“தேர்தல் முடிந்த பிறகு ‘முதல்வர் வேட்பாளர்கள்’ வருத்தப்படுவார்கள்”

தமிழிசை சவுந்தரராஜன் தடாலடி!

‘‘சட்டமன்றத் தேர்தல் பிரச்சார வியூகத்தில் பிஸியாக இருந்த பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பி.ஜே.பி-யின் தேர்தல் முழக்கம் என்ன?’’

‘‘தாமரை வெல்லட்டும்... தமிழகம் வளரட்டும் என்பதுதான் எங்கள் முழக்கம். இலை ஆட்சியிலும் தமிழகம் வளரவில்லை. சூரியனும் விடியலைத் தரவில்லை.மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்யும்போது, இரண்டு அரசுகளுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நல்லுறவு இருக்கும்.  இதெல்லாம் மக்கள் நலக் கூட்டணியால் முடியாது. தி.மு.க கூட்டணியால் முடியவே முடியாது. ஏற்கெனவே, அ.தி.மு.க தோல்வி அடைந்துவிட்டது.’’

‘‘அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க ஆகிய கட்சிகளில் யாரை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘ஆண்டவர்கள், ஆளுகிறவர்கள் என இரண்டு பேருமே வீழ்த்தப்பட வேண்டியவர்கள். இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களுடைய பின்புலம் என்ன? அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர்களின் சொத்து மதிப்பு என்ன? அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களின் சொத்து மதிப்பு என்ன? நாட்டு மக்களுடைய மதிப்பு என்ன விதத்தில் உயர்ந்து இருக்கிறது? அரை நூற்றாண்டாகச் செய்ய முடியாததை இனி இவர்கள் செய்யப்போகிறீர்களா? இந்தப் போட்டியில் தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணியும் பா.ம.க-வும் வெறுமனே களத்தில் உள்ளன. முதல்வர் யார் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக பி.ஜே.பி இருக்கும்.’’

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி-யினர் ஓட்டுகள் கூட உங்களுக்கு கிடைக்கவில்லையே?’

‘‘உண்மைதான். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 19.5 சதவிகித வாக்குகள் பெற்றோம். அதன்படி, 15 முதல் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடந்தது வேறு. ஜெயலலிதா பிரதமர் ஆகிவிடுவார் என்று ஒரு பிரசாரம் களத்தில் இருந்தது. மோடிக்கு போடுவதும், லேடிக்கு போடுவதும் ஒன்றுதான் என்று ஒரு பிரசாரம் நடந்தது.இதனால், ‘பி.ஜே.பி வாக்குகள்கூட ஜெயலலிதாவுக்குப் போட்டால் என்ன? அவர்கள் சேர்ந்துதானே இருக்கப் போகிறார்கள்’  என்ற  மாயதோற்றத்தை உருவாக்கினர். இந்தத் தேர்தலில் அது நடக்காது. எங்கள் ஓட்டுக்கள் சிதறாது.’’

‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பற்றி உங்கள் கருத்து?’’


‘‘மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி இது. அவர்கள் என்ன புனிதத்துவம் பெற்றுவிட்டார்கள் என்று மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்? இலங்கை தமிழர்கள் பிரச்னை, ஸ்பெக்ட்ரம்  முறைகேடு ஆகியவற்றால் பிரிந்தார்கள். அந்தப் பிரச்னைகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. ’’

‘‘பி.ஜே.பி அணிக்கு விஜயகாந்த் வராததால் வருத்தம் இல்லையா?’’

‘‘கூட்டணிக்கு வருவதும் வராததும் விஜயகாந்த் விருப்பம்.  முதல்வர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் இருந்திருந்தால், வலுவான கூட்டணி அமைந்திருக்கும். ஆண்ட, ஆளுகின்ற முதல்வர்களை நிச்சயமாக வீட்டுக்கு அனுப்பியி ருக்கலாம். ‘இரண்டு மாத முதல்வர் வேட்பாளர்’ என்ற குறுகிய சந்தோஷத்துக்காக நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார்கள். மே 19-ம் தேதிக்குப் பிறகு கண்டிப்பாக இவர்கள் வருத்தப்படுவார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள், பி.ஜே.பி-யை நிச்சயம் ஆதரிப்பார்கள்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: மீ.நிவேதன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick