ஏ.சி-யே இல்லாத வேன் முதல்... ஹெலிகாப்டர் வரை!

ஜெ. பிரசார ஃபிளாஷ் பேக்

மேடை முழுவதும் பதினெட்டு டன் ஏ,சி, ஏர் கூலர்... படிக்கட்டுகளுக்குப் பதில் லிஃப்ட்... பறப்பதற்கு ஹெலிகாப்டர் என ஹைடெக் பிரசாரத்துக்கு அடித்தளமிட்ட ஜெயலலிதாவின் ஆரம்பகாலப் பிரசாரம் மிக ‘எளிமை’ ஆக இருந்தது என்றால் நம்பமுடிகிறதா?

எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா ஒரு ஸ்டார் பேச்சாளர். 1984 சட்டசபைத் தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டவர் ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு நடந்த 1989 சட்டசபைத் தேர்தல்தான் ஜெயலலிதா நேரடியாகக் களமிறங்கிய தேர்தல்.

1991 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.டெம்போ வேனில் ஏ.சி வசதி எல்லாம் கிடையாது. வேனில் உட்கார்ந்து பேசியபடியே பிரசாரம் செய்வார். அன்றையப் பிரசாரத்தின் முடிவில் ஒரு ஸ்பாட்டில் மேடையில் ஏறிப் பேசுவார். ஜெயலலிதாவுடன்  வெளிப்படையாக சசிகலா, பிரசாரத்துக்கு வந்தது அந்தத் தேர்தலில்தான். 1996 சட்டசபை தேர்தலில் டெம்போ வேன் கொஞ்சம் மாறியது. பிரசார மேடையும் பிரமாண்டமானது. ஆளுயர கட்-அவுட் கலாசாரம் உச்சத்தில் இருந்த தேர்தல் அது.

2001 சட்டமன்றத் தேர்தலில்தான் டெம்போ வேனில் ஏ.சி பொருத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மட்டும் ஜெயலலிதா மேடையில் தோன்றினார். அனைத்துத் தொகுதிகளிலும் வேன் மூலம் சூறாவளிப் பிரசாரம் செய்தார். டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அப்போது ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுவரையில் வேனில் போய்க்கொண்டிருந்த ஜெயலலிதா, விஷயத்தைக் கேள்விப்பட்டு திறந்த ஜீப்புக்கு மாறினார். ‘‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு.. இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு’’ எனத் திறந்த ஜீப்பில் நின்றபடியே பிரசாரக் களத்தை அதிரவைத்தார்.

2006 தேர்தலில் வேன் இன்னும் நவீனமாக மாறியது. வேனும் மேடையுமாக மாறி மாறிப் பிரசாரம் செய்தார். 2011 தேர்தலில் வேன் முற்றிலும் மாறிப் போனது. சகல வசதிகளை உள்ளடக்கியிருந்தது. ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் வேனில் இருந்தபடியே ஜெயலலிதா வேனின் கூரைப் பகுதிக்கு வந்தார். சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்டு மேற்கூரையும் அமைக்கப்பட்ட அந்த வேனில் அமர்ந்தபடியே பேசினார். அந்தத் தேர்தலில்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்த ஆரம்பித்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேன் பிரசாரத்துக்கு குட்பை சொல்லப்பட்டது. சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து போய் பிரசாரம் செய்தார். தொகுதிகளில் வேன் பிரசாரம் செய்யாமல் மேடையில் மட்டும் பேசிவிட்டுத் திரும்பிவிடுவார். இந்த ஹெலிகாப்டர் பிரசாரத்துக்காக ஆங்காங்கே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. அப்போதையத் தேர்தல் மேடைகளில் நிர்வாகிகள், வேட்பாளர்கள் இருந்தார்கள். இப்போதையத் தேர்தல் மேடைகளில்  ஜெயலலிதா மட்டுமே இருக்கிறார். வேட்பாளர்கள் மேடைக்குக் கீழே கொலு பொம்மைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன், ஜெ.வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick