அ.தி.மு.க. இ.பி.கோ. லிஸ்ட்!

நில மோசடி... ஊழல்... கடத்தல்... பாலியல்... ரவுடிகள் தொடர்பு... கஞ்சா...

பொதுமக்களை ஏமாற்றுவது, பிறர் சொத்துக்களை அபகரிப்பது, சாராயம் காய்ச்சுவது எனச் சட்டத்துக்குப் புறம்பான பல காரியங்களைச் செய்யும் பலருக்கும் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகப் புகார்கள் குவிந்து வருகின்றன. சென்ற இதழில் வெளியிட்டது போக, இந்த இதழிலும் வேட்பாளர்கள் மீதான புகார் பட்டியல் தொடர்கிறது.

பழனி (ஸ்ரீபெரும்புதூர்):இவர் மவுலிவாக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்துக்கு அனுமதி வழங்கிய சேர்மன். தனது பார்ட்னர் சத்தியநாராயண ராவ் என்பவர் மூலம், கார்டனில் பணிபுரியும் ஒருவரின் உதவியால் சீட் பெற்றுள்ளாராம். குன்றத்தூர் சாலையில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை கார்டன் நபரின் மனைவிக்கு எழுதிக் கொடுத்துதான் சீட் வாங்கி உள்ளதாகவும் ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது. ஏற்கெனவே, இவர் மீது முறைகேடுகள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கார்டனுக்குப் புகார்கள் பறக்கின்றன.

ஏழுமலை (பூந்தமல்லி): இவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்று புகார் சொல்லப்படுகிறது. இவரும், 1982 முதல் 1993 வரை சாராயத் தொழில் செய்தவர்தான் என்கிறார்கள். இவர் மீது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு காவல்நிலையம் ஆகியவற்றில் போடப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. திருவள்ளூர் அ.தி.மு.க செயலாளர் எம்.சி.சந்திரனை பொது இடத்தில் இழிவாகத் திட்டி, தாக்குதல் நடத்த முயற்சித்தது தொடர்பாக, திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஏழுமலை மீது நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

முனுசாமி (வேளச்சேரி): இவர், ‘‘சோழிங்கநல்லூரில் பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தமான கட்டடத்தை ஆக்கிரமித்தார். அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, அதை தன் கார் பார்க்கிங் ஆகப் பயன்படுத்தி வருகிறார்.” என்று அதே ஊரைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில், முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. இருந்தாலும், அ.தி.மு.க-வினர் முனுசாமி மீது கார்டனுக்குப் புகார்களை அனுப்பி வருகின்றனர்.

சத்ய நாராயணன் (தி.நகர்): வடபழனியில் வருமானவரித் துறை வழக்கில் சிக்கி, விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட சொத்தை வாங்கியதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. இவரது மகள் கவிதா பெயரில், 96 லட்சம் ரூபாய்க்கு, 2013 ஜூன் 26-ம் தேதி இந்த சொத்தை வாங்கினார். அதன் பின், இந்தச் சொத்தை தன் பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரம் வாயிலாக மாற்றினார். இந்த சொத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாயாக காட்டப்பட்டு உள்ளது. சந்தை நிலவரப்படி, நான்கு கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்து. வருமான வரி வழக்கில் உள்ள சொத்து, வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப ஏலம் விடப்படும் அல்லது கட்டப்படாத வருமான வரிக்குப் பதிலாக, துறையே எடுத்துக் கொள்ளலாம். இதுகுறித்து சத்யா மீது கார்டனுக்கு புகார் அனுப்பியுள்ளனர். மேலும், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராணி என்பவருடைய வீட்டை சத்யா, ஏமாற்றி வாங்கியதாகவும் கார்டனுக்கு புகார் போயிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்