"பகலிலேயே பாதுகாப்பு இல்லை... இரவில் பாதுகாப்புத் தருவார்களா?"

புதுச்சட்டம் சரிப்பட்டு வருமா?

ரவு, பகல் என்பது காலம் மட்டும்தான். காலத்தை மனிதர்கள் தின்னும் அளவுக்கு எல்லாமே 24X7 என்றாகிவிட்டது. வெளிநாடுகளைப் போல இரவு, பகல் என எந்த நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களைத் திறந்துவைக்க அனுமதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

‘கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவைகளின் நிலையை முறைப்படுத்துதல்) மசோதா 2016’ (Model Shops and Establishment (Regulation of Employment and Condition of Services) Bill 2016) என்ற  மசோதாவுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி திரையரங்குகள், ஹோட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம். இரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபடவும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து, தங்கும் வசதி, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ‘கிரச்’ போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தச் சட்டம் சொல்கிறது. கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டுக்கு இது சாத்தியமா?

“இந்தச் சட்டம் நம் நாட்டுக்கு ஒத்துவராது. பகல் நேரத்திலேயே பாதுகாப்பு இல்லாத நாட்டில், 24 மணி நேரமும் தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள், அலுவலகங்கள் இயங்கினால் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது” எனக் கேட்கிறார் மூத்த எழுத்தாளரும், அறிவொளி இயக்கத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழ்ச்செல்வன். “தனியார் வங்கி ஒன்று மக்களுக்குக் கூடுதல் சேவையைத் தர எண்ணி,  இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கியை இயக்கியது. மக்கள் யாரும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விரைவிலேயே அந்தச் சேவையை நிறுத்திக்கொண்டார்கள். இதே நிலைதான் தியேட்டர்கள், அலுவலகங்கள், ஹோட்டல்களுக்கும் நிகழும். இப்போதே கால நேரம் பார்க்காமல் வேலைவாங்கும் நிறுவனங்கள், இனிமேல் ஊழியர்களை வாட்டி எடுக்கும். ஷிஃப்ட் முறையில் கூடுதல் நேரம் இயங்கினாலும் அது ஊழியர்களுக்குத்தான் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். உலக மயமாக்கலின் ஒரு பகுதியாக வரும் இந்தச் சட்டத்தினால், வெளிநாட்டில் நடக்கும் அனைத்தையும் நம் நாட்டில் நிகழ்த்திவிட முடியாது” என்று சொல்கிறார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அளவியல் துறை இணைப் பேராசிரியர் இராம.சீனுவாசன், ‘‘இந்தச் சட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகமாகும் என்கிற மத்திய அரசு, ஊதியங்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. 365 நாட்கள் 24 மணி நேரம் என இயங்கும்போது ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறைகள் கிடையாது. வார விடுமுறைக்குப் பதில் இன்னொரு நாளில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள். பொதுமக்கள் மால்களில் படம் பார்ப்பது, சாப்பிடுவதைத் தவிர, மற்ற கடைகளில் பெரிய அளவில் வியாபாரம் இருப்பதில்லை. கூடுதல் நேரம் கடைகளைத் திறந்துவைத்தால் எந்த அளவில் கூடுதல் லாபம் என்பது கேள்விக்குறிதான். நம் மாநிலம் உட்பட பல மாநிலங்களில் இரவு 11 மணிக்கு மேல் திறந்து இருக்கும் கடைகளின் மீது அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதில்லை” என்றார்.

‘‘இப்போதே வார இறுதிநாட்களில் மட்டும் மக்களின் வருகை இரவு ஷோக்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தச் சட்டம் வந்தால் இரவு கூடுதலாக இரண்டு காட்சிகள் இருக்கும். இரவில் முதல் இரண்டு காட்சிகளுக்கு இருப்பதுபோல மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்காது. மால்களில் இரவுக் காட்சிப் படம் பார்க்க வரும் மக்களுக்காக விடிய விடிய கடை நடத்துவதன் மூலம் ஊதியம், மின்சாரம், உடல் உழைப்பு எல்லாம் வீண் என்று நினைக்கத் தோணுகிறது’’ என்கிறார், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றின் உரிமையாளர்.

“பெண்களை இரவு நேரத்தில் வேலைக்கு அமர்த்தலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தரப்படும்” என மத்திய அரசு சொல்கிறது. தலைநகர் டெல்லி முதல் குக்கிராமங்கள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை தினமும் நாளேடுகளில் வரும் செய்திகளைப் பார்த்தாலே தெரியும். முதலில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, அதன் பிறகு இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவருவது பற்றி அரசு யோசிக்கட்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்