மிஸ்டர் கழுகு: பேனாவை தூக்கி வீசிய கருணாநிதி!

ஸ்டாலினின் ‘ஒன் மேன்’ லிஸ்ட்!

பெருமிதத்தோடு உள்ளே வந்தார் கழுகார். சர்க்கரைப் பொங்கல் பரிமாறினோம்.

‘‘துர்முகி ஆண்டுக் கொண்டாட்​டமா?” என்றார். “தி.மு.க வேட்பாளர்  பட்டியலை முந்தித் தந்ததற்கான கவனிப்பு. நீர் சொன்னதில் 113 தொகுதிகள் மிகச் சரியாக இருந்தன. நிறைய வாசகர்கள் நமக்கு போன் செய்து இதனைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கழுகாருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவிக்கச் சொன்னார்கள்” என்றோம்.

சர்க்கரைப் பொங்கலை ஒரு வில்லம் எடுத்து விழுங்கியபடியே, “அதற்குள் எண்ணி வீட்டீரா? 113 தொகுதிகள் என்பது சரிதான். நான்  சொன்னதில் தொகுதியும் நபரும் சரியாய் இருந்தது. நான் குறிப்பிட்டிருந்த ஆட்களுக்கு, சொல்லி இருந்த தொகுதி இல்லாமல்  வேறு தொகுதிகளைக் கொடுத்துள்ளார்கள். தாயகம் கவிக்கு எழும்பூர் என்று சொல்லி இருந்தேன். திரு.வி.க. நகர்    தரப்பட்டுள்ளது. தியாகராயர் நகர் தொகுதியில் நான் குறிப்பிட்ட கு.க.செல்வம் ஆயிரம் விளக்கிலும் பல்லாவரம் என்று  சொல்லியிருந்த, தா.மோ.அன்பரசன் ஆலந்தூரிலும் மாறி இருந்தது. மதுராந்தகம் என்று குறிப்பிட்டு இருந்த டாக்டர் அரசு செய்யூரிலும் வேப்பனஹள்ளி என்று சொல்லப்பட்ட, செங்குட்டுவன் கிருஷ்ணகிரியிலும், கோவை வடக்கு என்று சொல்லப்பட்ட  கார்த்தி, சிங்காநல்லூரிலும் உசிலம்பட்டியில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்ட சேடப்பட்டி முத்தையாவின் மகன்  மணிமாறன் திருப்பரங்குன்றத்திலும் போட்டியிடுகிறார்கள். சொன்ன ஆட்கள் சரி; ஆனால், அவர்களுக்குப் பக்கத்துத் தொகுதியில் பந்தி போடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 120 தொகுதிகளுக்கு மேல் சரியாக இருந்துள்ளன. இந்தப் பட்டியல் தாங்கிய  ஜூ.வி 12-ம் தேதி ரிலீஸ் ஆனது. தி.மு.க தனது அதிகாரப்பூர்வ பட்டியலை 13-ம் தேதி மாலையில் வெளியிட்டுவிட்டது. “12-ம் தேதி ஜூ.வி வெளியானதும் அதை வாங்கிய உடன்பிறப்புகள், ‘அவருக்குக் கிடைச்சிருக்கு; இவருக்குக் கிடைக்கல;  அவருக்கு எப்படி கொடுக்கலாம்; இவருக்கு ஏன் கொடுக்கல’ என்று அண்ணா அறிவாலயத்தில் பேசிக்கொண்டிருந்ததைப்  பார்க்க முடிந்தது. அந்த அளவுக்கு நாம் வெளியிட்ட பட்டியல் பரபரப்பைக் கிளப்பிவிட்டது’’ என்று விவரித்தார்.

“தி.மு.க வெளியிட்ட பட்டியல் எப்படி?’’ என்றோம்.

‘‘இதே கேள்வியை தி.மு.க-காரர் ஒருவரிடம் கேட்டேன். ‘நிறைய புதுமுகங்களுக்குக் கொடுத்திருக்காங்க. பழைய முகங்களும் அப்படியே இருக்கு. நாங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திட மாட்டோம்ல’ என்றார். டாக்டர்கள் பரிமளம், கனிமொழி, ஆர்.டி.அரசு, அஞ்சுகம் பூபதி, ஸ்ரீபிரியா, தேன்மொழி என்று புதுமுகங்களைப் பார்க்க முடிகிறது. பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதியில்  நிற்கிறார். தாயகம் கவி, இ.பரந்தாமன் என   புதுமுக  வழக்கறிஞர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், பழைய நந்திகள் விலகவில்லை.”
“இது தி.மு.க-வில் வழக்கம்தானே?”

