ஜெ-வுக்கு பயப்படாத சசிகலா புஷ்பா சரிந்த கதை!

மிழ்நாட்டின் மானம் டெல்லியில் சந்தி சிரித்தது கடந்த 30-ம் தேதி.  தி.மு.க-வைச் சேர்ந்த எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் சென்னை செல்ல டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சிவாவிடம் கருணாநிதியும், சசிகலா புஷ்பாவிடம் ஜெயலலிதாவும் விசாரணை நடத்தினர். இதன்பிறகு, சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அரசியலில் பொது ஒழுக்கம் சிதைந்துபோனதன் அடையாளமாகத் தெரிகிறது இந்தக் காட்சி.

விமான நிலையத்தில்...

“ஜூலை 30-ம் தேதி சிவாவின் போனுக்கு ஒரு கால் வந்தது. அழைப்பை ஏற்றுப் பேசிய சிவா, ‘டெல்லியில் நடப்பது சென்னையில் உள்ள உங்க அம்மாவுக்குத் தெரியாது. நேரில் இருந்துகொண்டு எதற்காக போனில் பேசுகிறாய்?’ என்று சொன்னார். அப்போது, சசிகலா புஷ்பா வேகமாக வந்து சிவாவின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளார்... பளார் என்று நான்கு முறை அறைந்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அங்குள்ள விமான நிலையப் பாதுகாவலர்களும், பயணிகளும் சசிகலா புஷ்பாவை விலக்கிவிட்டனர். பிறகு, இருவரும் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதற்கிடையில், டெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள 135, நார்த் அவென்யூவில் இருக்கும் சசிகலா புஷ்பாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.

ஜூலை 31-ம் தேதி, சென்னைக்கு வந்த சசிகலா புஷ்பாவை, உடனடியாக கார்டனுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் தம்பித்துரை மட்டும் இருந்துள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு டோஸ் விழுந்தது. அவரிடமிருந்து இரண்டு கடிதங்கள் வாங்கப்பட்டன. தம்பித்துரையிடம் போனில் பேசிய ஜெயலலிதா, ‘டெல்லியில் நடக்கும் எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். நீங்கள் என்னிடம் எதையும் மறைக்க முடியாது. அ.தி.மு.க அரசை கிண்டல் செய்ததற்காக அடித்தார் என சசிகலா புஷ்பா சொல்வது உண்மையல்ல. ஏற்கெனவே அவர் மீது வந்த புகார்களுக்கு அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இனிமேலும் இதுபோல நடந்தால் அவ்வளவுதான்’ என்று சொல்லி இருக்கிறார். திருச்சி சிவாவுக்கு, சசிகலா புஷ்பா பணம் கொடுத்து உள்ளதாகவும் அதைத் திரும்பக் கேட்டபோதுதான் இந்தப் பிரச்னை ஏற்பட்டதாகவும் தகவல் உலவுகிறது’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

‘‘அம்மாவை கிண்டல் செய்ததால் அடித்தேன்!”

ஏர்போர்ட் சம்பவம் நடந்தவுடன் சசிகலா புஷ்பாவிடம் போனில் பேசினோம். “டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அம்மாவையும் (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா கிண்டலடித்துக்கொண்டு இருந்தார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது கன்னத்தில் நான்கு முறை அறைந்தேன். இதனால் டெல்லியில் உள்ள என் வீட்டை தி.மு.க-வினர் அடித்து நொறுக்கியுள்ளனர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்க சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன்” என்றார் ஆவேசமாக.

சசிகலா புஷ்பாவின் பின்னணித் தகவல்கள்!

சசிகலா புஷ்பா குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன. படிக்கும் காலத்திலேயே அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாகவே இருந்துள்ளன. தூத்துக்குடியில் மேயராக இருந்தபோது இரண்டு பெண் கவுன்சிலர்களை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்ற பயணம் சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்து, தூத்துக்குடி தொழிலதிபரிடம் போனில் பேசிய ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதனால், அவரது மகளிர் அணிச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அடுத்து, திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வைரலாகின. அதை மார்ஃபிங் என்று சசிகலா புஷ்பா தரப்பு சொல்லியதுடன் சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்கள்.  கட்சி பாகுபாடில்லாமல் சசிகலா புஷ்பாவுக்கு எல்லோரிடமும் பழக்கம் உள்ளது. சசிகலா புஷ்பாவின் அரசியல் லிஃப்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரால் ஏற்பட்டது. அவர் மூலமே குறுகிய காலத்தில் ஜெட் வேகத்தில் அரசியலில் வளர்ச்சியடைந்தார். 

சிவ சிவா!

