"எனக்கு பேச்சு வராதோ என்று பயந்தார் அம்மா!"

கண்ணீர் நினைவுகளில் நாஞ்சில் சம்பத்!

த்தகைய அரசியல் சோதனையான நேரத்திலும் சளைக்காமல் பேசும் நாஞ்சில் சம்பத், இப்போது கலங்கிப்போய் இருக்கிறார். அதற்குக் காரணம் அவரது தாயார் கோமதி அம்மாள் கடந்த 2-ம் தேதி இறந்துபோனது. 82 வயதான அவர், கன்னியாகுமரி மணக்காவிளையில் வீட்டில் இருந்தார். சம்பத்தின் அப்பா புற்றுநோய் பாதிப்பில் 92 வயதில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘‘தேர்தல் பிரசாரத்தை மகிழ்ச்சியாகவும் கம்பீரமாகவும் நான் தொடங்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு துக்கம் வந்துவிட்டதே” என்ற வேதனையுடன் தனது அம்மாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் சம்பத்.

‘‘நான் பிறந்து பூமியில் வந்து விழுந்த நாள் முதல் மூன்றாண்டுகளும், பிள்ளைச் சீக்குக்கு ஆளாகி தனது நிம்மதியைச் சூறையாடியதாக அம்மா  எப்போதும் சொல்வார். மூன்று வயதுக்குப் பிறகுதான் பேச ஆரம்பித்தேன் என்றும் சொல்வார். 

ஒருவேளை, நான் பேசாமல் போய்விடுவேனோ என்று அச்சப்பட்டபடியே அம்மா இருந்தாராம்.  ‘அம்மான்னு அவன் கூப்பிட்டால் போதும்’ என்று  அவர் ஆசைப்பட்டுள்ளார். அதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று என்னை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் காண்பித்துள்ளார். அந்த மருத்துவர், ‘நன்றாகப் பேசுவான், நம்பிக்கையோடு செல்லுங்கள்’ என்று மருந்துகூட கொடுக்காமல் அனுப்பிவைத்து இருக்கிறார்.

5-ம் வயதில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். பள்ளியிலேயே முதல் மாணவனாகச் சுடர்விட்டேன். இரண்டு மாதங்களில் தமிழில் எழுதவும், படிக்கவும் தேர்ச்சிப் பெற்றேன். பள்ளியிலும், ஊரிலும் இதை அதிசயமாக எல்லோரும் புகழ்ந்தவேளையில் தினந்தோறும் பள்ளிவிட்டு மாலை வீடு வருகிற ஒவ்வொரு நாளும் திருஷ்டிப்படாமல் இருப்பதற்குரிய சடங்குகளை அம்மா செய்வார். ‘நித்தமும் இந்தக் கொடுமை தேவையா அம்மா?’ என்று கேட்டால், ‘ஏற்கெனவே நீ நோயாளி. இனி உனக்கு எதுவும் நேராமல் இருக்கத்தான் இந்தச் சடங்கு, பேசாமல் இரு’ என்பார்.

ஒன்றாம் வகுப்பு படிக்கிறபோதே தாயுமானவர் பாடல்களை அவர் எனக்குக் கற்றுத் தந்தார். தாவிவரும் தமிழ்நடை எனக்கு இன்று அணியாய் இருக்கிறது என்றால், பிஞ்சு வயதில் என் நெஞ்சில் தாயுமானவர் தமிழைப் பதிவுசெய்த என் தாய்தான் காரணம்.

உருக்குலையாத நம்பிக்கையும், எதைக் கண்டும் அச்சப்படாத வீரமும் தாய்ப்பாலுடன் சேர்த்து எனக்கு ஊட்டிய அன்னை அவர். ஆகாயத்தைப் பார்த்து ஆச்சர்யப்படாமலும் - அதல பாதாளத்தைக் கண்டு அதிர்ச்சி அடையாமலும் நான் பெருமிதத்தோடு நடைபோடுகிறேன் என்றால், அவர் என்னை வார்த்த - வளர்த்த முறையே காரணம்.

3-ம் வகுப்பு படிக்கிறபோது எங்கள் கிராமத்தை வைசூரி என்னும் கொள்ளைநோய் ஆக்கிரமித்துவிட்டது. அந்தக் கொள்ளை நோய்க்கு நானும் ஆளானேன். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் ஊசி குத்த இடமில்லாத அளவுக்கு உடம்பெல்லாம், வைசூரிக் கொப்புளங்கள். வாழை இலையில் நிர்வாணக்கோலத்தில் 2 மாதங்கள் படுத்திருந்தேன். 4 மாதங்கள் பள்ளிக்குப் போகவில்லை. வைத்தியரோ, ‘என் கையில் ஒன்றும் இல்லை, அந்த வைத்தீஸ்வரன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்றார். வைசூரி என்னும் கொள்ளை நோயில் இருந்து எப்படியோ பிழைத்துவிட்டேன். ஆனால், முகத்தில் இருந்து கால் பாதம்வரைக்கும் ஆழமான வடுக்கள் கொண்ட அம்மைத் தழும்புகள் வந்துவிட்டன. என் கோலத்தைப் பார்த்துக் குமுறிகுமுறி என் அம்மா அழுததை இன்று நினைத்தாலும் எனக்குக் கண்ணீர் வந்துவிடும்.

3-ம் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வகுப்புப் படித்து முடிக்கிறவரை தொடர்ந்து 8 வருடங்கள் நாள் தவறாமல் யானைப்பாலை உடலெல்லாம் பூசிவிட்டார் அவர். என் அருவருக்கத்தக்கத் தோற்றத்தை மாற்ற, அவர் தினமும் தவம் செய்தார். ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்கும்போது நேற்றைவிட இன்று பரவாயில்லை என்று அன்றாடம் என் அம்மா சொல்லும் ஆறுதல் வார்த்தையும் அவரது நம்பிக்கையும் எனக்கு உயிர் தந்தது. புதிய தோற்றமும் தந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்