கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 வைகோவுக்கு கருணாநிதியைவிட மு.க.ஸ்டாலின் மீது ஏன் அதிக கோபம்?


 ஸ்டாலின்தான் தனக்குப் பிரச்னை என்று வைகோ நினைக்கலாம்.

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.


  கருணாநிதியை, ‘வாழும் மகாத்மா’ என்கிறாரே கனிமொழி?


 கனிமொழிக்கு காந்தியையும் தெரியவில்லை, கருணாநிதியையும் தெரியவில்லை போலும். காந்தியை எத்தனை தடவைதான் சுடுவார்களோ?!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.


 கிட்டத்தட்ட அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் துணிச்சலுக்குக் காரணம், தே.மு.தி.க-வின் முடிவுதான் என்பது சரியா?


 ஓரளவு உண்மைதான். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்து இருந்தால் த.மா.கா-வையும் வேல்முருகனையும் கொங்கு கட்சிகளையும் அ.தி.மு.க சேர்த்திருக்கும். மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் போய்விட்டதால், தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஜெயலலிதா நினைத்திருப்பார்.

எம்.வான்மதி, எடப்பாடி.

  ‘மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று ஏறத்தாழ எல்லாக் கட்சியினரும் சொல்கிறார்களே. செய்வார்களா?


  எல்லாரும் சொல்லலாம். வெற்றி பெறப்போவது இவர்களில் யாரோ ஒருவர்தான். அந்த ஒருவர், செய்வாரா என்பதுதான் இன்றைய சந்தேகம்.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவோம். டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்’ என்று தி.மு.க அறிவித்து உள்ளது. ‘பூரண மதுவிலக்குதான் என்னுடைய இலக்கு. அதனை படிப்படியாகத்தான் செய்ய முடியும்’ என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது. பூரண மதுவிலக்கு என்றே மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க-வும், நாம் தமிழர் இயக்கமும், பி.ஜே.பி-யும் சொல்லி இருக்கின்றன. மே 19-ம் தேதி இதை மறக்காமல் யார் செய்கிறார்கள் என்றுதான் பார்ப்போமே!

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

 ‘தி.மு.க கூட்டணிக்குச் செல்வதற்குத்தான் விஜயகாந்த் உறுதி அளித்தார், வைகோ மூலமாகத்தான் முடிவு மாறியது’ என்று தே.மு.தி.க-வில் இருந்து பிரிந்து மக்கள் தே.மு.தி.க ஆரம்பித்த ஈரோடு எம்.எல்.ஏ சந்திரகுமார் சொல்லி இருக்கிறாரே?


 பி.ஜே.பி சார்பில் சந்தித்தவர்களிடம், ‘உங்கள் கூட்டணிக்குத்தான் வருவேன்’ என்றும், தி.மு.க சார்பில் பேசியவர்களிடம், ‘உங்கள் கூட்டணிக்குத்தான் வருவேன்’ என்றும், மக்கள் நலக் கூட்டணி சார்பில் பேசியவர்களிடம், ‘உங்கள் கூட்டணிக்குத்தான் வருவேன்’ என்றும் விஜயகாந்த் உறுதி அளித்து இருந்தார். அதனால், மூன்று கட்சியினரும் அவரை எதிர்பார்த்து இருந்தார்கள். இப்போது சந்திரகுமார் தி.மு.க கூட்டணியில் சேர்ந்துள்ளதால், தி.மு.க-வைப் பற்றி மட்டும் சொல்கிறார்.

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி-54.

 தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் யார்?


 ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி, சீமான்... போன்ற முதலமைச்சர் வேட்பாளர்கள்தான் பரிதாபத்துக்கு உரியவர்கள். வேகாத வெயிலில் பாவமாக அலைய ஆரம்பித்து உள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்