அமைச்சர் கொலை மிரட்டல் ஆடியோ பேச்சு

பரபரப்பு பின்னணி தகவல்கள்

மைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சிவகாசியைச் சேர்ந்த முன்னாள் தொகுதிச் செயலாளர் சிவக்குமார் என்பவரிடம், ‘‘பைபாஸ் ராமசாமியை நடுரோட்டில் வைத்துத் தலையைச் சீவிப்புடுவேன். ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள்’’ என்று செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய உரையாடல் ஆடியோ, வாட்ஸ் அப்-ல் வைரலாகப் பரவி வருகிறது. இதன் பின்னணியில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல சம்பவங்கள் நடந்திருப்பது இப்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். “சிவகாசி தொகுதியின் செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருக்கும் சிவக்குமாரின் குடும்பம் உயர் அதிகாரிகளின் அதிகார மையத்தோடுத் தொடர்புள்ள குடும்பம். செய்தித் துறைச் செயலாளராக இருந்து, சமீபத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையக் குழுவின் உறுப்பினராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராமின் மனைவியின் தங்கையைத் திருமணம் செய்திருப்பவர் சிவக்குமார். எனவே, இருவரும் உறவுமுறையில் மிகவும் நெருக்கமானவர்கள். இதுதவிர, போலீஸ் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஓர் அதிகாரியும் சிவக்குமாருக்கு நெருங்கிய சொந்தம். மார்ச் 6-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணலைத் தொடங்கினார். அதே நேரத்தில், சென்னையை அடுத்துள்ள நீலாங்கரையில் ஒரு கும்பல் தனியாக நேர்காணல் நடத்தியது. அதாவது, விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் இருந்தும் 3 பேரை அழைத்து, ‘போயஸ் கார்டனில் எங்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. உங்களுக்குத்தான் சீட்டு. தேர்தல் செலவுக்கு ரூ.2 கோடி ரெடியாக வைத்திருங்கள்’ என்று சொல்லி அட்வான்ஸ் தொகையாக சில லட்சங்களைக் கறந்துள்ளனர். விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதிக்கு சீட்டு கேட்டு விருப்பமனுக் கொடுத்திருந்த ஆமத்தூர் விஜயக்குமார் என்பவரிடமும் இந்தக் கும்பல் தொடர்புகொண்டு நேர்காணல் பற்றி பேசியுள்ளனர். விஜயக்குமார் இதுகுறித்து மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான
கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் புகார் செய்தார். தனது ஆதரவாளர்கள் மூலம் அதை உறுதிசெய்த அமைச்சர், இந்த விவகாரம் பற்றி முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்’’ என்கிறார்கள்.

‘‘சென்னை குற்றப்பிரிவு மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நீலாங்கரை பங்களாவில் நடக்கும் விவகாரங்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். ஒரு நாள் இரவு, அதிரடியாக உள்ளே நுழைந்த போலீஸார் அங்கிருந்த சிலரைக் கைதுசெய்தனர். அதில், போயஸ் கார்டனில் வேலை செய்து வெளியேறிய முன்னாள் ஊழியர் ரமேஷ்குமார், குமார் உள்பட 3 பேர் வெவ்வேறு புகார்களின் பேரில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும், அந்த நீலாங்கரை பங்களாவை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்திருப்பதும், அந்தக் கும்பல் பயன்படுத்திய செல்போன் நம்பர் ஹாஜி விஜய் என்ற பெயரில் வாங்கிப் பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப் பட்டது” என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

இதில், சிவகாசியைச் சேர்ந்த சிவக்குமாரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன்பின்னர்தான் சிவகாசி தொகுதிச் செயலாளர் பதவியில் இருந்து சிவக்குமாரை, ஜெயலலிதா நீக்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார் தரப்பினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பைபாஸ் ராமசாமியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மிரட்டிய ஆடியோவை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம், ‘‘சிவக்குமாரின் ஆதரவாளரான பைபாஸ் ராமசாமி கட்சியில் பொறுப்புக் கேட்டார். ஆனால், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்ததால், அவருக்குக் கட்சித் தலைமை பொறுப்புத் தரவில்லை. ஆத்திரமடைந்த பைபாஸ் ராமசாமி என் குடும்பத்தினர் பற்றியும், முதல்வர் அம்மா மற்றும் கட்சி பற்றியும் டீக்கடை களிலும், அ.தி.மு.க-வின ரிடமும் தரக்குறைவாக விமர்சித்து வந்தார். இதைக் கேள்விப்பட்ட நான், அவரது நண்பரான சிவக்குமாரை அழைத்துக் கண்டித்தேன். இது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, எம்.பி தேர்தல் முடிந்ததும் சில நாட்களில் பேசியது.

அதில் குறிப்பாக, நான் ஒரு முறை பேசியதை பலமுறை பேசியதுபோல் எடிட்டிங் எல்லாம் செய்து இப்போது வெளியிட்டிருக்கின்றனர். அதில், ‘முதல்வர் அம்மா பற்றி எப்படி அவர் விமர்சனம் செய்யலாம்’ என்று கேட்டிருப்பேன்? அதை எல்லாம் எடிட் செய்துவிட்டனர். இதுபோல் அரசியல் உள்நோக்கத்தோடு பல இடங்களில் எடிட்டிங் செய்திருக்கின்றனர்.

நீலாங்கரை பங்களா விவகாரத்தில் மாட்டிய சிவக்குமாரை தொகுதிச் செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சித் தலைமை நீக்கிய ஆத்திரத்தில் என் மீது களங்கம் சுமத்தும் வகையில் இப்போது அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சில இடங்களில் என்னைப்போல் மிமிக்ரி செய்து ஒருவரைப் பேச வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது’’ என்றார் அமைச்சர்.

இதுதொடர்பாக சிவகாசியின் முன்னாள் தொகுதிச் செயலாளர் சிவக்குமாரிடம் பேசினோம். “நான் உங்களோடு பேச விரும்பவில்லை. கடைசிவரை அம்மாவின் உண்மைத் தொண்டனாக இருந்துவிட்டுப் போகிறேன்” என்று ஆத்திரத்தோடு சொல்லி விட்டு போனை கட் செய்துவிட்டார்.
சிவகாசி பைபாஸ் ராமசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அது சிவாவுக்கும், அமைச்சருக்கும் இடையிலான பிரச்னை. இதில் என் தலையை உருட்டுகிறார்கள். இதற்கு மேல் இதுபற்றிப் பேச விரும்பவில்லை” என்றார்.

ஆனால், சிவக்குமாரின் நண்பர்களோ, “நீலாங்கரை பங்களாவில் நடந்த நேர்காணலுக்கு சிவக்குமாரும் சென்றிருந்தார். இதில் எப்படியோ அவர் மாட்டிக் கொண்டுவிட்டார்” என்றனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் கொலை மிரட்டல் ஆடியோ வெளியானதன் பின்னணியில் சிவக்குமார் குடும்பத்துக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ் உள்பட உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆடியோ உண்மையானதா, எந்தெந்த இடத்தில் எடிட்டிங் நடந்திருக்கிறது என்ற விவரங்களை அறிய சென்னையில் ஆய்வுசெய்ய அனுப்பிவைக்கப்பட்டது. அதில், பல இடங்களில் எடிட் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே ராஜேந்திரபாலாஜிக்கு இப்போது சீட் தந்திருக்கிறது கட்சித் தலைமை.

- எம்.கார்த்தி

படங்கள்: எம்.விஜயகுமார், ஆர்.எம்.முத்துராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick