“பலமுனைப் போட்டியே அ.தி.மு.க அணிக்குச் சாதகம்!”

தமீமுன் அன்சாரி பளீர் பேட்டி!

ரண்டு முறை முதல்வரை சந்தித்தவருக்கும் சீட் இல்லை, பல ஆண்டுகள் அணி மாறாமல் இருந்தவர்களுக்கும் தொகுதியில்லை. ஆனால், கட்சி ஆரம்பித்த 32 நாட்களில் இரண்டு தொகுதிகளைப்பெற்று அ.தி.மு.க அணியில் இணைந்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது மனிதநேய ஜனநாயக கட்சி. அதன்  பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரியை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ம.ம.க-வில் இருந்து பிரிந்த ஒரு மாதத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்.
அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கத்தான் நீங்கள் கட்சி தொடங்கினீர்களா?”


“கடந்த அக்டோபர் மாதம் ம.ம.க-வில் உட்கட்சிப் பிரச்னை ஏற்பட்டு அது நீதிமன்ற வழக்குவரை சென்று பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்த பிறகுதான் நாங்கள் தனிக்கட்சி தொடங்கினோம். அதுவரை எந்த அரசியல் முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கக் காரணம், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழகத்தில் மதக்கலவரங்கள் இல்லை. சமூகப் பதற்றங்கள் குறைந்திருக்கின்றன. இதுதான் தமிழகத்தின் முதன்மைப் பிரச்னை. அதை முன்வைத்துதான் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க முடிவு செய்தோம்.”

‘‘கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“நாங்கள் வலுவாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலை மட்டுமே முதல்வரிடம் அளித்தோம். எண்ணிக்கை குறித்து நாங்கள் எதுவும் கேட்கவில்லை. இன்றைய நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளில், எங்களுக்கு மட்டும்தான் இரண்டு தொகுதிகளைக் கொடுத்துக் கௌரவித்து உள்ளார்கள். இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.”

“அ.தி.மு.க., இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கிற கட்சி என்று சொல்லப்படுகிறதே?”

“தி.மு.க என்றால் சிறுபான்மையினருக்கான கட்சிபோலவும், பிற கட்சிகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சிகள் என்றும் ஒரு மாயையை உருவாக்கி உள்ளார்கள். அது உண்மையல்ல. 1977-ல் எம்.ஜி.ஆர் முஸ்லிம் லீக் கட்சிக்கு 10 தொகுதிகள் கொடுத்து அழகு பார்த்தார். இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணையைப் பிறப்பித்ததே முதல்வர் ஜெயலலிதாதான். தமிழகத்தில் பி.ஜே.பி-யைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் மதச்சார்பற்ற கட்சிகள்தான்.”

“இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும், சிறைவாசிகள் விடுவிப்பு குறித்து அ.தி.மு.க-விடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?”

“சென்னையில் நடைபெற்ற எங்கள் கட்சி மாநில மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்து இதற்காக நாங்கள் குரல் கொடுப்போம். இது நாடு தழுவியப் பிரச்னை. முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிறைவாசிகளாக உள்ளார்கள். இதில் எந்த சமரசமும் செய்யமாட்டோம்.”

“ஏற்கெனவே இங்கு உள்ள சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து நீங்கள் எதில் மாறுபடுகிறீர்கள்?”

“இந்த மண்ணுக்கேற்ற அரசியலைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திராவிட இயக்க அரசியல், தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் ஆகியவற்றை உள்வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்பதை முன்னெடுக்க நாங்கள் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இந்தக் கொள்கைகளை ம.ம.க உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பின்பற்றவில்லை.”

“மனித நேயம், சமத்துவம் என்ற நீங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்களின் கட்சியாகத்தான் உங்கள் கட்சி பார்க்கப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில் நிற்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு எங்கள் கட்சியின் விண்ணப்பத்தை மார்ச் 3-ம் தேதிதான் அனுப்பினோம். மறுதினமே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. கட்சியை உடனடியாகப் பதிவு செய்யமுடிவில்லை. அதனால், சிறிய சமரசத்துடன் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். எங்கள் கட்சி, இஸ்லாமியர்கள் கட்சி அல்ல. இஸ்லாமி யர்கள் முன்னின்று நடத்தும் அனைவ ருக்குமான பொதுவான அரசியல் கட்சியா கத்தான் இதனைக் கொண்டு செல்கிறோம். சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். எங்கள் கட்சியின் கேபினட்டில் பிற சமூகத்தினரும் உள்ளார்கள். ஆகவே அனைவருக்குமான குரலாக நாங்கள் சட்டசபையில் செயல்படுவோம். கிராமப்புற வளர்ச்சி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவோம்.”

“அ.தி.மு.க அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?”

“களத்தில் ஆறு முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. மிக எளிதாக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க அணி வெற்றிபெறும். இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலையோ, அதிருப்தி அலையோ இல்லை என்பதே எங்கள் அணிக்கு வெற்றிதான். பல முனைப் போட்டியே அ.தி.மு.க அணிக்குச் சாதகம்தான். அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்த்த விதத்தைப் பார்க்கும்போது அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்பது உறுதி. பலமுனைப் போட்டி இருந்தாலும், ஓர் அணியாக அ.தி.மு.க மட்டுமே வெல்லும்.”

- அ.சையது அபுதாஹிர்

படம்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்