பெரியோர்களே... தாய்மார்களே! - 79

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

எம். ஜி.ஆர் கணக்குக் கேட்டார். என்ன கணக்கு?

தி.மு.க-வின் பொருளாளராக இருந்ததால் கட்சிக் கணக்கை எம்.ஜி.ஆர் கேட்டார். அதனால், கட்சியில் இருந்து கருணாநிதியால் விலக்கப்பட்டார் என்று தவறான வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர் கேட்டது கட்சியின் வரவு - செலவுக் கணக்கை அல்ல. அன்றைய முதலமைச்சர் கருணாநிதியில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் வரைக்கும் உள்ள அனைவரின் சொத்துக் கணக்கைத்தான் எம்.ஜி.ஆர் கேட்டார்.

திருக்கழுகுன்றம்தான் எம்.ஜி.ஆர் தீ மூட்டிய இடம்.1972 அக்டோபர் 8 -ம் நாள் அங்கு ஒரு கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். , “அண்ணாவின் பாதையில் இருந்து முதலமைச்சர் கருணாநிதி விலகிச் செல்கிறார். முதலமைச்சரின் உறவினர்களின் சொத்து விவரங்கள் முதலில் வெளியில் வரவேண்டும். அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அண்ணாவுக்குச் சிலை வைத்தால் என்ன பயன்?’’என்று கேட்டார்.

அன்று மாலையில் சென்னை ஆயிரம் விளக்கில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய எம்.ஜி.ஆர்., திருக்கழுகுன்றத்தைவிட அனலை அதிகம் கக்கினார். “எம்.ஜி.ஆர் என்றால் தி.மு.க. தி.மு.க என்றால், எம்.ஜி.ஆர் என்று நான் சொன்னேன். நீ எப்படி இப்படிச் சொல்லலாம் என்று கேட்கிறார்கள். கேட்டவனும் இப்படிச் சொல்லட்டும்... உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்கு இதைச் சொல்ல துணிவு இல்லாததால் என்னைக் கோழை ஆக்காதே’’ என்ற எம்.ஜி.ஆர்., “கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரும் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்துவோம். அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம்’’ என்று கர்ஜித்தார் .

அப்போது, முதலமைச்சர் கருணாநிதி மதுரையில் இருந்தார். வழக்கம்போல் செயற்குழு கூடி இதுபற்றி முடிவெடுக்கும் என்று சொல்லிவிட்டு வந்தார் கருணாநிதி. ‘‘கட்சிக்குள் பேசவேண்டியதைப் பொதுக்கூட்டத்தில் எப்படி பேசலாம்?’’ என்று செயற்குழு உறுப்பினர்கள் ஆர்ப்பரித்தார்கள். எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் 26 பேர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்கள்.

அன்று எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் சமாதானம் செய்யத் துடித்தார்கள் இரண்டுபேர். ஒருவர், நாஞ்சில் மனோகரன். இன்னொருவர், முரசொலி மாறன். ‘‘கட்சியில் பிளவு வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆரை கேட்டுக்கொண்டார் நாஞ்சிலார். வருத்தக் கடிதம் தருவதற்குக்கூட எம்.ஜி.ஆர் தயார் ஆகிவிட்டார். ஆனால், அவரை வெளியேற்றிவிட வேண்டும் என்று தி.மு.க-வில் பலரும் அதி தீவிரமாக இருந்தார்கள்.

 கட்சிக்கு வெளியே கலவரங்கள் வெடித்து விட்டது. கருணாநிதியின் புகைப்படங்களை எரிப்பதும் எம்.ஜி.ஆரின் கட்-அவுட்களை அடிப்பதும் தொடங்கியது. எம்.ஜி.ஆரை அழைத்து சமாதானம் பேசினார் பெரியார். “தி.மு.க தலைமைதான் சரியாக நடந்துகொள்ளவில்லை’’ என்று அவரிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். தி.மு.க பொதுக்குழு கூடியது. வந்திருந்த 277 பேரும் ஆதரித்த நிலையில் எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அதில், கையெழுத்துப் போட்டவர் அன்றைய தி.மு.க பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன்.

