மைதானத்துக்குள் ஒரு மினி பார்... ஆளுக்கோர் ‘அம்மா கிட்’...

ஜெயலலிதாவின் ‘ஹெலி… கிலி’ பிரசாரம்!

கொளுத்தும் வெயிலில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கொளுத்திக்கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் அருகே உள்ள வாரணவாசியில் கடந்த 18-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம். மாலை 3 மணிக்கு பிரசாரக் கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விருத்தாசலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் வெயில் காரணமாக இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதனால், காஞ்சிபுரம் கூட்டத்தை மாலை 5 மணிக்கு என மாற்றிவிட்டனர்.

நிழலைத் தேடி...


ஆனாலும் உச்சிவெயிலில் வாரணவாசிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பஸ், வேன்களில் ஏற்றிவரப்பட்ட பெண்கள் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் இறக்கிவிடப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் நிழலைத் தேடி பெண்கள் வேகமாக ஓடினர். கைக்குழந்தைகளோடு வந்தவர்களின் நிலைதான் பரிதாபம். ஆங்காங்கே இருந்த சிறிய மரங்களில் இளைப்பாறியவர்களை, ‘சீக்கிரம் கிளம்புங்க…’ என்று சொல்லி அ.தி.மு.க நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்.

ஆளுக்கொரு ‘அம்மா கிட்’!

ஜெயலலிதா படம் போட்ட பச்சைத்தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய ‘கிட்’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. முன்பக்கத்தில் வயதானவர்களே அதிகம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரிதும் அவதிப்பட்டனர். 3 மணிக்கு முதல்வருக்கான இருக்கை மேடைக்கு வந்தது.

சிறைவைக்கப்பட்ட தாய்க்குலங்கள்!

மதியம் 3 மணிக்கு மேடைக்கு வந்தார் தம்பிதுரை. மேடைக்கு முன்புறம் இடது பக்கத்தில் உள்ள காலி இடங்களில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இது பெண்களுக்கான இடம் என ஆண்களை வெளியேற்ற, காவல் துறைக்கு மைக்கில் அறிவிப்புசெய்தார். அதன்பின் பெண்கள் கூட்டத்தை அங்கே திணித்தனர். உள்ளே போனவர்கள் வெளியே போகாதவாறு ஆங்காங்கே தடுப்புகளில் காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். முன்பக்கம் அமர வைக்கப்பட்ட பெண்கள், எளிதில் வெளியே செல்லாத முடியாதபடி ஐந்தடி உயரத்தில் இரும்பு வேலியை அமைத்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு தடுப்புகளில் பெரிய பெரிய இரும்பு பைப்புகள் பயன்படுத்தப்பட்டன. காவல் துறையின் கெடுபிடிகளில் தொண்டர்கள் அலைக்கழிக்கப்பட்டு, ஒருவழியாக இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.

ரிகர்சல் பார்த்த வேட்பாளர்கள்!

அ.தி.மு.க தலைமை அலுவலக நிர்வாகி மகாலிங்கம் வந்தார். ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஒரு கவர் கொடுத்து அனுப்பினார்கள். மேடைக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்பாளர்கள் அந்த கவருடன் அமர்ந்திருந்தனர். முதல்வர் வரும்போது எப்படி நடக்க வேண்டும் என்று வேட்பாளர்களின் காதுகளில் கிசுகிசுத்தார் மகாலிங்கம். அதைத் தொடர்ந்து ஒரு முறை ரிகர்சலும் நடந்தது.

ஹெலி… கிலி!

ஹெலிபேடை சுற்றி இரண்டு தடுப்புகள் அமைத்திருந்தார்கள். மாலை 4.00 மணிவரை ஹெலிபேடு அருகே யாருக்கும் அனுமதி இல்லை. 4.30 மணியிலிருந்து உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப் பட்டனர். 5.24-க்கு சிறு புள்ளிகளாக இரண்டு ஹெலிகாப்டர்கள் தெரிந்தன. துவண்டு கிடந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். பின்பு வெளிப்பக்கத் தடுப்புகளை உடைத்தும், தாவிக்குதித்தும் அ.தி.மு.க-வினர் உள்ளே நுழைந்தனர். இதைக் காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹெலிகாப்டரில் வந்த முதல்வர், ஆகாயத்தில் இருந்தே தொண்டர்கள் கூட்டத்தை நோக்கிக் கையசைத்தார். தொண்டர்களும் உற்சாகமாகக் கையசைத்தனர். அவருடன் வந்த சசிகலாவும் கீழிறங்கினார்.

மரியாதை செலுத்திய மா.செ-க்கள்!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்(பொறுப்பு) மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன், மாஃபா.பாண்டியராஜன், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். உதவியாளர் பூங்குன்றன் முதல்வருக்குத் தேவையான பொருட்களை காரில் ஏற்றினார். பணிப்பெண்கள் பின் இருக்கையில் அமர, மேடையை நோக்கி கார் புறப்பட்டது. அடுத்த 10-வது நிமிடத்தில் ஹெலிகாப்டரும் புறப்பட்டுச் சென்றது.

பின்பக்கம் வழியாக மேடைக்கு வந்த ஜெயலலிதா, அவருக்கான அறையில் தங்கினார். முதல்வருக்கு மட்டுமே மேடை. வழக்கம்போல மேடைக்கு முன்பக்கத்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தொண்டர்களை நோக்கி வேட்பாளர்கள் அமர்ந்தனர். மேடைக்கு எதிரில் பளிச்சென தெரியும் வகையில் வெள்ளைக் கற்களால் ‘அம்மா’ என்று எழுதி இருந்தார்கள்.  முதல் வரிசையில் நாற்காலியில் மேடைக்குப் பக்கவாட்டில் இருந்து வந்த சசிகலா, அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தார். 6 மணிக்கு மேடைக்கு வந்த முதல்வர், தொண்டர்களை நோக்கிக் கையசைத்தார். பின்பு, தனது இருக்கையில் உட்கார்ந்து பிரசார உரையை வாசிக்கத் தொடங்கினார். குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், வீட்டுவசதித் திட்டம் என ஒவ்வொரு திட்டங்களாக பேப்பரில் உள்ளவற்றை வாசித்தார்.

ரிப்பீட் ஆன தி.மு.க வாக்குறுதிகள்!

 “ ‘நம்முடைய சாதனையைக் கண்டு பொறுக்க முடியாத கருணாநிதியும், தி.மு.க-வினரும் 90 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை’ என பொய் பிரசாரம் செய்துவருகிறார்கள். ‘மின்வெட்டே இல்லாதபோது மின்வெட்டு இருக்கிறது’ என்கிறார்கள். நிலமற்ற ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தலா 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தி.மு.க-வினர் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். கையளவு நிலங்கள் கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் முல்லை பெரியாறு நீர்மட்ட அளவினை 142 அடியா உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உடனடியாகச் செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

இதில் தொடர்ந்து வலியுறுத்த என்ன இருக்கிறது? 2006-ம் ஆண்டு தேர்தலின்போது தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்களோ, அதே வாக்குறுதிகளைத்தான் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் சொல்லியிருக்கிறார்கள்.

வெள்ளத்துக்கு விளக்கம்!

வெள்ளத்தின்போது தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்பது தி.மு.க-வினரின் பொய் பிரசாரம் என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கையே கூறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 96 ஏரிகளில் 50 ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகக் கடலுக்குச் செல்கிறது. அடையாற்றில் உபரிநீர் கடலுக்குச் செல்லும்போது ஏற்படும் வெள்ளச்சேதம் சென்னையின் மையப் பகுதியையும், தென் சென்னையையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. மழைக்காலத்தில் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளநீர் நகரில் புகுந்து, சேதம் விளைவிக்கிறது என வெள்ளத்துக்கான காரணத்தை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

மதுவிலக்கும் தி.மு.க-வும்!

1971-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் மதுவிலக்கு நீக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் எனப் பல்வேறு கட்சியினர் பேசியபோது, ‘கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று. மதுவிலக்குத் திட்டத்தில் மற்ற நாடுகளோடு போட்டிப் போடுவது என்றால், நாம் அவர்களைவிட இன்னும் நல்ல சரக்குகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலேதான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறுவழியிலே வெற்றிபெற முடியாது என்பது இன்றைய உலக நிலை, உலகப் பண்பாடு, கலாசாரம் சாட்சியாக இருக்கிறது’ என்றார் கருணாநிதி. இதுதான் கருணாநிதியின் உண்மையான கருத்து. பூரண மதுவிலக்கு என்று சொல்லிவரும் கருணாநிதிக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்போது மட்டும் ‘பூரண’ என்ற வார்த்தை மறந்து போய்விட்டதா?’’ என முதல்வர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

மைதானத்துக்குள் மினி பார்!

சரக்கு, சைடிஷ் என ஒரு மினி பாரையே மைதானத்தில் உருவாக்கி இருந்தார்கள் சில தொண்டர்கள். முதல்வர் ஜெயலலிதா மதுவிலக்குப் பற்றிப் பேசியபோது, நிதானமாகக் குடித்துக் கொண்டே எல்.இ.டி திரையில் பார்த்துக் கொண்டிருந்தனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. முதல்வர் பேச ஆரம்பித்த 15-வது நிமிடத்தில் இருந்தே கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது.

இதனால் காலி சேர்களை ஒன்றன்மீது ஒன்றாக உயரமாக அடுக்கி அதன் மீது ஏறி தொண்டர்கள் பிரசாரத்தைப் பார்க்கத் தொடங்கினர். பின்பக்கத்திலிருந்து தொண்டர்கள் வெளியேறியதை காவல் துறையினராலும், கட்சியினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்தும் முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார். முதல்வர் பிரசாரத்தை முடிக்கும் முன்பே 75 சதவிகித தொண்டர்கள் வெளியேறி விட்டார்கள்.

- பா.ஜெயவேல்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஆ.முத்துக்குமார்


பொதுக்கூட்ட துளிகள்...

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான பொதுக்கூட்டம் என்பதைத் தெரிவிக்கும் வகையில் அம்மா வாசகம் அடங்கிய 3 ராட்சத பலூன்கள் மைதானத்தில் பறக்க விடப்பட்டன.

பாதுகாப்புப் பணிக்காக 15 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்திருந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பே வந்த இவர்கள், இங்குள்ள கல்யாண மண்டபங்கள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.

பாதுகாப்புப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் அடிக்கடி மீட்டிங் போட்டு அலார்ட் செய்துகொண்டிருந்தனர்.

மேடைக்கும் ஹெலிபேடுக்கும் 400 மீட்டர் தூரம். மேடைக்கு உள்ளே யார் வருகிறார்கள் எனக் கண்காணிக்க கேமராக்களை வைத்திருந்தார்கள்.

5.30-க்கு மேடையில் உள்ள அறைக்குச் சென்ற ஜெயலலிதா, 6 மணிக்குத்தான் மேடையேறினார். பிரசாரம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கழித்துதான் அங்கிருந்து புறப்பட்டார்.

நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கம்பங்களில் கட்டப்பட்ட சிறிய அளவிலான பேனர்களை, தேர்தல் பணியாளர்கள் கழட்டிவிட்டனர். சில இடங்களில் அகற்றிய பேனர்களைத் திரும்பவும் ‘கட்டி’க்காத்தார்கள் அ.தி.மு.க-வினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick