குழந்தையை சிறைக்கு அனுப்பிய போலீஸ்...

கண்ணை மூடி கையெழுத்துப் போட்ட மாஜிஸ்திரேட்!“தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்தது தவறு!”கொடுமை

மூன்று வயதுக் குழந்தையைச் சிறையில்வைத்துத் தன் இரக்கமற்ற குணத்தை அடையாளம் காட்டி இருக்கிறது தமிழக போலீஸ்.

‘‘காலை உடைத்து, காயத்தில் மிளகாய்ப்பொடி தூவி...” என்ற தலைப்பில் 17.7.16 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், தக்கலை காவல் நிலையத்தில் 14 பேரை சட்டவிரோதமாக அடைத்துவைத்து அரங்கேற்றிய சித்ரவதைகளை அம்பலப்படுத்தி இருந்தோம். அதேபோல, போலீஸ் தாக்குதலுக்கு உள்ளான மேரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த மனு தமிழகக் காவல் துறையும், நீதித்துறையும் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.

‘‘மதுரை விளாச்சேரி மொட்டை மலைப் பகுதியைச் சேர்ந்த நானும் என் கணவர் முருகன், என் சகோதரி மாரியம்மாள், அவர் கணவர் துருவன் ஆகியோரும் திருவிழாக்களில் பொம்மை, பாசிமாலைகள், பலூன் ஆகியவற்றை விற்பது போன்ற தொழில்களைச் செய்து வந்தோம். கடந்த மாதம் 21-ம் தேதி பெருங்குடியில் நடந்த திருவிழாவில் வியாபாரம் செய்துவிட்டு இரவு அங்கேயே படுத்திருந்தோம். அப்போது, டாடா சுமோவில் வந்த நான்கு பேர் தங்களை போலீஸ் என்று சொல்லிக்கொண்டு என்னை மட்டும் விட்டுவிட்டு, என் குழந்தை விஜய் உட்பட நான்கு பேரை காரில் ஏற்றிச் சென்றார்கள். நான் மதுரை போலீஸில் விசாரித்தபோது, அவர்கள் ‘தெரியாது’ என்று சொல்லிவிட்டார்கள். நான்கைந்து நாட்களாகத் தேடியும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் குழந்தையைப் பிரிந்து இருக்கிறேன், மீட்டுக்கொடுங்கள்’’ என்று அந்த மனுவில் கேட்டு இருந்தார் மேரி.

நீதிபதிகள், அரசுத் தரப்பிடம் விளக்கம் கேட்டார்கள். ‘‘மூன்று வயதுக் குழந்தை தவிர, மற்ற மூன்று பேர் மீதும் குற்ற வழக்கில் மார்த்தாண்டம் காவல் துறை கைதுசெய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்தக் குழந்தை, அதன் சித்தி மாரியம்மாளுடன் பெண்கள் சிறையில் உள்ளது’’ என்று அரசு வக்கீல் உண்மையைச் சொல்ல, நீதிபதிகள் கோபம் ஆகிவிட்டனர்.

‘‘பெற்ற தாய் வெளியில் இருக்கும் நிலையில் குழந்தையை அதன் சித்தியுடன் சிறைக்கு அனுப்பும் உத்தரவை மாஜிஸ்திரேட் எப்படிப் பிறப்பித்தார்? இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களுடன் குழித்துறை மாஜிஸ்திரேட்டும், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டரும் இங்கு ஆஜராக வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

கடந்த 25-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் குழித்துறை மாஜிஸ்திரேட்டும், இன்ஸ்பெக்டரும் ஆஜரானார்கள். சிறையில் இருந்த குழந்தை  விஜய், கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டான். நீதிபதி உத்தரவின் பேரில் தாயிடம் ஒப்படைக்கப் பட்டான்.

 ‘‘தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்தது தவறு, அதைவிடச் சிறையில் அடைக்க உத்தரவிட்டது மிகவும் தவறானது. இது சம்பந்தமாகக் குழித்துறை மாஜிஸ்திரேட் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மீது டி.ஜி.பி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

 இது சம்பந்தமாக, ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஹென்றி திபேனிடம் பேசினோம். ‘‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினரான இவர்கள், மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். போலீஸ் தாங்கள் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் இவர்களைப் பிடித்துக் கொண்டுபோய் அடித்து டார்ச்சர் செய்து, இவர்களை ஒப்புக்கொள்ளவைத்து சிறைக்கு அனுப்பித் தப்பித்துக்கொள்கிறார்கள். மேலும், இவர்களை அழைத்துச் சென்று நகைக்கடைகளைக் காட்டச் சொல்லி, கடை முதலாளிகளை மிரட்டி ஏகப்பட்ட நகைகளைப் பெற்று காவல் துறையினர் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பொய் வழக்குகளில் சிக்கவைக்கத்தான் இவர்களைச் சட்டத்தை மீறி கைதுசெய்து கொண்டு சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்