"அம்மாவின் பெருமை கருணாநிதிக்கு எரிச்சலாகத் தெரிகிறது!"

வைகைச்செல்வன் தடாலடி பேட்டி

அ.தி.மு.க மேடைகளில் கலக்கிவருகிறார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். அ.தி.மு.க அரசு மீது கருணாநிதி தொடுக்கும் அறிக்கைப் போர்கள் குறித்து நாம் கேள்விகளை எழுப்ப, அந்தக் கேள்விகளுக்குத் தனக்கே உரிய பாணியில் தடாலடி பதில்களைக் கொடுத்தார் வைகைச்செல்வன்.

“தமிழக அரசின் பட்ஜெட்டை, ‘காகிதப் பூ பட்ஜெட்’ என்கிறாரே கருணாநிதி?”

‘‘அ.தி.மு.க அரசின் பட்ஜெட்டை ‘குறிஞ்சிப் பூ’ போன்றது என்று தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். குறிஞ்சிப் பூகூட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். ஆனால், முதல்வர் அம்மாவின் பட்ஜெட் ஆண்டுதோறும் சட்டமன்றத்தில் மலர்ந்துகொண்டே இருக்கிறது. சாமான்யனில் தொடங்கி சகலரின் பிரச்னைகளையும் உள்வாங்கிக் கொண்ட பட்ஜெட் இது. எதற்காகவும் எவருக்காவும் மக்களின் மீது வரிச்சுமையைத் திணிக்காத பட்ஜெட் என்று நாடே கொண்டாடி மகிழ்கிறது. ஆனால், பட்ஜெட்டை ‘காகிதப் பூ, தாகத்துக்கு உதவாத கானல் நீர்’ என்றெல்லாம் கருணாநிதி சொல்லி இருக்கிறார். அவருக்குக் கானல் நீராகிப்போனது தமிழகத் தேர்தல் முடிவுகள்தான். அண்டார்டிக்காவில் அவரை விதையும் அரக்கோணத்தில் ஆப்பிளும் எப்படி விளையாதோ, அப்படித்தான் கருணாநிதியின் பேச்சும் இருக்கிறது.’’

“ ‘வெத்துவேட்டு பட்ஜெட்’ என்று மு.க.ஸ்டாலினும் கூறி இருக்கிறாரே?”

‘‘வெத்துவேட்டாகிப் போனது பட்ஜெட் அல்ல... அவரது நமக்கு நாமே பயணமும் பதவி ஆசையும்தான். அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் அவரை இப்படிப் பேச வைக்கிறது. அவரது அரசியல் வாழ்வும் புஸ்வாணம் ஆகிவிட்டது. வீழ்ந்துவிட்ட விஜயகாந்த் கட்சியெல்லாம் ஒரு கட்சி என்று கருதி, அதை உடைத்து அதற்கு ஒரு விழாவை இவர் நடத்துகிறார். குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது, வாத்துக்கு அடைகாக்கத் தெரியாது, ஸ்டாலினுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. கருணாநிதியும் ஸ்டாலினும், விரக்தியால் இப்படிப் பேசுகிறார்கள். ஒரே நேரத்தில் கருணாநிதி, ஸ்டாலின் என்ற இரண்டு எஜமானர்களிடம் மாட்டிக்கொண்டு தி.மு.க-வினர் தவிக்கிறார்கள்.”

“தமிழக அரசின் பட்ஜெட்டை, ‘அம்மா பட்ஜெட்’ என்று சொல்லி இருக்கலாம் என்று கருணாநிதி கிண்டலடித்து இருக்கிறாரே?”

“தாய்நாடு, தாய்மொழி என்ற வரிசையில் இந்த அரசை அம்மாவின் அரசு என்று அழைக்கும்போதுதான் கூடுதல் கம்பீரம் கிடைக்கிறது. அம்மா என்பது மந்திரச்சொல். வேட்டை சமூகத்தில் தன் கூட்டத்துக்கு ஆயுதம் ஏந்தித் தலைமை தாங்கிய தாய் தொடங்கி, புலியை முறத்தால் விரட்டிய சங்ககால மறத்தியின் வடிவமாய் அம்மாவைத் தமிழ்ச் சமூகம் பார்க்கிறது. அந்தப் பெருமை, கருணாநிதிக்கு எரிச்சலாகத் தெரிகிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்