“உறுப்பினர் கார்டு இல்லாதவர்களுக்கு எல்லாம் தொகுதியா?”

தி.மு.க-வைத் தெறிக்கவிடும் அதிருப்தியாளர்கள்

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தி.மு.க தலைமையால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலருக்கும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ‘கட்சிக்காக உழைப்பவர்களுக்கு சீட் இல்லையா?’, ‘செல்வாக்கு மிக்கவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும்தான் சீட் கொடுப்பீர்களா?’ என தி.மு.க-வில் ஒரு பகுதியினர் ஆங்காங்கே சாலை மறியல், தீக்குளிப்பு முயற்சி, தர்ம அடி என போராட்டங்களில் ஈடுபட்டனர். அதுபற்றி ஓர் அலசல்...

நக்கீரா... நீதி சொல்!

ஆலங்குடி: இந்தத் தொகுதிக்காக மெய்யநாதன் நேர்காணல் சென்று வந்தார். நேர்காணலுக்குப்பின், தொகுதி முழுவதும் பிரசாரத்தைத் தொடங்கினார். பிரசாரத்துக்காக புதிய ஜீப் ஒன்றையும் வாங்கினார். ஆனால், டாக்டர் சதீஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் திருச்சியில் வசிப்பவராம். ஆலங்குடி உடன்பிறப்புகளுக்கு இவர் யாரென்றே தெரியாதாம். அதிருப்தியடைந்த மெய்யநாதனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தெற்கு மாவட்டச் செயலாளர் கே.பி.கே.தங்கவேலுவுக்கு எதிராகக் கருப்பு கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். சாலைமறியல், துண்டுப்பிரசுர விநியோகம், எதிர்ப்புப் பதாகைகள் வைத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட அதிருப்தியாளர்கள், தீக்குளிக்கவும் முயன்றனர். கட்சி அலுவலகத்தைப் பூட்டியும் போராட்டம் நடத்தினர். ‘நீதி சொல்... நீதி சொல்’ என்று கோஷமிட்டவாறு, 2000-க்கும் மேற்பட்டோர், கீரமங்கலம் நக்கீரர் சிலையிடம் மனுக் கொடுத்தனர். அடுத்து மொட்டையடிக்கும் போராட்டம், உள்ளிட்ட பல போராட்டங்களைத் தொடர்ச்சியாக அறிவித்துள்ளனர்.

பொன்முடிக்கு எதிராக...

திருக்கோவிலூர்: வழக்கமாக விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திருக்கோவிலூருக்கு மாறியிருக்கிறார். இதனால், இந்தத் தொகுதியை எதிர்பார்த்த முன்னாள் எம்.பி-யான சங்கரன் உள்ளிட்ட உள்ளூர் தி.மு.க-வினர் கடுப்பில் இருக்கிறார்கள். பொன்முடிக்கு எதிராக வேலை செய்வது என்று அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

வானூர்: கடந்த முறை இங்கு வெற்றிவாய்ப்பை இழந்த புஷ்பராஜ், தமக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். பொன்முடியின் ஆதரவாளரான மைதிலி ராஜேந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டதால், புஷ்பராஜ் ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி: வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாமணி, பொன்முடியின் கல்லூரி நண்பராம். கட்சிப் பணி எதுவும் செய்யாத ராதாமணியை, பொன்முடி சிபாரிசு செய்து நிறுத்தியிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் டென்ஷனில் இருக்கிறார்கள். வேட்பாளரை மாற்றவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று சொல்லி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை: கடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு இந்தத் தொகுதி போனது. இந்த முறை கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்குக் காரணம் பொன்முடி என்கிறார்கள். போன முறையும், இந்த முறையும் இந்தத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளரான குமரகுரு, பொன்முடியின் உறவினர். அவரை வெற்றிபெற வைப்பதற்காக, வன்னியர் அதிகமுள்ள இந்தத் தொகுதியை கடந்த முறை வி.சி.க-வுக்கும், இந்த முறை ம.ம.க-வுக்கும் ஒதுக்க பொன்முடி ‘வேலை’ செய்தார் என்கிறார்கள். இந்த முறை உளுந்தூர்பேட்டை உடன்பிறப்புகள் போர்க்கொடி தூக்கியதால், இந்தத் தொகுதியைத் தி.மு.க-வுக்கு ம.ம.க விட்டுக்கொடுத்துவிட்டது. தி.மு.க சார்பில் வசந்தவேல் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்