“தலைவர் உண்டு... தனிநபர் ஆதிக்கம் இல்லை!”

இதுதான் மாற்றம் என்கிறார் சி.மகேந்திரன்!

க்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு அந்தக் கூட்டணியின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஆட்சி மாற்றத்தோடு அரசியல் மாற்றமும் வேண்டும் என்று கிளம்பி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் இலக்கு பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரனிடம் கேட்டோம்.

‘‘அரசியல் மாற்றம் என்று எல்லோரும்தானே சொல்கிறார்கள்?”

‘‘அரசியல் மாற்றம் என்பதற்கு, ஒரு முதலமைச்சரை மாற்றிவிட்டு, மற்றொருவரை நாற்காலியில் அமர்த்துவது என்ற அர்த்தம் மட்டுமே, தமிழக அரசியல் அகராதியில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம், அரசியல் ஜனநாயகம், உள்கட்சி ஜனநாயகம் என்ற அடிப்படைப் பண்புகள்  முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. உண்மையான ‘அரசியல் மாற்றம்’ என்பது அடிப்படையான மாற்றமாக இருக்க வேண்டும்.”

‘‘நீங்கள் சொல்லும் மாற்றத்தை நோக்கிச் செல்லும் பாதையில், தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகள் இருக்கின்றனவா?”

 ‘‘கூட்டணியின் தலைவராக,  தேர்ந்தெடுக்கப் படுகிறவரின் முழுக் கட்டுப்பாட்டில்தான் அந்தக் கூட்டணியே இருக்கும் என்ற நிலையை தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணி முதற்கட்டமாக மாற்றியமைத்துள்ளது. விஜயகாந்துக்கு 104 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதைவிடக் கூடுதலாக, அணியில் இடம்பெற்றுள்ள மற்றக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பங்கீடு மிக முக்கியமானது. இது ஒரு புதிய ஜனநாயக முறை. அதோடு,  தலைவர் வேண்டும், ஆனால், தனிநபர் ஆதிக்கம் கூடாது என்ற அடிப்படையில் தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி-த.மா.க. அணி வடிவம் பெற்றுள்ளது. இங்கு தலைவரின் பணி, கூட்டுச்செயல்பாடுகளின் வெளிப்பாடாக இருக்கிறது.”

‘‘தி.மு.க - அ.தி.மு.க அணியிலும்  கடந்த காலங்களில் இதுபோன்ற தொகுதிப் பங்கீடு நிகழ்ந்துள்ளதே?”

‘‘அ.தி.மு.க அணி என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. அந்த அணியை நீங்கள் ஒரே கட்சியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.  பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பல கட்சிகள் அ.தி.மு.க அணியில் கடந்த காலங்களிலும் (இப்போதும்கூட) இணைந்துள்ளன; இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மழை வெள்ளத்தின்போது, கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் அனைத்திலும், அம்மா ஸ்டிக்கர் ஒட்டப் பட்டதைப்போல், அந்த அணியில் இணைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இரட்டை இலை ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதைப்போல, தி.மு.க அணியைப் பொறுத்த வரையில், அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை வழிமொழியக்கூடிய உறுப்பினர் களாகத்தான், மற்றக் கட்சிகள் அந்த அணியில் இருக்க முடியும். அதனால், அது, அரசியல் மாற்றத்தைக் கொண்டு வராது.”

 ‘‘மக்கள் நலக்கூட்டணி, விஜயகாந்துடன் இணைந்தது கடுமையான விமர்சனத்தை உருவாக்கி உள்ளதே?”
 
‘‘தனிநபர் புகழ், தனிநபர் பெருமை என்பவை ஊதிப்பெருத்துவிட்ட இன்றைய காலத்தில், அதை மாற்றுவதற்கான அடுத்த மாற்றுதான் மக்கள் நலக்கூட்டணி. இருக்கின்ற அமைப்பை மாற்றுவதற்கான, மாறுதல் காலத்தில்(Transition period) சில நடைமுறைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஜெயலலிதா-கருணாநிதி, தி.மு.க-அ.தி.மு.க என்பதில் இருந்து மாறுவதற்கு, சில புதிய நிலைமைகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.  இதைப் புரிந்து கொள்ளாமல், ‘கூட்டணியின் பெயரை விஜயகாந்த் கூட்டணி என்று மாற்றிவிட்டனர்’, ‘விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டனர்’  என்பதை மையப்பிரச்னை யாக மாற்றி, மாற்றங்களையே தவிர்க்கச் சொல்வது ஒருவகையான சூழ்ச்சி; அது ஒரு சதி.”

‘‘மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது சரியா?”

‘‘குறிப்பிட்ட வரலாற்றுக்காலத்தில், நன்கு அறியப்பட்ட அரசியல் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். ஒரு இடத்தில் போட்டியிட்டு வென்றவருக்கு, எதிர்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரம் வரை மக்கள் அளித்தனர். தமிழகத்தில், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை அவர் தனியாக நின்று பெறமுடிகிறது. தி.மு.க-அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளை எதிர்த்தே அந்த வாக்குகளை அவர் வாங்குகிறார்.

அதனால், அவரை மக்கள் நலக்கூட்டணி ஏற்றுக்கொண்டது. ஒரு அரசியல் தலைவராக விஜயகாந்த்துக்கு கிடைத்திருக்கக்கூடிய வெகுஜன அங்கீகாரத்தை மக்கள் நலக்கூட்டணி ஏற்றுக் கொள்கிறது என்றுதான் நீங்கள் அதனைப் பார்க்க வேண்டும்!”

- ஜோ.ஸ்டாலின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்