாங்காது. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதால், அவரை அம்மா என்கின்றனர். மனித ஆசைகளின் மீது தேரோட்டுகிறார் ஜெயலலிதா. அதுதான் அவருடைய வெற்றி. ஒருவனை பதவியில் வைப்பது, மீண்டும் அவனை எடுப்பது, பிறகு மீண்டும் அவனுக்குப் பதவி கொடுப்பது என்பது அவருடைய தந்திரம். மீண்டும் தனக்குப் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் இருப்பவன் அவரை என்றும் எதிர்க்காமலே இருந்துவிடுவான். ஜெயலலிதா எப்படி வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றாரோ, அப்படித்தான் பி.ஆர்.பி-யும் விடுதலை பெற்றுள்ளார். விமர்சனத்தை ஒட்டி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் தலைவராக கருணாநிதி உள்ளார். நான் ஹிட்லரைப்போல ஒரு பெண்மணியை நேரடியாகப் பார்த்தது ஜெயலலிதாவை மட்டும்தான். தனக்குச் சமமாக யாரும் இருக்கக் கூடாது. அனைவரும் தள்ளித்தான் நிற்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்ததுதான் இந்த ஆட்சியின் சீர்கேட்டுக்குக் காரணம்” என்று தனது ஐந்தாண்டு அ.தி.மு.க அனுபவத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், “இந்தத் தேர்தல் பன்முனைத் தேர்தல் போன்ற தோற்றம் இருந்தாலும், அ.தி.மு.க தொடங்கி, அனைத்துக் கட்சிகளும் தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடுதான் உள்ளன. எல்லாக் கூட்டணிக்குள்ளும் அந்த ஓர் ஒற்றுமை மட்டும் உள்ளது. அ.தி.மு.க-வுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பே இல்லை. தி.மு.க-வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைத்துவிடக் கூடாது என்பது பல கட்சிகளின் எண்ணமாக உள்ளது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தது என்று பேசுகிறார்கள். அதற்குப் பதில், ‘அன்றைக்கு ஈழத்தைக் காக்க முடியவில்லை என்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகியது. இன்று தமிழகத்தைக் காப்பற்ற வேண்டுமே என்று கூட்டணி வைத்துள்ளது’ என்பதுதான். அ.தி.மு.க. அரசை நீக்க வேண்டும் என்று கூட்டணி அமைத்ததாகச் சொல்பவர்களின் நோக்கம் உண்மையாக இருக்குமானால், யார் அதை மாற்றக்கூடிய ஆற்றல் உடையவர்களோ அவர்களுக்குத் துணை நிற்பதுதான் முறை” என்றார்.

இறுதியாக உரையாற்றிய கி.வீரமணி “திராவிடக் கட்சியினர் ராமன் ஆட்சி வேண்டாம், சூத்திரர்களைக் காக்கும் ராவணன் ஆட்சி வேண்டும் என்று தயக்கம் இல்லாமல் சொல்பவர்கள் திராவிடர் கழகத்தினர். மத்தியில் மோடியை செல்வாக்காக வைத்திருக்கும் பி.ஜே.பி-யால், இங்கு  கூட்டணி அமைக்க முடியவில்லையே. அதுதான், இந்த மண்ணின் அடிநாதம். திராவிடக் கட்சிகளின் வெற்றி என்பது பெரியாரின் சிந்தனை. தமிழகத்தில் ஆரியர், திராவிடர் போரட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சியில் நிதி, நீதி, நிர்வாகம் அனைத்தும் சீரழிந்துவிட்டன.

பத்திரிகைகள் மிரட்டப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற இந்த நிலை மீண்டும் வேண்டுமா? கொள்ளிக் கட்டையை எடுத்து நாமே தலையில் சொறிந்து கொள்ளவேண்டுமா?” என்றார்.

- அ.சையது அபுதாஹிர்

படம்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்