 கருணாநிதிக்கும் தனக்கும் தலைமைக்கான போட்டி வந்தபோது கருணாநிதிக்கு பின்புலமாக இருந்த எம்.ஜி.ஆரை - கருணாநிதி தலைவராக இருக்கும்போதே வெளியில் அனுப்ப வாய்ப்புக் கிடைக்கும் என்று நெடுஞ்செழியன் நினைத்திருக்க மாட்டார். பின்னர் தன்னிடம் இருந்து பிரிந்து போன நெடுஞ்செழியன், அதே எம்.ஜி.ஆரின் வழிகாட்டியாக மாறிப்போவார் என்பதைக் கருணாநிதியும் நினைத்திருக்கமாட்டார். யாரும் நினைக்காதது நடப்பதுதான் அரசியல்.

“வீட்டு விஷயங்களை எவளும் வீதிக்குக் கொண்டு வரமாட்டாள். அப்படிக் கொண்டு வருபவளை எவனும் மனைவியாக ஏற்றுக்கொள்ள மாட்டான்’’ என்று வியாக்கியானம் சொன்னார் நெடுஞ்செழியன்.

இவரை அடுத்துப் பேசிய கருணாநிதி, “மாற்றார் நம்மைச் சந்தேகிக்கிறார்கள். ஆகவே, நானும் சந்தேகிக்கிறேன் என்று சொல்கிறார். இது ராமாயணம்போல் இருக்கிறது. யாரோ ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகிக்கிறான். ஆகவே, நான் சீதையைக் காட்டுக் அனுப்புகிறேன் என்று ராமன் அனுப்பினான் சீதையை காட்டுக்கு. ராமன் அனுப்பலாம். ராமச்சந்திரன் இப்படி கழகத்தை காட்டுக்கு அனுப்ப துணியலாமா?” என்று கேட்டார்.

இந்த இருவரும் பேசிய இடம் சென்னைக் கடற்கரை. அருகில் அண்ணா சமாதி. அண்ணனை மட்டுமல்ல... அண்ணாவின் அரவணைப்பை, கண்ணியத்தை கருணாநிதியும் நெடுஞ்செழியனும் அடக்கம் செய்துகொண்டு இருந்தார்கள். கடற்கரையில் காற்று வாங்கப்போன அண்ணன் திரும்பி வரமாட்டார் என்ற தைரியம்தான் - சகோதரப் பாசத்துடன் வளர்க்கப்பட்ட இயக்கம் ஒரு குடும்ப இயக்கமாக உருமாறக் காரணம் ஆனது.

1971 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுங்கள்’’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி. மறுத்தார்

எம்.ஜி.ஆர். அதனால், அமைச்சர் பதவி தரப்படவில்லை. மதுரை தி.மு.க மாநாட்டுக்கு ஒரு நடிகையை அழைத்துவர எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். ‘‘தி.மு.க-வுக்கு இது தாங்காது’’ என்று கருணாநிதி மறுத்தார். அதைவிட முக்கியமாக அன்றைய மதுரை மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரை முத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘அப்படி யாராவது வந்தால், மாநாட்டுக்கு உள்ளேயே விடமாட்டேன்” என்றார் முத்து. அன்றைய காங்கிரஸ் கட்சி எப்படியாவது தி.மு.க-வை உடைக்க நினைத்தது. அதற்கு, எம்.ஜி.ஆர் பலியாகிவிட்டார். இவை மூன்றும் தி.மு.க சார்பு விளக்கங்கள்.

 கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, நடிக்க வந்துவிட்டார். முத்துவுக்கும் ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கின. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் மு.க.முத்து ரசிகர்களுக்கும் சில இடங்களில் பிரச்னைகள் வந்தன. எம்.ஜி.ஆர் மன்றங்களை கருணாநிதி கலைக்கச் சொன்னதாக செய்தி பரவியது.

திருக்கழுகுன்றத்தில் எம்.ஜி.ஆர் பேசியது அக்டோபர் 8-ம் தேதி. அதற்கு ஒரு வாரத்துக்கு முன் அக்டோபர் 1 -ம் தேதி எம் .ஜி.ஆர் மன்றங்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. அதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 800 நிர்வாகிகள் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர் மன்றங்களுக்கு நெருக்கடி தரப்படுவதற்கு இந்தக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தி.மு.க நிர்வாகியான நீல நாராயணன் விடுத்த அறிக்கை எம்.ஜி.ஆர் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்தது .

‘‘தி.மு.க-வினரால் நடத்தப்படும் மன்றங்கள் மாவட்டத் தலைமை நிலையத்தில் உடனடியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். பதிவுசெய்யாத மன்றங்கள் தி.மு.க கொடியையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது” என்று தடைபோட்டது அந்த அறிக்கை. அதைப் பார்த்துதான் அனல் ஆனார் எம்.ஜி.ஆர்.

‘‘மகன் நடிப்பது பிள்ளையோ பிள்ளை, அப்பன் அடிப்பது கொள்ளையோ கொள்ளை’’ என்ற முழக்கம் கிளம்பியது. தி.மு.க கொடிக் கம்பம் வெட்டப்பட்டது. ராமாவரம் தோட்டத்தில் கும்பல் கூட ஆரம்பித்தது. ‘‘இப்போது நடக்கும் கிளர்ச்சியும் ஆர்ப்பாட்டமும் கருணாநிதிக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் எதிரான போராட்டமே தவிர, தி.மு.க-வை அழிப்பதற்கான போராட்டம் அல்ல’’ என்றார் எம்.ஜி.ஆர். ‘‘காங்கிரஸ் தூண்டுதலால் கட்சி ஆரம்பித்துள்ளார் எம்.ஜி.ஆர்.” என்று மதுராந்தகத்தில் குற்றம்சாட்டிய கருணாநிதி, ‘‘இனி 30 ஆண்டுகளுக்கு தி.மு.க-தான் ஆளும் கட்சி’’ என்று சொல்லி தி.மு.க-வினருக்கு உற்சாகம் கொடுத்தார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. ‘அண்ணாவின் இதயக்கனி’ என்றார்கள், எம்.ஜி.ஆரை. ‘அது வண்டு துளைத்த கனி’ என்று கிண்டல் செய்தது தி.மு.க. ‘‘குண்டு துளைக்க முடியாத இதயம் அது. வண்டு துளைத்து விடுமா?’’என்று நெல்லை கே.ஆர்.பி.மணிமொழியன் கடற்கரைக் கூட்டத்தில் கேட்டார். ‘‘துரோகியால் கொடுக்கப்பட்ட புரட்சி நடிகர் என்ற அடைமொழியைத் தூக்கி எறிந்துவிட்டு நமது தலைவரை இனி புரட்சித் தலைவர் என்றே அழைக்க வேண்டும்’’ என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.தம்பி கே.ஏ.கே., கடற்கரையில் காட்டிய பாசத்தை அண்ணன் கே.ஏ.மதியழகன் சட்டசபையில் காட்டினார். ‘ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்” என்றார் மதியழகன். ‘‘தேர்தலை சந்திப்பேன், இப்போது அல்ல... மூன்று ஆண்டுகள் கழித்து” என்றார் கருணாநிதி. ‘‘இப்போதே பதவியை ராஜினாமா செய்யுங்கள்” என்றார் எம்.ஜி.ஆர்  முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர அன்றைய சபாநாயகர் மதியழகன் முயற்சித்தார். அதற்கான நாள் குறிக்கப்பட்டது. அதேநாளில் சபாநாயகர் மதியழகன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் மூலமாகக் கொண்டு வந்தார் கருணாநிதி. ஒரே நேரத்தில் இரண்டு சபைகள் ஒரே இடத்தில் இரண்டு தனி நபர்களுக்காக நடந்து, தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு கால மாண்பு நொந்து நூலானது.

எம்.ஜி.ஆர் பேச எழுந்தார். ஒலிபெருக்கி இணைப்புத் துண்டிக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர் வெளியேறினார். சபாநாயகர் மதியழகனும் வெளியேறினார். எம்.ஜி.ஆரை நோக்கிச் செருப்பு வந்து விழுந்தது.  ‘‘இந்தச் சட்டசபை செத்துவிட்டது’’ என்றபடியே எம்.ஜி.ஆர் நடக்க ஆரம்பித்தார். 1972 நவம்பர் 14 வெளியேறிய எம்.ஜி.ஆர்., 1977-ல் முதலமைச்சராகத்தான் சபைக்குள் போனார்.

அதுவரை இருந்த கொள்கை அரசியல், அதுவரை இருந்த கட்சி அரசியல், அதுவரை இருந்த விமர்சன அரசியல், அதுவரை இருந்த மக்கள் அரசியல், அதுவரை இருந்த விவாத அரசியல் மறைந்து தனிமனித அரசியல், தனிப்பட்ட இரண்டு மனித மனங்களின் அரசியல் தொடங்கியது தமிழக அரசியலில்.

‘‘சட்டசபை செத்துவிட்டது’’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர் சட்டசபை மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியலே மெல்லமெல்லச் சாகத் தொடங்கியது. இப்போது நாம் கேட்பது எல்லாம் மரணத்தின் ஈன ஸ்வரங்கள் மட்டுமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்