சபரிமலை வாசல் பெண்களுக்கு எப்போது திறக்கும்?

சுற்றிச் சுழலும் சர்ச்சைகள்!சர்ச்சை

பரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இளம் பெண்கள் செல்வதற்கான தடைப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கும் தேவஸ்தானத்துக்கும், தனிநபர்களின் வெவ்வேறான கருத்துக்களுக்கும் இடையில் சிக்கிக் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. பிரபலமான கோயில் என்பதால் பரபரப்புக்குச் சொல்ல வேண்டியது இல்லை.

கேரளாவின் பத்தினம் திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சன்னிதானங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு காலம் காலமாக 10-லிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இளம்பெண்கள் மாதவிடாய்ச் சுழற்சியில் இருப்பதால் இந்தக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாதவிடாய்ச் சுழற்சி நின்ற 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பழமையான கட்டுப்பாடு  பல வருடங்களாக இருந்துவருவதாகக் கோயில் அறங்காவலர்கள் குழு தெரிவித்து வருகிறது.

இதற்குக் காரணமாகச் சொல்லப் படுவது, ‘ஐயப்பன் பிரம்மச்சரிய விரதத்தினைக் கடைப்பிடித்தவர், யோக நிலையில் அருள்பாலிப்பவர். மாதவிடாய்ச் சுழற்சி இருக்கும் பெண்களால் 41 நாட்கள் கடுமையான விரதத்தினைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து சபரிமலை வந்தடைந்து தரிசனம் செய்வது இயலாது’ என்பதுதான். அதனால் அந்தக் குறிப்பிட்ட வயதுள்ள பெண்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற மனுவின் மீது, 1991-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய கேரளா உயர் நீதிமன்றம், ‘கோயில் நிர்வாகத்தின் முடிவே சரி’ என்பதாகப் பெண்களுக்கு எதிரான தடையை நீட்டித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

நடுவில் கொஞ்சகாலம் அமுங்கிப் போயிருந்த இந்தப் பிரச்னை கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மீண்டும் பூதாகரமாக வெடித்தெழுந்தது. ‘‘சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்கும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்’’ என்று 5 பெண் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு ஒன்று இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தது.

முந்தைய காங்கிரஸ் அரசு, சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. தற்போதைய இடது ஜனநாயக முன்னணி அரசில், கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “பெண்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. எனினும், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் கலாசாரம், பண்பாடு, மக்கள் சமூகத்தின் மனநிலையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும்’’ என்று இரண்டுபக்கமும் இல்லாமல் ஒரு கருத்தினைப் பதிவு செய்திருந்தார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கொடியேறி பாலகிருஷ்ணன், ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அதைத் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்’’ என்று தெரிவித்திருந்தார். இதனால், பெண்களை அனுமதிக்க கேரள அரசு தடையாக நிற்கவில்லை என்பது போன்ற நிலைப்பாட்டினையே இது வெளிப்படுத்துவதாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்