ஐந்து ஆண்டுகளில் அச்சுறுத்திய விலைவாசி ஏற்றம்!

தி.மு.க அரசின் தவறான அணுகுமுறையால் தமிழக அரசின் ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. எனவே, பால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாமல் போனது” என்று 2011-ல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய நான்கே மாதங்களில் பால் விலையை ஏற்றியதற்கு விளக்கம் தந்தார் ஜெயலலிதா.

பால் விலையைத் தொடர்ந்து மின் கட்டணம், பேருந்து கட்டணங்களையும் உயர்த்தினார்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தைத் திவாலாக்கும் நிலைக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தபடியேதான் இருந்தன.

முந்தைய தி.மு.க அரசு அறிவித்த இலவசத் திட்டங்களைப்போலவே அடுத்துவந்த அ.தி.மு.க அரசும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் என இலவசங்களை வாரி வழங்கியது. ஆனால், தி.மு.க அரசால் ஐந்து ஆண்டுகள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை மட்டும் இவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது வேதனைதான். “ஐந்து ஆண்டுகளில் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன” என்பது மக்களின் புலம்பலாக உள்ளது.

“மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் தாக்கம்தான் மாநில அளவில் பொருட்களின் விலை ஏறக்காரணம்” என்று காரணங்களை அடுக்கினாலும் தமிழகத்தில் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட் கடந்த ஐந்து ஆண்டுகளில் பற்றாக்குறை பட்ஜெட்டாகத்தான் இருந்துவருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாத பட்ஜெட்டில் பாலுக்கு 600 ரூபாய் ஒதுக்கிய குடும்பங்கள், இன்று பாலுக்கு 1,400 ரூபாய் எடுத்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவின் பாலின் விலை முதல் முறையாக ஏற்றம் கண்டது. 17.75 பைசாவாக இருந்த ஒரு லிட்டர் நீல வண்ண ஆவின் பால் பாக்கெட் விலையை ரூ.6.25 உயர்த்தி 24 ரூபாய்க்கு விற்றார்கள். “ஆவின் நிறுவனம் திவாலாகும் நிலையில் உள்ளது. அதேபோல் பால் கொள்முதல் விலையை உயர்த்தி, விவசாயிகளுக்குப் பயன்அளிக்கும் விதத்தில்தான் இந்த விலை ஏற்றம்” என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. ஆவின் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலை உயர்வை அமல்படுத்தின.

அதன் பிறகு 2013-ம் ஆண்டு மீண்டும் தமிழக அரசு பால் விலையை அதிகரித்தது. லிட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்வு என்ற அறிவிப்பு நடுத்தர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், ஆவின் பால் நிறுவனத்தில் எழுந்த அடுக்கடுக்கான முறைகேடு புகார்களால் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த மூர்த்தியின் பதவியே பறிபோனது.

மக்களின் எதிர்ப்பு, எதிர்க் கட்சிகளின் ஓலங்கள் என்று எதையும் கண்டுகொள்ளாமல் விலை ஏற்றத்தில் விடாப்பிடியாக இருந்த அரசு அதைச் செய்தும் முடித்தது. அதன்பின் தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் இஷ்டத்துக்கு விலை ஏற்றத்தை அமல்படுத்தின. பால் விலை ஏற்றத்தைப் பற்றி மக்கள் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, சத்தம் இல்லாமல் மளிகைப் பொருட்களின் விலையும் ‘விர்’ என உயர்ந்துகொண்டே இருந்தன.

