அழகிரிக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை!

சொல்கிறார் பி.டி.ஆர். வாரிசு

தாத்தா பி.டி.ராஜன், ‘சென்னை ராஜதானியின் பிரிமியர்’ எனப்படும் முதலமைச்சராக இருந்தவர். அப்பா பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தமிழக சட்டமன்ற சபாநாயகராகவும் அமைச்சராகவும் இருந்தவர். பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் பழனிவேல்ராஜனின் மகன் பி.டி.ஆர்.பி.தியாகராஜன். மதுரை மத்தியத் தொகுதி தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்கப்பட்டு உள்ளார் தியாகராஜன். அவரை மதுரையில் சந்தித்தோம்.

“உங்கள் தந்தை கடந்த 2006-ம் ஆண்டு இறந்தபோது உங்களைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க தலைமை அழைத்தது. அப்போது மறுத்த நீங்கள், இப்போது அரசியலுக்கு வருவதன் நோக்கம் என்ன?”


“நான் கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கிறேன். என் தந்தை இறந்த சமயத்தில், தலைவர் கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்தார். அப்போது, என்னுடைய குடும்பச் சூழலால் என்னால் அரசியலுக்கு வரமுடியவில்லை. எனது அப்பா விட்டுப்போன இடம் அப்படியே இருக்கிறது. அதை நிரப்ப வேண்டும். அவர் செய்ய நினைத்த காரியங்களைச் செய்ய வேண்டும். அவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இவைதான் என்னுடைய லட்சியம்.  இனிமேல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. எங்கள் குடும்பச் சொத்துக்கள் பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்து இருக்கும். என் தாத்தா, அப்பாவைப்போல ஒரு பண்பாளராக இருந்து மக்களுக்கு உதவ  வந்திருக்கிறேன்.”

“வெளிநாட்டில் வசித்து வந்த உங்களால், இங்கிருக்கும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியுமா?”

‘‘உண்மைதான். படித்து முடித்ததும் என்னுடைய சொந்தக்காலில் நிற்பதற்காக வெளிநாட்டில் போய் மேற்படிப்பு படித்துப் பணிபுரிந்தேன். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு, எனது அப்பா மற்றும் எனது குடும்பத்தின் பின்னணி குறித்துத் தெரியாது. எனது சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்து பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்தேன். இங்கிருக்கும் அரசியல் நிலவரங்களை அறிந்துதான், இப்போது தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறேன். அமெரிக்க குடியுரிமையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். மதுரைதான் எனது சொந்த ஊர். எனது மனைவி வெளிநாட்டுக்காரர். அவருக்கும் எங்கள் குடும்பச் சூழ்நிலை தெரிந்திருக்கிறது. அதனால் அவரும் எனக்கு ஆதரவு தருகிறார். ‘படித்த ஒருவர் எம்.எல்.ஏ-வாக வந்தால், மக்களுக்கு நல்லது செய்வார்கள்’ என்று மதுரை மக்கள் எதிர்பார்கிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கிறேன்.”

“மதுரை மத்திய தொகுதி முழுவதும் அழகிரியின் ஆதரவாளர்கள் நிறைந்து இருக்கிறார்கள். எப்படித் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறீர்கள்?”


“மத்திய தொகுதியில் இருக்கும் பெரும்பாலான வட்டச் செயலாளர்களை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். எங்கள் குடும்பத்தை இங்கு இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும். அழகிரி மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். எனக்கும் அவருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இருந்ததில்லை. அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்து வருகிறது. அந்த உறவு நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அழகிரி அண்ணன் எப்போதும் என் மீது பாசமாக இருப்பார்.”

“சமீபத்தில் நீங்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டீர்களா?”

“அவர் எனக்கு நண்பர். எத்தனையோ முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்