தத்துவத் தலைமை

தணிகைச்செல்வன்விமர்சனம்

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதினெட்டாம் லூயிகளே...
இருபதைக் காட்டி
ஏமாற்றும் பாவிகளே!’


ன்ற சாட்டை வரிகளால் தமிழ்ச் சமூகத்தில் சலனம் ஏற்படுத்தியவர் கவிஞர் தணிகைச்செல்வன். அவரது எழுத்தும் கருத்தும் எப்போதும், ஒடுக்கப்பட்டவர்கள் குரலாகவே ஓங்கி ஒலித்து வருகிறது.  எந்தக் காலகட்டத்திலும், தான் சொல்ல நினைத்ததை யாருக்கும் அஞ்சாமல் சொல்லும் கவிஞர் அவர். சாமரங்கள் வீசாத சமரசங்களுக்குள் சிக்காத சினங்கொண்ட போராளியாகவே வலம் வருபவர். அவர், ‘தமிழ் மண்’ இதழில், 27 மாதங்கள் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பாட்டாளி வர்க்கம், தலித்தியம், தமிழியம் தொடர்பானவை இவை.

தேர்தல் அரசியலை, கூட்டணி அரசியலை, அக்கப்போர் அரசியலை எழுதுவது மட்டுமே இன்றைய அரசியல் கட்டுரைகளாகக் கணிக்கப்படும் காலகட்டத்தில் தத்துவார்த்த நோக்கில் நடைமுறை அரசியலையும் கோர்த்து எழுதும் எழுத்தாளர்களும் கட்டுரை ஆசிரியர்களும் குறைவு. இத்தகையச் சூழ்நிலையில் சாதி, இடஒதுக்கீடு, மொழி, தேசிய இனம், வர்க்கம், சமூகம், தேசியம், காந்தியம், மார்க்சியம், பெரியாரியம், மெய்யியல், கருத்தியல் ஆகியவை குறித்து எளிய தமிழில் நடைமுறைச் சிக்கல்களை உள்வாங்கிய மொழியில் தணிகைச் செல்வன் எழுதி இருப்பதுதான் இந்தக் கட்டுரைகளின் பலம்.

தத்துவம் என்றால், இருண்மையை விளக்குவதும் அல்ல... அதைத் தேடிக் கண்டடைவதும் அல்ல. நடைமுறையைப் புரிந்துகொள்ளத் துணைபுரிவதே தத்துவம் என்ற புரிதலோடு இந்தக் கட்டுரைகளை வாசிக்க வேண்டும். மார்க் சியமும் பெரியாரியமும் அம்பேத்கரியமும் பெளத்தமும் மெல்லிய இழையில் எங்கே பிணைந்தும், எங்கே முரண்பட்டும் செல்கின்றன என்பதை இந்தக் கட்டுரைகள் மூலமாக உணரலாம். ஆனால், எல்லாச் சூழ்நிலையிலும் அவை பிணைந்தே செல்லவேண்டும் என்பதையும் உணரலாம். மொழியுரிமை, நாட்டு உரிமை, இன உரிமை ஆகிய மூன்றும் ஒருவனின் ஆயுதங்கள். அதில் வெல்வதற்காக எதையெல்லாம் எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதையும் சொல்கிறது.

பொதுவாக, தத்துவங்கள் வாசிக்கச் சிரமம் கொடுக்கும். ஆனால், இவரது மொழி நடை அதனை இலகுவாக்குகிறது. ‘போர்க்காலப் பாதையே நாற்காலிப் பாதையானதால், தேர்தல் பவனியின் தேர்க்காலில் அரைபட்டு நசுங்கிக் கிடக்கிறது மக்கள் ஜனநாயகம். அந்தப் பாதையில் டாலர் அரசைச் சுமந்தபடி டாடா அரசும், டாடா அரசைச் சுமந்தபடி தமிழரசும் செல்கின்றன’ என்று கனமாக கருத்துக்கள் எளிமையாய் உணர்த்தப்படுகிறது.

வெறும் வியாக்கியானங்கள் அல்ல. தீர்வும் சுட்டப்படுகிறது. இடஒதுக்கீடு, நிலமீட்பும் நிலப்பங்கீடும், சாதி மறுப்பு மணம், பொதுக்குடியிருப்பு, பொதுக் கலாசாரம், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை... என்று படிநிலைகளை உணர்த்துகிறார் பாலவர். இது, தத்துவப் புத்தகம் மட்டுமல்ல... தனித்துவப் புத்தகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்