கடவுள் முதல்... கவிதை வரை!

'அதே திருவல்லிக்கேணி. அதேபோல 20 பேர் என எழுதியிருந்தார்’ கவிஞர் மனுஷ்ய புத்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த அதே அவலம். ஞானக்கூத்தன் இறுதி ஊர்வலமும் அப்படித்தான் நடந்தது.

எழுத்தாளர்களை யானை மீது ஊர்வலம் அழைத்துச்சென்று கொண்டாட வேண்டும் எனப் பிரியப்பட்டவரின் இறுதி ஊர்வலம் அது. 

கவிதைகளை, புதிய பாடுபொருட்களை நோக்கித் திருப்பியதில் ஞானக்கூத்தனுக்கு முக்கியப் பங்கு உண்டு. புதிய அரசியல் பார்வையும் அவருடைய கவிதைக்கு அந்தத் தேவையை ஏற்படுத்தியது. திராவிட இயக்கத்தின் எழுச்சியில் அவருக்கு இருந்த விமர்சனப் பார்வையும் அவருடைய கவிதைகளின் பாடுபொருட்கள் ஆகின.

‘‘எனக்கும் தமிழ்தான் மூச்சு...
ஆனால்,

அதைப் பிறர் மீது விடமாட்டேன்!’’ என்பதான கவிதைகள் அதைச் செய்தன.

ஆனால், முரண்பட்ட கருத்து உள்ளவர்களிடமும் அமைதியாக விவாதிக்கும் பண்பு அவரிடம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தமிழையும் கவிதையையும் நேசித்தார். தமிழ் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அவருக்கு விருப்பம் இருந்தது. தமிழ் இலக்கியம் உலக இலக்கியங்களுக்குச் சவால்விடுபவை என்பதும் அவருடைய கருத்தாக இருந்தது.

‘கசடதபற’ இதழின் மூலம் வெளிப்பட்ட இவருடைய கவிதைகள் மெல்லிய நையாண்டியைத் தன் கவிதைகளுக்குள் புதைத்துவைத்திருந்தது. கடவுள், அரசியல், பாசம், பிரிவு எல்லாமே மெல்லிய அங்கதத்தோடு அவர் கவிதையின் வழியே வெளிப்பட்டன. தமிழ் கவிதை உலகில் அது ஒரு தனி உத்தியாகவே அமைந்தது.

கடவுள் முதல் கவிதைவரை அவருடைய அங்கதச் சுவைக்கு ஆட்பட்டன. இதோ உதாரணத்துக்கு இரண்டு கவிதைகள்...

‘‘மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்புக் கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில்,
வேறெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக்கொள்ளும் நாம் உடைக்க?’’

.....
‘‘அதனால் என்ன?
பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டு எடுத்து நீட்டுகிறார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்