சபாநாயகரை மிரட்டியதா தி.மு.க.?

சட்டசபை

"'நடுநிலை தவறாமல் தராசுபோல் செயல்பட வேண்டும்’ என நான் பதவி ஏற்றபோது, முதல்வர் என்னிடம் கூறினார். அதை முழுமையாக இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன். ஆனால், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் என்னை ஒருமையில் பேசுகின்றனர். எனக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும், சபாநாயகர் பதவிக்கு உரிய கண்ணியத்தையாவது அவர்கள் காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என சட்டசபையில் உருக்கமாகப் பேசியுள்ளார், சபாநாயகர் தனபால்.

என்னதான் நடக்கிறது சபையில்?

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு சட்டப்பேரவையில் பலம் வாய்ந்த எதிர்க் கட்சியாக தி.மு.க இருக்கிறது. “எதிரிக் கட்சியாக இல்லாமல், எதிர்க் கட்சியாக நாங்கள் செயல்படுவோம்” என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ‘‘வெளிநடப்பு செய்ய மாட்டோம்’’ என்றும் சொன்னார். ஆனால்,

தி.மு.க-வின் வெளிநடப்புகள் தொடர்கின்றன. ‘எப்படியாவது எங்களை வெளிநடப்பு செய்யவைக்கவே அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்’ என்று தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். சர்க்காரியா கமிஷன் பற்றி ராஜன் செல்லப்பா சொன்னதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கச் சொன்னது தி.மு.க. தங்கம் தென்னரசு பேசிய சில வார்த்தைகளை அ.தி.மு.க-வினர் நீக்கச் சொன்னார்கள். கடந்த புதன்கிழமை அன்று விவாதத்தின்போது, தி.மு.க உறுப்பினர்கள் அன்பழகன், ரங்கநாதன் ஆகியோர் கடைசி வரிசையில் நின்றுகொண்டு சபாநாயகரை நோக்கிச் சத்தமிட்டவாறே, “எங்களுக்கும் பேச வாய்ப்புக் கொடுங்கள்” என்று பள்ளி மாணவர்கள்போல ஒரு விரலை நீட்டிக் காட்டினார்கள். “அன்பழகனை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்” என்று ஸ்டாலின், கொறடா சக்கரபாணியைக் கூப்பிட்டுச் சொன்னாராம். 

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சபாநாயகர், “அன்பழகன் நான் கூறியும் கேட்கவில்லை. அவருடைய தலைவர் கூறியும் அமைதியாகவில்லை. யாருக்குத்தான் அவர் கட்டுப்படுவார்” என்று டென்ஷனாகிவிட்டார். மேலும், அமைச்சர்கள் பேசும்போது தி.மு.க உறுப்பினர்கள் கேலி செய்வதாகவும்

அ.தி.மு.க-வினர் புகார் கூறுகின்றனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியபோது,  ‘‘தி.மு.க ஆட்சியில்தான் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படுகொலையும், தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பும் நடைபெற்றது” என்று கூற அதற்கு தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு துரைமுருகன், மற்றொரு வழக்கு பற்றிப் பேச... அதை, சபைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் உடனே நீக்கினார். உடனே தி.மு.க-வினர், சத்தம்போடத் தொடங்கினர். 

வெள்ளிக்கிழமை சபை கூடியதும், எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், “அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து உடனே நீக்கவேண்டும்” என்று கோரிக்கைவைக்க, “இப்போதே தீர்ப்பு வழங்குங்கள் என்று என்னை நீங்கள் வற்புறுத்த முடியாது” என்று தனபால் பதில் அளித்ததும் தி.மு.க-வினர் கோஷமிடத் தொடங்கினார்கள்.  சபாநாயகருக்கு எதிராகத்

தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், “எதிர்க் கட்சித் தலைவரும், துணைத்தலைவரும் என் அறைக்கு வந்து பேசும்போதும் உறுப்பினர் ஜெ.அன்பழகன் என்னை ஒருமையில் அழைத்தார். அதேபோல் பொன்முடி, துரைமுருகனின் மைக்கில் இருந்தும் என்னை ஒருமையில் பேசினார். அன்பழகனும், ரங்கநாதனும் அநாகரிகமான முறையில் என்னிடம் விரலை உயர்த்தி சைகை காண்பிக்கின்றனர்.

தனிப்பட்ட முறையில் என்னை மதிக்கவில்லை என்றாலும், சபாநாயகர் என்ற பதவிக்காவது அவர்கள் கண்ணியம் காக்கவேண்டும். இனியும் இதுபோல் தொடர்ந்து செயல்பட்டால் விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று பேசினார்.

சபாநாயகரின் குற்றச்சாட்டு குறித்து பொன்முடியிடம் கேட்டோம். “சபாநாயகரை ஒருமையில் பேசவில்லை. முதல்வர் பேசும் போதுகூட ஒருவிரலைக் காட்டித்தான் பேசுவார், அதைத் தவறாக எடுத்துக்கொள்ள முடியுமா? அது ஒரு மேனரிசம். இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு சபை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்புச் செய்ய வேண்டும். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகச் சபாநாயகர் எதை வேண்டுமானாலும் பேசலாமா? மாஃபா பாண்டியராஜனுக்குக் கொடுக்கும் வாய்ப்பைப் போல் எதிர்க் கட்சிக்குக் கொடுப்பது இல்லையே. எதிர்க் கட்சிகள் எதைப் பேசினாலும் உடனே அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது எந்தவிதத்தில் சரி?” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்