‘‘7 கோடி கொடுத்து சீட் வாங்குறாங்க... 15 கோடி சம்பாதிக்கிறாங்க!’’

வைகோ காட்டம்

வைகோ வாகனம் தேர்தலுக்காக மட்டும் கிளம்புவது அல்ல. அவரைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். அவரது வாகனம் எப்போதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருப்பதுதான். இதோ இப்போதும் தயார் ஆகிவிட்டார் வைகோ!

ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, சென்னை அண்ணா நகரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைக் கடந்த 16-ம் தேதி காலையில் தொடங்கினார். அவரது வீட்டுக்கு வெளியே தெற்குத் திசையைப் பார்த்து நின்ற பிரசார வேனில் வைகோ ஏற, தொண்டர்களின் முழக்கங்களுடன் வேன் புறப்பட்டது. எம்.ஜி.ஆர் காலனியில் அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடைக்கு அருகே இருந்த முத்துமாரியம்மன் ஆலயம் முன்பாக வேன் நின்றது. வைகோவுக்கு கோயில் அர்ச்சகர் மாலையிட்டு, பூரணக் கும்ப மரியாதை செய்தார். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அதை, புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட வைகோ, அங்கிருந்து பிரசார மேடைக்குச் சென்றார். அந்த மேடையில் தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா ஆகிய கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

“தமிழின் முதல் எழுத்து அகரம், அ. எங்களை இயக்குகிற அண்ணாவின் முதல் எழுத்து அ. எங்கள் பிரசாரம் தொடங்க உள்ள அண்ணா நகரின் முதல் எழுத்து அ...” என்று அடுக்குமொழி பாணியில் பேச்சைத் தொடங்கினார் வைகோ. அதன்பின், தனக்கு அளிக்கப்பட்ட கும்பமரியாதை பற்றி விளக்கம் அளித்தார். “நான் பகுத்தறிவாளன். ஆனால், பெரியாரே குன்றக்குடி அடிகளார் விபூதி கொடுத்தபோது, அதை வாங்கிக்கொண்டார். ஆகவே நானும், கோயில் அர்ச்சகர்களின் அன்புக்கு மரியாதை செய்து அதை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

“என் வாழ்நாளில் எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் என் தாய் மாரியம்மாளிடம் ஆசி வாங்கிவிட்டுத்தான் செல்வேன். அன்புத் தலைவர் பிராபகரனை சந்திக்கப் போனபோதும் கூட, என் தாயிடம் ஆசி வாங்கிவிட்டுத்தான் சென்றேன். நான் தேர்தல் களங்களுக்குப்போகும் போதெல்லாம் என் தாய் உயிரோடு இருந்தார். இன்று அவர் உயிரோடு இல்லை. நான் தோற்ற காலங்களில் எல்லாம் அவர் மனதுக்குள் கவலைப்பட்டாலும், எனக்குத் தைரியம் ஊட்டினார். வெற்றிபெறும் காலம் வரும்போது, அதைப் பார்க்க என் தாயார் உயிரோடு இல்லை. முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பு, என் தாய் ஆசி கூறுவதுபோல நினைத்துத்தான் நிற்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

“ஏழு கோடி ரூபாய் செலவு செய்து சீட் வாங்கி ஜெயிக்க ஒருவன் நினைத்தால், அவன் 15 கோடி சம்பாதிக்க ஆசைப்படுகிறான் என்று அர்த்தம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம். படித்த இளைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்குவோம். கல்விக்கடனை அரசே செலுத்தும். சிறு வணிகர்களைப் பாதுகாப்போம். மீனவர்கள் பிரச்னைக்காக மத்திய அரசிடம் வாதாடுவோம். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, கடன்களை ரத்து செய்வோம். தமிழக வாழ்வாதாரங் களைக் காப்போம்” என பட்டியலிட்டார்.

“எங்கள் கூட்டணியில், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எதில் உடன்பட முடியுமோ, அதில் உடன்படுவோம். அதற்காகத்தான் கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலை ஒழிப்பது என்பது கூட்டணியில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த இலக்கு. மதுவை ஒழிப்பது எங்கள் நோக்கம். மதுவிலக்கு பற்றிப் பேச எனக்குத் தகுதி உண்டு. மதுபான ஒழிப்பைப் பற்றிப்பேச ஜெயலலிதாவுக்குத் தகுதி கிடையாது. ‘மதுவை ஒழிப்பேன்’ என்று கலைஞர் சொல்வது மக்களை ஏமாற்றும் வேலை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்