பெரியோர்களே... தாய்மார்களே! - 78

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
-

என்று ‘தெய்வத்தாய்' படத்தில் பாடிய எம்.ஜி.ஆர் தனது மூச்சை நிறுத்திய பிறகும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்கள் நம்நாட்டில் உண்டு.

‘‘அந்த மகராசனுக்கு சாவு இல்லை’’ என்று கும்பிடும் மக்கள் நாட்டில் உண்டு. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது அதுபற்றி செய்தியாக்க வந்த அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் ஒரு கூலித் தொழிலாளி சொன்னார்: ‘‘என் நெஞ்சைக் கிழிச்சுப் பாருங்க சார். உள்ள வாத்தியார் இருப்பார்’’ என்று. கிராமத்துப் பெண்களில் சிலர், எம்.ஜி.ஆர் படத்து சுவரொட்டிகளை விரித்துப் படுத்துக்கொள்வதாக அந்தப் பத்திரிகையாளரே எழுதினார். எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் எந்த முகமும் அந்த ஈர்ப்பை அடைந்தது இல்லை. சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்து குழைத்த தேகத்தால் மக்களை மயக்கி வைத்திருந்தார் மெனகத் கோபால மேனன் ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர்.!

மெனகத் என்பது இவர்களது குடும்பப் பெயர். பாலக்காடு மாவட்டம் சொல்லெங்கோடு அருகே நல்லேபள்ளி கிராமத்தில் மெனகத் கோபால மேனன் பிறந்தார். வடவனூர் சத்யபாமாவை திருமணம் செய்துகொண்டு மருதூர் வீட்டில் வாழ்ந்தார்கள். இவர்கள் இருவரும் இலங்கை கண்டிக்கு அருகில் வாழ்ந்த போது பிறந்தவர் ராம்சந்தர். இரண்டு வயதில் தாயகம் திரும்பியது கோபால மேனன் குடும்பம். குடியேறியது கும்பகோணத்தில். தம்பி ராம்சந்தரையும் அண்ணன் சக்ரபாணியையும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக நிறுவனத்தில் சேர்த்தார்கள். வாரத்துக்கு நாலரை ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தவர்தான் தொடர்ந்து மூன்று முறை வென்று நாடாண்ட எம்.ஜி.ஆர்.!

பி.யூ.சின்னப்பா ஆண் வேடமான ராஜபார்ட் போட்டால், பெண்ணைப் போல நளினமாகவும் சிவந்தும் ஈர்ப்பாகவும் இருக்கக் கூடிய ராம்சந்தருக்கு ஸ்திரீ பார்ட் வேடம் தரப்படும். 30-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த எம்.ஜி.ஆர் சென்னைக்கு வந்து சென்ட்ரல் அருகில் உள்ள வால்டாக்ஸ் ரோட்டில் குடியேறினார். இவரது நடிப்பைப் பார்த்து உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியினர் இவரை இழுத்துச் சென்றார்கள். இந்தக் காலத்தில் சாஃப்ட்வேர் கம்பெனிகள் பார்க்கும் வேலையை அந்தக் காலத்தில் நாடகக் கம்பெனிகள் பார்த்து உள்ளன.

மொய்தீன் நாடகக் கம்பெனியில் நாடகம் போட ரங்கூன் போனவர், மீண்டும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கே வந்தார். ராம்சந்தர் வளர்ந்து விட்டார். பெண்ணின் நளினமான குரல் உடைந்து விட்டது. அப்போதெல்லாம் பின்பாட்டு கிடையாது. நடிகர், நடிகைகளே பாட வேண்டும். எம்.ஜி.ஆரின் குரல் உடைந்ததால் ஸ்திரீபார்ட்டுக்கு அவர் பொருந்தவில்லை. உடனே உஷாரான
எம்.ஜி.ஆர்  வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொண்டு ராஜபார்ட்டுக்கு தயார் ஆனார். நாடகங்கள் எல்லாம் சினிமாவாக பரிணாமம் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.

முதல் படம் கிடைத்தது, ‘சதிலீலாவதி'. அடுத்தடுத்து இரு சகோதரர்கள், மாய மச்சீந்திரா, அரிச்சந்திரா, பிரகலாதன், மீரா, ஸ்ரீமுருகன்... எனப் பல படங்கள். ஆனால் அனைத்திலும் சிறுசிறு வேடங்கள். அவருக்கு ராஜகளையைக் கொண்டு வந்தது, ‘ராஜகுமாரி'. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக மகுடம் சூட்டிக்கொண்ட இந்தப் படத்துக்கு கதை வசனம் கருணாநிதி. 1947 ஏப்ரல் 11-ம் நாள் இந்தப் படம் வெளியானது. எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' 1936-ல் வெளியானது. கதாநாயகன் ஆக எம்.ஜி.ஆருக்கு 11 ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 30 ஆண்டுகள் அதைத் தக்க வைத்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்