நாடாளுமன்றத்தில் தன் தனித்த செயல்பாடுகளால் பலமுறை முத்திரை பதித்தவர் திருச்சி சிவா. 45 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக, சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதா நிறைவேறியது. அப்போது, அவரைக் கட்சிப் பேதமின்றி அனைவரும் பாராட்டினார்கள். ஆனால், அவர் தனிப்பட்ட வாழ்க்கையை, பெருமைக்குரியதாக அமைத்துக் கொள்ளவில்லை என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.  சசிகலா புஷ்பாவுடன் சிவாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் ரொம்ப நாட்களாக இருந்து வருகிறது.

‘‘இது பண விவகாரம்தான். ஒரு கட்டத்தில், சசிகலா புஷ்பாவின் தொலைபேசி அழைப்பை சிவா எடுக்கவில்லையாம். இது சசிகலா புஷ்பாவுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்களுக்குப் பிறகு, ஏர்போர்ட்டில் நேருக்கு நேராகச் சந்தித்தபோது, எரிச்சல் அதிகமாகி, ‘என் பணமும் போனது; என்னையும் மதிக்கவில்லை; உன்னால் கட்சியிலும் குடும்பத்திலும் எனக்குக் கெட்ட பெயர்’ என்கிற கோபத்தை வெளிக்காட்டும் வகையில், சிவாவை கன்னத்தில் அறைந்துள்ளார்” என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

‘‘டெல்லி க்ளைமேட் எப்படி உள்ளது?’’

சிவா - சசிகலா புஷ்பா விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க, அறிவாலயம் சென்றார் சிவா. மு.க.ஸ்டாலின் சிவாவை சந்திப்பதைத் தவிர்த்து விட்டார். அதனால், கருணாநிதியை மட்டும் சிவா சந்தித்துள்ளார். அப்போது, சிவாவிடம், “டெல்லி கிளைமேட் எப்படி இருக்கிறது?” என்று கேட்டாராம் கருணாநிதி. என்ன சொல்வதென்றே தெரியாமல் தவித்த சிவாவிடம், ‘‘ஸ்டாலினிடம் பேசிய பிறகுதான் என்னால் முடிவு சொல்ல முடியும்... போய்ட்டு வா” என்றாராம்.

அ.தி.மு.க. வரலாற்றில் இதுவே முதல் முறை!

டெல்லி ஏர்போர்ட் விவகாரத்துக்கு அடுத்த நாள் தம்பிதுரை மூலம் கார்டனுக்கு வரவழைக்கப் பட்டார் சசிகலா புஷ்பா. அம்மாவிடம் பாராட்டு கிடைக்கும் எனப் போனவருக்கு குட்டுதான் விழுந்தது. அன்றைய தினமே ப்ளைட் பிடித்து டெல்லி பறந்தார். ஆகஸ்ட் 1-ம் தேதி காலையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவரை ராஜ்யசபா அ.தி.மு.க குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் மறித்து, ‘‘எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மா சொன்னாங்க’’ எனச் சொல்ல... அதை, சட்டை செய்யாமல் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அங்கேதான், ‘‘தலைவி என்னை அடித்தார்’’ என தைரியமாகத் திரி கொளுத்திப் போட்டார்.

தன்னைப் பேச அனுமதிக்குமாறு துணை சபாநாயகர் குரியனிடம் கேட்டார். சசிகலா புஷ்பா பேசத் தொடங்கிய உடன் அனல் வீசியது. ‘‘திருச்சி சிவா நல்ல மனிதர். அவரிடமும், தி.மு.க தலைவர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. நான், கட்சித் தலைமை மீது நன்மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்களிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்தப் பதவியைக் கொடுத்தது கட்சித் தலைமைதான். ஆனால், அந்தத் தலைமையே என் பதவியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டுகிறது. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. என்னைக் கட்சித் தலைவி அடித்தார். என்னை ராஜினாமா செய்ய தம்பித்துரை இங்கு அழைத்து வந்துள்ளார். என் குடும்பத்தைக்கூட நான் பார்க்க முடியவில்லை’’ என்றார்.

அவருடைய பேச்சுக்கு நவநீதகிருஷ்ணன் உட்பட அ.தி.மு.க எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அ.தி.மு.க வரலாற்றில் யாருமே சொல்லத் துணியாத விஷயத்தை சசிகலா புஷ்பா சொன்னது அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஜெயலலிதாவை தைரியசாலி என்பார்கள். அவருக்கே பயப்படாத சசிகலா புஷ்பாவை பார்த்து கார்டன் வட்டாரமே அதிர்ந்து கிடக்கிறது.

மேயர், மகளிர் அணிச் செயலாளர், எம்.பி என உச்சத்துக்குப் போய் பள்ளத்தில் சரிந்து நிற்கிறார் சசிகலா புஷ்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்