“ஸ்டாலின் வந்தால் மாற்றம் வரும் என்று நினைத்த பலரும் சோர்வடைந்து போனார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த குறுநில மன்னர்களுக்கு எழுதி வைக்கப்பட்டனவோ, அதே குறுநில மன்னர்கள் தங்கள் ராஜ்யங்களை  விட்டுத்தரத்  தயாராக இல்லை. கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன்,  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.பி.பி.சாமி, மூக்கையா, சுரேஷ்ராஜன் என்று இந்தப் பட்டியலிலும் அதே மன்னர்களின்  ஆதிக்கம் இருக்கிறது.  இதைவிட முக்கியமாக வாரிசு அரசியல் தலைதூக்கி ஆடுகிறது. சு.ப.தங்கவேலனின் மகன், சேடப்பட்டி முத்தையாவின் மகன், வீரபாண்டி அறுமுகத்தின் மகன், டி.ஆர்.பாலுவின் மகன், தர்மபுரி மனோகரனின் மகன், ஆரணி சிவானந்தத்தின் மகன் என்று வாரிசுகள் பட்டியல் ரொம்ப நீளம். அப்பா திண்டுக்கல் பெரியசாமி ஆத்தூரில் போட்டியிடுகிறார். மகன் செந்தில்குமார் பழநியில் போட்டியிடுகிறார். ‘வேற ஆளே இல்லையா?’ என்கிறார்கள். கட்சியில்  அந்த அளவுக்கு ஐ.பெரியசாமி குடும்ப ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. ‘ஐ.பி-க்கு கொடுத்தது ஸ்டாலின் கோட்டா. ஐ.பி மகனுக்குக் கொடுத்தது துர்கா கோட்டா’ என்றும் சொல்கிறார்கள்.”

“கோபாலபுரத்தில் அப்பாவும் மகனும் விட்டுக்கொடுத்தார்களா? திண்டுக்கல்லில் விட்டுத் தருவதற்கு?”

“அதுதானே! தனக்கு வாங்குவது வாரிசுகளுக்கு வாங்குவதுகூட சொந்தப் பிரச்னை. ஆனால், தங்கள் அரசியல் எதிரிகளை வீழ்த்துவதில் இந்தக் குறுநில மன்னர்கள் இன்னும் துடித்துக் கிடந்தார்கள்.’’

‘‘அது என்ன?’’

“கலசப்பாக்கத்தை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டு, திருவண்ணாமலை ஸ்ரீதர் போட்டியிட வாய்ப்பு இல்லாதது மாதிரி பார்த்துக் கொண்டாராம் எ.வ.வேலு. விழுப்புரத்தை முஸ்லீம் லீக்குக்கு தாரைவார்த்துவிட்டு தனது எதிரிகளுக்குப் போய்விடாத  மாதிரி பார்த்துக்கொண்டாராம் பொன்முடி. மணப்பாறை தொகுதியை முஸ்லீம் லீக் கேட்கவே இல்லை. நேரு அதைத் தாரை வார்த்துவிட்டு சல்மாவுக்கு வாய்ப்பு இல்லாதது மாதிரி பார்த்துக்கொண்டார். தொகுதிகளை தாரை வார்த்தவர்கள், குறிப்பிட்ட தொகுதியில் தனது எதிரிகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத மாதிரி பார்த்துக்கொண்டார்களாம்.’’

“விழுப்புரம், பொன்முடியின் சொந்த தொகுதியாச்சே?’’

‘‘அ.தி.மு.க சார்பில் சி.வி. சண்முகம் நிற்கிறார் என்றதும் பொன்முடிக்கு உதறல் எடுத்துவிட்டது. அவர் திருக்கோவிலூர் தொகுதிக்குப் போய்விட்டார். வானூர் தொகுதி, பொன்முடிக்கு பிடிக்காத புஷ்பராஜுக்கும் விக்கிரவாண்டி தொகுதி, பொன்முடிக்கு ஆகாத அந்நியூர் சிவாவுக்கும் முடிவாகி இருந்ததாம். இந்த இரண்டு பேரையும் சமாளிக்க முடியாது என்று நினைத்த பொன்முடி, கருணாநிதிக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதி இருக்கிறார். ‘தனது அரசியல் எதிர்காலமே இந்த இரண்டு தொகுதிகளில்தான் இருக்கிறது’ என்று அதில் உருக... அந்தக் கடிதத்தை ஸ்டாலினிடம் தந்துள்ளார் கருணாநிதி. உடனே புஷ்பராஜுக்கு பேசிய ஸ்டாலின், ‘இந்த தடவை நீங்க விட்டுக் கொடுங்க. லோக்கல் ஆளைப் போடுவோம், என்று வானூர் தொகுதியில் மைதிலி என்பவரை நிறுத்தினார்கள். ‘இந்த லாஜிக் விக்கிரவாண்டி தொகுதிக்கு இல்லையா. வெளியூர்காரரான ராதாமணியை எப்படி விக்கிரவாண்டியில் நிறுத்தலாம்?’ என்று கேட்கிறது பொன்முடியின் எதிர்கோஷ்டி.”

‘‘சொல்லும்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்