ஆண்டுதோறும் சராசரியாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பருப்பு விலை ஏற்றம் கண்டுவந்தது. அதன் உச்சபட்சம்தான் கடந்த 2015-ம் ஆண்டு துவரம் பருப்பு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பக்கத்து நாட்டில் இருந்து பருப்பை இறக்குமதி செய்யும் நிலைக்குச் சென்றது. 2011-ம் ஆண்டு துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு 72 ரூபாய் என்று இருந்தது. அதே பருப்பின் தற்போதைய விலை 140 ரூபாய். கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் கிலோ ஒன்றுக்கு 240 ரூபாய் என்று துவரம் பருப்பின் விலை உயர்ந்தபோது, வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 500 டன் துவரம் பருப்பை, நியாய விலைக் கடைகள் மூலம் கிலோ ரூ.110 என விற்க ஜெயலலிதா உத்தர விட்டார். ஆனால், அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பருப்பு  இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உச்சத்துக்கு சென்ற பருப்பின் விலையால் நடுத்தரக் குடும்பத்தினர் சாம்பாரை அன்னிய உணவுப் பொருளாகப் பார்க்கத் தொடங்கினார்கள். துவரம் பருப்பு மட்டும் அல்ல, உளுந்தின் விலையும் அசுர வேகத்தில் அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 180 ரூபாய் வரை சென்றது. ரேஷன் கடைகளில் இன்றைக்கும் உளுந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. பருப்பு உற்பத்திக் குறைவால்தான், தட்டுப்பாடு என்று அரசு அறிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தனமாக இருந்தது என்று மக்கள் புலம்பினார்கள்.

‘வெங்காயம்’ இந்திய அரசியலுக்கு மட்டும் அல்ல, தமிழக அரசுக்கும் அவ்வப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2013-ம் ஆண்டு வெங்காயம் விலை, கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் என்று ராக்கெட் வேகத்தில் ஏறியது. வெங்காயத்தின் விலை மக்களுக்குக் கண்ணீரை வரவழைத்த ேநரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா “அரசின் பண்ணை பசுமைக் காய்கறிக் கடைகளில் வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும்” என்றார். ஆனால், இதை மக்கள் ரசிக்கவில்லை. ‘‘ஓர் அரசின் கடமை, விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பதே தவிர, குறைந்த விலையில் விற்கும் மார்கெட்டிங் செய்வது அல்ல” என்று எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கனைகளை வீசினார்கள்.

கரும்புக்குப்  போதியவிலை கிடைக்கவில்லை என்று கரும்பு விவசாயிகள் ஒருபுறம் போராடி வருகின்றனர். ஆனால், கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ் சர்க்கரை விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் மிளகு, பூண்டு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்காததன் விளைவு, மிளகு விலை கிலோ ஒன்றுக்கு 350 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது.

அரிசி விலையும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரிசி ரகங்களின் விலையும் திடீர் என்று உயர்ந்தன. கடந்த ஆண்டு தென் மாநிலங்களில் மழைப்பொழிவு போதிய அளவில் இருந்ததால், இந்த ஆண்டு அரிசி விலை குறைந்துள்ளது. ஆனால், பழைய அரிசியின் விலை மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் கூடியுள்ளது.

கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசியின் விலை குறைந்துள்ளது.  ஆன்லைன் வர்த்தகமும், உற்பத்திக் குறைவும்தான் விலை ஏற்றத்துக்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதைச் சீர்செய்ய வேண்டிய அரசு, அதை வேடிக்கை பார்ப்பதும் தவறுதான். 
வர்த்தகர்கள் தரப்பில், “நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன் வணிகர்களைக் கலந்தாலோசனை செய்து, அதன்பின்தான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

ஆனால், இந்த ஆட்சியில் கண்துடைப்பு கூட்டமாகத்தான் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகளையும் வணிகர்களையும் அழைத்து,  பொருட்கள் உற்பத்தி எப்படி இருக்கிறது, விளைச்சலை அதிகரிக்க என்ன செய்யலாம், எந்தப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என ஓர் அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இவை, எதையுமே இந்த அரசாங்கம் செய்யவில்லை. அடிப்படை விலை நிர்ணயம் என்பதே இங்கு கிடையாது. வரிவருவாய் மட்டுமே இந்த அரசாங்கத்தின் குறிக்கோளாக உள்ளது. உத்தேச வரிவிதிப்பு என்று வணிகர்களை மிரட்டி அதிகாரிகள் பலர் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும் நிலைதான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வணிகர் நல வாரியம் என்பது செயல்படவே இல்லை” என்று அதிருப்தி வெளியிட்டனர். 

- அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick