“ரமணா பாணியில் ஊழலை ஒழிப்போம்!”

‘மதுரை மருமகள்’ பிரேமலதா அதிரடி

“இன்று மீனாட்சி திருக்கல்யாணம். இந்த நன்நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நான் மதுரையின் மருமகள். அந்த உரிமையோடு உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். என்னைப் பெண் பார்க்க கேப்டன் வந்தபோது, ‘மீனாட்சி திருவிளையாடல்’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்தார். எங்கள் திருமண போஸ்டர்களில்கூட, அந்தப் படத்தில் நடித்த நடிகை ராதாவின் முகத்தை எடுத்துவிட்டு, என் முகத்தை வைத்து பலர் திருமண வாழ்த்துச் சொல்லி இருந்தனர். கேப்டனுக்கு அந்தப் படம் ஃபிக்ஸ் ஆன பிறகுதான், திருமண யோகம் பிறந்தது என்று என் மாமியார் சொல்வார். அது, என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது” என்று நெகிழ்ச்சியோடு மதுரையில் பிரசாரத்தைத் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்.

மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் முஜிபுர் ரகுமானை ஆதரித்து புதூர் பஸ் நிலையம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நான், மதுரையின் கலாசாரத்தை 25 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறேன். மீனாட்சி திருக்கல்யாணம் நாளில் புது மஞ்சள் கயிறு கொண்டு தாலியை மாற்றிக் கொள்வேன். நான் மதுரை மல்லியைத்தான் எப்போதும் விரும்பிச் சூடிக்கொள்வேன்” என்று மதுரை மக்களை கவரும்படி பேசினார்.

“செல்லூர் ராஜு ஒரு செல்லாக்காசு. தன் பெயரில் மட்டும் செல்லூரைச் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், செல்லூர் மக்களுக்கு எதுவுமே செய்வதில்லை. அதனால்தான், தொகுதிக்குள் சென்றால், அவர் குடங்களால் அடிவாங்குகிறார். ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை. இந்தத் தொகுதியில் குடிநீர் வசதிகூட இல்லை. ஆனால், தே.மு.தி.க ஆட்சிக்கு வந்தால் கண்மாய்கள் சீரமைக்கப்படும், பாதாளச் சாக்கடை உட்பட அனைத்து அடிப்படை வசதி களும் செய்துகொடுக்கப்படும். அ.தி.மு.க அரசால் கிடப்பில் போடப்பட்ட பாலங்கள் சீரமைக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் உணவு வழங்கப்படும். குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு வீடு தேடி பொருட்கள் வழங்கப்படும். ரமணா பாணியில் ஊழலை ஒழிப்போம். தமிழ்நாட்டில் இருந்து ரவுடிக் கட்சிகள் அகற்றப்படும். இவற்றை எல்லாம் கறுப்பு எம்.ஜி.ஆர் கண்டிப்பாகச் செய்து முடிப்பார்.

‘துளசி வாசம் மாறினாலும் மாறும். ஆனால், கறுப்பு எம்.ஜி.ஆரான தவசி, வார்த்தை மாறமாட்டார். கேப்டனோடு இருக்கும் கட்சிகள் பணமில்லாத கட்சிகள். ஏழைகளின் துன்பங்களை அறிந்து வேலை செய்பவர்கள் அவர்கள். எனவே அனைவரும், முரசு சின்னத்தில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அடுத்ததாக, மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா பிரசாரம் செய்தார். அது, தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜன் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதி. பெயரைக் குறிப்பிடாமல், சுந்தர்ராஜனை மறைமுகமாக அடித்துத் துவைத்தார்.  “துரோகிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சில நாட்களுக்கு முன், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று மேடையில் நான் பேசிக் கொண்டிருந்தபோதே, ஒருவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பணப்பெட்டி வாங்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அவர். கடவுள் இருக்கிறார் என்று அந்தத் தருணத்தில் உணர்ந்தேன். தவறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் விடமாட்டார்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் பாவம். அவர்களுக்கு மக்கள் ஓய்வு கொடுக்கவேண்டும். ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக்கொள்ள யாரும் விரும்பவில்லை. ஏன், அவரது குடும்பத்திலேயே யாரும் அதை விரும்பவில்லை. அம்மையாரின் 110 வாக்குறுதிகள் எல்லாம் கானல்நீராகப் போய்விட்டன. மதுரையில் வணிக வளாகம், கார் ஸ்டாண்டு, தமிழ்த்தாய் சிலை எல்லாமே டம்மி வாக்குறுதிகள். இலவச மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் காயிலாங்கடைக்குப் போய்விட்டன. அதனால், தமிழ்நாட்டுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம். பீருக்கும் பிரியாணிக்கும், பணத்துக்கும் யாரும் ஓட்டு போடாதீர்கள். உண்மையில் மக்களுக்காகச் செயல்படும் கட்சிக்கு வாக்களியுங்கள். அந்த வகையில், தே.மு.தி.க-வுக்கு ஒருமுறை அனைவரும் ஓட்டு போடுங்கள்” என்று பேசினார்.

பிரேமலதா புறப்பட்டுவிட்டார்.

-சே.சின்னதுரை, படம்: வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick