நிலமோசடி... பாலியல்... ஊழல்...கடத்தல்...ரவுடிகள் தொடர்பு... கஞ்சா...

அ.தி.மு.க. இ.பி.கோ. லிஸ்ட்!

றிவிக்கப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் மீது ஆள் கடத்தல், கஞ்சா, பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம். மேலும் பல தொகுதிகளில் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர்கள் மீதான புகார்களைக் கட்சி மேலிடத்துக்கும், ஊடகங்களுக்கும் கட்சியினர் அனுப்பி வருகின்றனர். 

வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்): இவர் முத்துச்சாமி பொதுச் செயலாளராக இருந்த போட்டி அ.தி.மு.க-வில் விருத்தாசலம் நகரச் செயலாளராகப் பொறுப்பில் இருந்தவர். அப்போது ஜெயலலிதாவைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறாராம். அத்தோடு, குரும்ப கவுண்டர் என்ற தனது சாதியை மறைத்து வன்னியகுல சத்திரியர் என்று சான்று வாங்கி வேட்பாளராகிவிட்டார் என்று மேலிடத்துக்குப் புகார் பறந்திருக்கிறது.

சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி):இவரது கணவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி நகரமன்றத் தலைவராக இருக்கிறார். இவர் மீது நில அபகரிப்பு, ஆள் கடத்தல், அடிதடி என ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதாம். இது குறித்து வாட்ஸ் அப் மற்றும் கட்சி மேலிடம் என கட்சிக்காரர்கள் புகார்களைத் தட்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அய்யாசாமி, திட்டக்குடி (தனி): கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ஏ.பி.ஆர்.ஓ-க்கள் நியமிக்கப்பட்டார்கள். “இது முழுக்க முழுக்க அரசியல். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இது பரிசீலனை செய்யப்படும்” என்றார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த அய்யாசாமிக்கு கடலூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ போஸ்ட்டிங் போட்டார்கள். இந்தச் சூழலில் அவருக்கு இப்போது திட்டக்குடியில் போட்டியிட சீட் கொடுத்திருக்கிறார்கள் என்று புகார் வாசிக்கிறார்கள்.

மனோகரன் (மடத்துக்குளம்): “இந்திய தேர்தல் கமிஷனிடம் இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு கடிதம் எழுதிக்கொடுத்தவர். திருநாவுக்கரசு கூட்டிய பொதுக்குழுவில் கலந்துகொண்டு ஜெயலலிதாவைக் கட்சியைவிட்டு நீக்க ஆதரவு தெரிவித்தவர்” என்று குற்றச்சாட்டுச் சொல்கிறார்கள்.

டாக்டர் தமிழரசி (திருச்சி கிழக்கு): முதலில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது தொகுதி மாற்றப்பட்டிருக்கிறார். எனினும் அவர் மீதான சர்ச்சைகள் ஓயவில்லை. இவர் பி.ஹெச்டி வரை படித்திருப்பதாக விருப்ப மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இவர் போலி மருத்துவர் சர்ச்சையிலும் சிக்கியவராம். இது குறித்து தமிழக சுகாதாரத் துறை இயக்குநரிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாம். இவரது கணவரும் அதே போன்று சர்ச்சைக்குள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

வளர்மதி (ஸ்ரீரங்கம்): இவரின் படிப்புச் சான்றுகள் குறித்து தலைமைக்குச் சந்தேகம் வந்துள்ளதாம். கடந்த முறை ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் முறையாக விசாரிக்க கால அவகாசம் இல்லாமல் இருந்தது. இப்போது அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாம் கார்டன்.

மைவிழி (துறையூர்): பாரம்பர்யமான தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவராம். அவரது குடும்பத்தில் ஒருவர் தி.மு.க-வில் துறையூர்  தொகுதிக்கு சீட் கேட்டுள்ளதாகப் புகார் வாசிக்க ஆரமித்துள்ளார்கள் அ.தி.மு.க-வினர்.

பரமேஸ்வரி முருகன் (மண்ணச்சநல்லூர்): இவர் ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் பூனாட்சிக்கு எதிராகச் செயல்பட்டுவந்தாராம். இப்போது பரமேஸ்வரிக்கு சீட் என்றதும், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவருக்கு சீட் தருவதா என சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. வேட்பாளர் மாற்றப்படலாம் என்பதால் செய்வதறியாமல் இருக்கிறாராம் பரமேஸ்வரி.

செல்வராஜ் (முசிறி):
இவர் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சியினரை மட்டுமில்லாமல் அவருடைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் யாருடனும் நல்லது கெட்டதுக்குக்கூடக் கலந்துகொள்ளாதவர். சொந்த சாதிக்காரர்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர். இவரது விஷயங்கள் என்று பல புகைப்படங்கள் உலா வருகின்றன.

பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்): இவர் பி.ஜே.பி-யிலிருந்து 2001-ம் ஆண்டு அ.தி.மு.க-வுக்குள் வந்தார். பாலகிருஷ்ண ரெட்டி மீது உள்ள ஜீப் எரிப்பு வழக்கு பூதாகரமாகி வருகிறது. கடந்த 1998-ம் ஆண்டு பாகலூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்ததைக் கண்டித்து பி.ஜே.பி சார்பில் ஜிமங்கலத்தில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில் பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டார். அப்போது, சமாதானம் செய்யச் சென்ற காவல் துறையினர் வாகனம், மறியலில் ஈடுப்பட்டவர்களால் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாகலூர் போலீஸார், 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில், 78-வது குற்றவாளியாக பாலகிருஷ்ண ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர இவர் மீது இப்போது நில அபகரிப்புப் புகார்களும் கூறப்படுகின்றன.

விஜயபாஸ்கர் (விராலிமலை): முத்தரையர் சமூகப் பிரச்னையில் விஜயபாஸ்கர் மீது தொகுதியில் அதிருப்தி உள்ளது.  மீண்டும் சீட் வழங்கியதால் அந்த சமுதாயத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விராலிமலை தொகுதியில் இரண்டாவது இடத்தில் முத்தரையர் சமூகம் இருப்பதாகவும், அந்தச் சமுதாயத்தினரை ஒன்று திரட்டி அனைவரையும் விஜயபாஸ்கருக்கு எதிராக வாக்களிக்க பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அதிருப்தியாளர்கள் சொல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குமாரசாமி, (பழநி): கடந்த தேர்தலில் சுமார் 1,800 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றியைப் பிடித்தது அ.தி.மு.க. இந்த நிலையில், குமாரசாமியை வேட்பாளராக அறிவித்தது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முஸ்லீம் சமுதாய மக்கள் அதிகமாக வசிக்கும் பழநி தொகுதியில், ஜமாத் நிலத்தை குமாரசாமி ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விவரங்களைத் தோண்டி எடுத்து மேலிடத்துக்குப் புகார் தட்டி வருகிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க-வினர். குமாரசாமி மீது முஸ்லீம் மக்களைப்போலவே, சொந்தக் கட்சியினரும் அதிருப்தியில் உள்ளதால், இன்னும் பணியைத் தொடங்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் (தாம்பரம்): அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளராகத் தொடர்ந்து 13 ஆண்டுகள் வலம் வந்தவர். தென் சென்னை அ.தி.மு.க எம்.பி-யாக இருந்தபோது ‘கோப்ராபோஸ்ட்’ இணைய இதழ் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் 50,000 பணம் பெறுவதாக வீடியோ வெளியாகிப் பரபரப்பானது. மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோனது. தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் மா.செ. பதவிகொடுக்கப்பட்டு, தாம்பரம் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ராஜேந்திரன்.

சிவசுப்ரமணி (ஈரோடு): மாநகர் மாவட்டச் செயலாளரும் மொடக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளருமான சிவசுப்ரமணி மீது தலைமைக்குப் புகார் அனுப்பி வருகிறார்கள். இவர் கடந்த

1996-ம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனுடன் தி.மு.க-வுக்குச் சென்று அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாலகிருஷ்ணனுக்காக முகவராகப் பணியாற்றியவர் என்பதோடு, சிவசுப்ரமணியத்தின் தி.மு.க உறுப்பினர் கார்டையும் அ.தி.மு.க-வினர் தலைமைக்கு அனுப்பிவைத்து இருக்கிறார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்): கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாவட்டச் செயலாளராக இருந்த இவரின் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. இந்தப் பதவிப் பறிப்புக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. நத்தம் விசுவநாதனின் பினாமி, ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்றெல்லாம் செய்திகள் உலாவந்தன. சிட்டிங் எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சிக்கு ஒதுக்கிவிட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி): கரூர் சிட்டிங் எம்.எல்.ஏ-வான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடும்போராட்டத்துக்குப் பிறகு அரவக்குறிச்சி தொகுதியை வாங்கியுள்ளார். தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற கவலை ரேகை அறிவிப்பு வெளியாகும்வரை செந்தில்பாலாஜியின் முகத்தில் தெரிந்தது. பதவி பறிப்பு, தொடர்ச்சியாக புறக்கணிப்பு என தலைமையால் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு உள்ளான நிலையில், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் வரை செந்தில்பாலாஜி மீது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மோசடி புகார்கள் குவிந்தன.  தி.மு.க வசம் உள்ள தொகுதி, செந்தில்பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீட் கிடைக்காத விரக்தியில்  செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் உள்ளடி வேலைகள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களைத் திருப்திபடுத்த அரவக்குறிச்சி வழங்கப்பட்டதாம்.

சந்திரசேகரன் (குளித்தலை):
குளித்தலை தொகுதியில் 6 முறை போட்டியிட்டு நான்கு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம். இப்போது அவரது  மருமகன்  தோகமலை ஒன்றிய சேர்மன் சந்திரசேகரன் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘புரட்சி தலைவி அம்மா அவர்களே, குளித்தலை தொகுதி பாப்பாசுந்தரம் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமா?’ - வருத்தத்துடன் குளித்தலை தொகுதி பொதுமக்கள்’ என்ற துண்டறிக்கைகள் தொகுதியில் அனல் கிளப்புகின்றன.

கீதா (கிருஷ்ணராயபுரம் - தனி):
கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் மணிவண்ணன்,  இவரது மனைவி கீதா, கரூர் மாவட்ட சேர்மனாக  இருக்கிறார்.  இவரது கணவர் மணிவண்ணன்,  சிலமாதங்களுக்கு முன் அவரின் பஞ்சாயத்தில் முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் மீதும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்கள் முன்னாள் கரூர் மாவட்ட ஆட்சியர் ஷோபனாவுக்கு மிக நெருக்கமானவர்கள். அந்த நெருக்கத்தின் மூலம்தான் செந்தில்பாலாஜியால் சேர்மன் ஆக்கப்பட்டார். இப்போது வேட்பாளர் ஆகியிருக்கிறார்.  இதில் அதிர்ச்சியடைந்த அதிமுக-வினர்,  தலைமைக்கு  இவர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் மழை பொழிந்து வருகின்றார்கள்.

புவனேஸ்வரன் (ஸ்ரீ வைகுண்டம்):
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள புவனேஸ்வரனுக்கு கோவை, கரூர், திருப்பூர்,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள நிலமோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதாம். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. புவனேஸ்வரன் மீது காவல் நிலையத்தைச் சூறையாடிய பிரிவின் கீழ் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இவருக்கு எப்படி சீட் கொடுத்தார்கள் என்பது கட்சியினரின் புலம்பலாக இருக்கிறது.

- வீ.மாணிக்கவாசகம், க.பூபாலன், சி.ஆனந்தகுமார், எம்.திலீபன், எஸ்.மகேஷ், எம்.புண்ணியமூர்த்தி, ஆர்.குமரேசன், த.வினோதா, ப.பிரதீபா படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,வீ.சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick