அடல்ஸ் ஒன்லி ஹாஸ்டல்!

கல்லூரி விடுதியில் கசமுசா டான்ஸ்...

டாக்டர் சர்.சி.வி.ராமன், டாக்டர் சந்திரசேகர் என இரண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் படித்த கல்லூரியின் விடுதி இப்போது காபரே டான்ஸ் கிளப்பாக மாறிவிட்டதை எண்ணிப் புலம்புகின்றனர் பேராசிரியர்கள். அதுவும் கல்லூரியின் முதல்வர் முன்னிலையிலேயே அந்த ஆபாச நடனம் அரங்கேறியிருப்பதுதான் கொடுமையின் உச்சம்.

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர்கள் விடுதியும் ஒன்று. பழைமையான இந்த விடுதியில் இப்போது, 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். கடந்த வாரம் நடந்த விடுதி விழாவில் விரச நடனம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து விடுதி மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இந்த விழாவுக்குக் கல்லூரி முதல்வரும் விடுதி காப்பாளருமான பிரம்மானந்த பெருமாள் தலைமை தாங்கினார். இறுதி நிகழ்வாகப் பெண்கள் கலந்துகொண்ட குத்தாட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மிகவும் மோசமான நடன அசைவுகள் இருந்தன. இதைப் பார்த்த மாணவர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். விழா இறுதிவரை இருந்த முதல்வர் இந்த நிகழ்ச்சியை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பார்த்து ரசித்துவிட்டுச் சென்றார். விழாவுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டு இருக்கிறது. இதை துணை விடுதிக் காப்பாளரான பேராசிரியர் அன்புச்செல்வன் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களை வைத்து நடத்தி இருக்கிறார். கல்லூரி விடுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்று நாங்கள் போராடிவரும் வேளையில், இதுபோன்ற ஒரு குத்தாட்ட நடனத்தை நிகழ்த்தி இருப்பது சரியல்ல. இதற்குச் செலவு செய்யப்பட்ட நிதி அனைத்தும் மாணவர்களின் கட்டணத்தில் இருந்தே எடுத்துச் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால், விடுதியில் இருந்து அவரை வெளியேற்றிவிடுகிறார். எங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையையும் சரிவர வழங்குவது இல்லை. பாரம்பர்யமிக்க கல்லூரியில் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த முதல்வரை பணிநீக்கம் செய்யவேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். இதற்காக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள்.

‘‘அரசியல் நோக்கத்துக்காக இந்த வருடம் மாணவர் தேர்தலை நடத்தவில்லை. அதனால்தான், இந்த அளவுக்கு மோசமான நிகழ்ச்சிகளைக் கல்லூரி வளாகத்துக்குள் நடத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்வால் கல்லூரியின் பெயரை முதல்வரும், துணை வார்டனும் களங்கப்படுத்தி இருக்கிறார்கள்’’ என்கிறார்கள் சில மாணவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்