விவசாய நிலங்களில் ஹெலிபேடு...

ஜெயலலிதா பிரசாரம் ஸ்டார்ட்ஸ்!


 

முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 15-ம் தேதி தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். தன் முதல் பிரசாரக் கூட்டத்தை அருப்புக்கோட்டையில் தொடங்குகிறார். விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். இதற்காக அருப்புக்கோட்டை பைபாஸ் ரோட்டில் நான்கு வழிச்சாலை அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் பிரசார மைதானம், மேடை மற்றும் ஹெலிகாப்டர் வந்து இறங்க, ஹெலிபேடு அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டன.

முதல்வர் ஜெயலலிதாவின் ராசிப்படி, பிரசார மேடைகள் வடக்கு அல்லது தெற்கு திசையை நோக்கி இருக்கும்படி அ.தி.மு.க தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அருப்புக்கோட்டையில் பிரசார மேடை மதுரை செல்லும் பாதையை நோக்கி வடக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்யும் ஹெலிகாப்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட் மற்றும் டெக்னீஷியன்கள், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் ஒவ்வொரு பிரசார பாயின்ட்களுக்கும் சென்று ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக எந்த இடத்தில் ஹெலிபேட் அமைக்க வேண்டும் என்பதை ஆய்வுசெய்து ஓ.கே. சொன்ன பிறகே, அந்த இடத்தில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது.

வழக்கமாக ஜெயலலிதா தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வரும் அ.தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்களுக்கு  ரூ.200-ம் சாப்பாடுக்கு என்று தனியாக ரூ.100-ம் அ.தி.மு.க நிர்வாகிகள் வழங்குகின்றனர். விருத்தாசலம் உயிர்பலியை அடுத்து தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள், பொது மக்களுக்கு போதுமான அளவு சாப்பாடு பொட்டலங்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.  15-ம் தேதி மதுரைக்கு விமானம் மூலம் வரும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அருப்புக்கோட்டை தேர்தல் பிரசார மேடைக்கு அருகேயுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கி, பிறகு காரில் பிரசார மேடைக்குச் செல்கிறார். மதியம் 2 மணிக்கு தேர்தல் பிரசாரம் நடக்கவுள்ளது.

பிரசாரக் கூட்டத்துக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக உயர் அழுத்த மின்சாரத்துக்காக 9 லட்சம் ரூபாய் பணத்தை மின்வாரியத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் செலுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மின்ஒயர்களை அகற்றி கேபிள் இணைப்பு மூலம் மின்சாரம் வழங்கும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே  ஏப்ரல் 18-ம் தேதி ஜெயலலிதா பிரசாரம் செய்ய உள்ளார். அதில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார்.

பொதுக்கூட்டத்துக்காக வாலாஜாபாத் - படப்பை இடையே உள்ள வாரணவாசியில் 40 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜெயல லிதாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக தாழையம்பட்டு கிராமத்தில் ஹெலிபேடு அமைக்கப்படுகிறது. 150 அடிநீளம், 150 அடி அகலத்தில் ஹெலிபேட், அதைச்சுற்றி சுமார் 40 அடி அளவுக்கு ரோடு போடும் பணியும் நடைபெறுகிறது. 45 அடி அகலமும் 75 அடி நீளமும் 23 அடி உயரமும் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மேடைக்கும் ஹெலிபேடுக்கும் உள்ள 400 அடி தொலைவுக்குப் புதிய சிமென்ட் சாலை போடப்படுகிறது. இதற்கான பூமி பூஜை கடந்த  11-ம் தேதி நடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்கள் அந்த தளத்தில் இறங்கப்போகின்றனவாம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படப்போகும் அந்த ஹெலிபேடு மற்றும் சாலைகளுக்கான செலவு, சுமார் 50 லட்சம் என்று வாயைப் பிளக்க வைக்கிறார்கள்.

அந்த இடத்துக்கு நாம் சென்றபோது, பயிரிடப்பட்ட விவசாய நிலத்தில் டாராஸ் வண்டிகளில் ஜல்லியைக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். கேமராவை அந்தப் பகுதிக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்து ஹெலிபேடு அமைக்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. ஹெலிபேடு அமைப்பதற்காக விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படுவதும், குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 34 இடங்களில் ஹெலிபேடுகள் உருவாக்கப்பட்டன. இதற்காக 5 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரத்து 223 ரூபாய் செலவழித்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க சார்பில்  செலவுக்கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

- பா.ஜெயவேல், எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், தே.அசோக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick