சஸ்பெண்ட் ஆன மகேந்திர பூபதி...

கிறுகிறுக்க வைக்கும் கிரானைட் பின்னணி

மிழகமே அதிரும் அளவுக்குத் தீர்ப்பு வழங்கிய கிரானைட் வழக்கை விசாரித்து வந்த மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவரைப் பற்றி கடந்த ஜூ.வி. இதழில் எழுதி இருந்தோம். அந்த இதழ் வெளியான தினத்தன்று மகேந்திர பூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக பி.ஆர்.பி தரப்பில் கடந்த ஆண்டு மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. அதில், பி.ஆர்.பி-க்கு சாதகமாக மகேந்திர பூபதி தீர்ப்பளித்தார். இவரது நடவடிக்கைகளைக் கவனித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், மகேந்திர பூபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்தனர். அதையெல்லாம் மகேந்திர பூபதி பொருட்படுத்தவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் பி.ஆர்.பி-க்கு சாதகமான தீர்ப்பை அளித்தார். இதுதொடர்பாக, சென்னையில் தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர்.

பின்னர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் பேரில், இரண்டு நாட்களாக மாவட்ட நீதிபதிகள் பஷீர்அகமது, சரவணன் ஆகியோர் மகேந்திர பூபதியிடம் விசாரணை நடத்தினர். மகேந்திர பூபதியிடம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டுள்ளனர். அந்தக் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. வெளியே வந்த அவரது முகம் வாடிப்போய் இருந்தது. மகேந்திர பூபதி தற்காலிகமாக நீக்கப்பட்டு, ஆர்.பாரதிராஜா என்பவர் புதிய மாஜிஸ்திரேட்டாகச் செயல்படுவார் என்று தகவல் வந்தது.  பி.ஆர்.பி. கிரானைட் மோசடிக்கு எதிராக ஆரம்பத்தில் சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஸ்டாலினிடம் பேசினோம். “நான்கு ஆண்டுக ளுக்குமுன் பி.ஆர்.பி. வழக்குத் தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் முறையிட டெல்லி கிளம்பினேன். அந்த நேரத்தில், மேலூரில் பொய் வழக்குப் பதிவுசெய்து என்னைக் கைது செய்தனர்.  என்னைச் சிறையில் அடைக்கும்படி இந்த மாஜிஸ்திரேட்தான் உத்தரவிட்டார். வழக்கறிஞரான எனக்கே இந்தக் கதி என்றால், அப்பாவிகளின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை” என்றார்.

சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப் பிறகு, மகேந்திர பூபதியிடம் பேசினோம். “என்ன நடந்தது என்பதை என் சீட்டில் உட்கார்ந்து பார்த்தால்தான் தெரியும்” எனச் சிரித்துக்கொண்டே கூலாகச் சொன்னார் மகேந்திர பூபதி.

அவரைப் பற்றிச் சின்ன ஃப்ளாஷ்பேக்!

மகேந்திர பூபதியின் சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு. மதுரை சட்டக்கல்லூரியில் படித்தவர். கமுதி மற்றும் மானாமதுரை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்தார். இவரது சகோதரர் சக்திவேலுவும் ஒரு வழக்கறிஞர். இவர்கள் இருவரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி மாஜிஸ்திரேட் ஆனார்கள். குமரி மாவட்டத்தில் பணி செய்து பின்பு இளையாங்குடிக்கு வந்துள்ளார் மகேந்திர பூபதி. புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உத்தரவுகள் போடுகிறார் என்று புகார்கள் கிளம்பின. 2013-ல் மேலூர் மாஜிஸ்திரேட் ஆக வந்தார்.
பி.ஆர்.பி தரப்பினர் இரண்டு வழக்கறிஞர்களைவைத்து மகேந்திர பூபதியை வளைத்ததாகச் சொல்கிறார்கள்.  பி.ஆர்.பி தரப்புக்கு ஆதரவாக மகேந்திர பூபதி செயல்படுவதாக ஆரம்பத்தில் இருந்தே புகார்கள் கிளம்பின. மதுரை பகுதியில் கிரானைட் மோசடிகள் குறித்து விசாரித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

“போதுமான ஆதாரங்கள், நேரடி சாட்சியங்கள் இருந்தும் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமிக்கு மகேந்திர பூபதி ஜாமீன் கொடுத்துள்ளார். கடுமையான சட்டங்கள் இருந்தும் எப்படி அவர்கள் அந்தச் சட்டங்களில் இருந்து தப்பித்து வெளியே இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்ததில், ஊழல்வாதியின் பிடியில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் இருப்பது தெரிய வருகிறது. அவர் பற்றி  கமிஷனுக்கு வரும் புகார்களை இத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்” என்று அந்தப் புகாரில் சகாயம் சொல்லியிருந்தார்.

அதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், தனியாக ஒரு கவுன்சிலை அமைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த விசாரணையின் விவரங்கள் என்னவென்று தெரியவில்லை.

மகேந்திர பூபதியின் இரண்டு செல் நம்பர்களை உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவு ஆய்வு செய்துள்ளது. அதில், மகேந்திர பூபதிக்கு பி.ஆர்.பி தரப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததுள்ளது.  பி.ஆர்.பி-யின் காரில் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் திரட்டி இருக்கிறார்கள்.

மகேந்திர பூபதி, அவரது அக்கா மகன் சண்முகசுந்தரம் பெயரில் வாங்கிய சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்ய சிலர் முயன்று வருகிறார்கள்.

- சண்.சரவணக்குமார், செ.சல்மான், சே.சின்னதுரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்