திண்டுக்கல்லில் முடங்கிய திருவள்ளுவர்...

16 ஆண்டுகளாக சிலை வைக்க இடம் இல்லை!சர்ச்சை

த்தரகாண்ட் மாநிலத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவும் விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்சிகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. இதையடுத்து, திருவள்ளுர் சிலை அமைப்பதை உத்தரகாண்ட் மாநில அரசு உறுதி செய்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் திண்டுக்கல்லில் பீடம் அமைக்க இடம் கிடைக்காமல் கடந்த 16 ஆண்டுகளாக  வள்ளுவர் சிலை மூலையில் முடங்கிக் கிடக்கிறது.

இதுதொடர்பாகத் திருவள்ளுவர் சிலை அமைப்புக்குழுச் செயலாளர் கணேசனிடம் பேசினோம். “திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் 1999-ம் ஆண்டு நடந்த பேரவைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றினோம். சிலை நிறுவுவதற்காக, கூலி வேலை செய்தவர் முதல் கோடீஸ்வரர்வரை பல்வேறு தரப்பினரிடமும் மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது. ஐந்தரை அடி உயரத்தில், 500 கிலோ எடையில், அமர்ந்த நிலையிலான பிரமாண்ட வெண்கல சிலை தயாரானது. மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைக் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் சிலையை வடிவமைத்தார். 2001-ம் ஆண்டு, திண்டுக்கல் - பழனி சாலை சிக்னல் அருகே பெட்ரோல் பங்க் முனையில் சாலையோரமாக உள்ள காலியிடத்தில் சிலையை நிறுவ நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் அனுமதி கொடுத்தார். உடனடியாகச் சம்பந்தப்பட்ட இடத்தில் பீடம் அமைப்பதற்கான கால்கோள் விழா நடத்தினோம். ஆனால், சிலை அமைக்கும் இடம் அருகே கல்லறைத் தோட்டம் உள்ளது. அந்த இடத்தில் சிலை அமைத்தால் வீணான பிரச்னைகள் வரும் என ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வேறு இடம் கேட்டு, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மாநில அரசு எனக் கடந்த 16 ஆண்டுகளாக அலைந்துகொண்டே இருக்கிறோம். வான்புகழ் வள்ளுவனுக்குப் 10 அடி இடம்கூடக் கொடுக்கத் தமிழக அரசு தயாராக இல்லை.

திருவள்ளுவர் சிலைக்குக் கடந்த 16 ஆண்டுகளாகக் கண் திறப்பு நடக்கவில்லை. இதைச் செய்த சிற்பி, ‘எப்பப்பா கண் திறப்பீங்க’ எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அதை எங்காவது அமைத்து, எங்கள் முயற்சியை முடித்துவையுங்கள்’’ எனக் கண்கலங்கினார்.

மாநகராட்சி மேயர் மருதராஜிடம் கேட்டோம். ‘‘எழுத்துப்பூர்வமாக என் கவனத்துக்கு வந்தால், முதல்வர் பார்வைக்குக் கொண்டு சென்று அவர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

முதல்வர் மனது வைப்பாரா?

- ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்