கலைச்செல்விக்கு முன்னால் 15 பாலியல் பலாத்காரங்கள்!

தஞ்சாவூரில் போலிஸ் இருக்கிறதா?கொடூரம்

"கலைச்செல்வியோட அம்மா இறந்து போயிட்டாள். நான்தான் கலைச்செல்வியை வளர்த்தேன். யாரோ அவளைத் தூக்கிட்டுப் போய் நாசப்படுத்தி, கல்லால அடிச்சு கொலை செஞ்சு, ஜட்டியை வாயில் திணிச்சிருக்கானுங்க. உடம்புல ஒட்டுத் துணிகூட இல்லாம போட்டுட்டுப் பேயிருக்கானுங்க. அவங்க அக்கா தங்கச்சியா இருந்தா இப்படிச் செய்வானுங்களா, அந்தப் பாவிங்க?” என்று கதறுகிறார் கலைச்செல்வியின் பெரியம்மாவான பாப்பம்மாள்.

இப்படி, ஒரு கொடூரம் அல்ல... பல கொடூரங்கள் நடக்கும் இடமாக தஞ்சை மாவட்டம் மாறிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது? 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலத்தைச் சேர்ந்தவர், துப்புரவுத் தொழிலாளியான பாப்பம்மாள். இவரது தங்கை மகள்தான் கலைச்செல்வி. 20 வயது இளம்பெண்ணான கலைச்செல்வி, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு, டாய்லெட் போவதற்காக வீட்டின் பின்புறமுள்ள கருவேலங்காட்டுக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கலைச்செல்வி கிடைக்கவில்லை. மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் கருவேலங்காட்டுக்கு டாய்லெட் போவதற்காகச் சென்றபோதுதான் கலைச்செல்வி சிதைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

அந்தப் பெண்ணிடம் பேசினோம். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். “நான் டாய்லெட் போனப்போ, நிர்வாணமா ஓர் உடல் கிடந்துச்சு. கிட்டேபோய் பார்த்தப்ப கலைச்செல்வி, உடம்புல துணியே இல்லாம கிடந்தாள். உயிர் இருக்குமான்னு தூக்கிப் பார்த்தேன். மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிச்சு. வாய்க்குள்ளே அவளோட ஜட்டியைத் திணிச்சிருந்தானுங்க படுபாவிங்க. சுடிதார் பேன்டைவைத்துக் கழுத்தை நெரிச்சிருக்கானுங்க. கல்லால் முகத்தில அடிச்சிருக்கானுங்கபோல. முகம் சிதைஞ்சு போயிருந்துச்சு. அதைப் பார்த்து நான் கதறி அழுதச் சத்தம் கேட்டு, ஆளுங்க எல்லாம் ஓடி வந்தாங்க. பக்கத்துல பாழடைந்த மில் இருக்கு. அங்க வெச்சுதான் கலைச்செல்வியைக் கெடுத்துருக்கானுங்க” என்றார் கண்ணீருடன்.

சாலியமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜா, குமார் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜாவுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பேசியபோது, மேலும் பல அதிர்ச்சிக்குரிய தகவல்களைச் சொன்னார்கள். “இது முதல் சம்பவம் அல்ல... இதற்கு முன்பாக இந்தப் பகுதியில், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலியமங்கலம் தோப்புத் தெரு அருகே, ஒரு பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருந்தனர். போலீஸில் புகார் செய்தும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலியமங்கலம் அருகே கொட்டகொல்லமேடு என்ற இடத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. போலீஸில் புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உத்தங்குடியில் டாய்லெட் போவதற்காகச் சென்ற ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். உக்கடை அருகே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். போலீஸில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் பகுதியில் ஒரு சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு ஆளானார். அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, கும்பல் வல்லுறவுக்கு ஆளானார். அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஓர் ஆண்டுக்கு முன்பாக, அய்யனார் கோயில் அருகே ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து உடலை சிதைத்துப் போட்டிருந்தனர்” என்று கவலையோடு சொன்னார்கள்.

கலைச்செல்வியின் தந்தை ராஜேந்திரனிடம் பேசினோம். “நாங்கள் காலம் காலமாக இங்கு தோட்டி வேலை செய்கிறோம். எங்கள் குடியிருப்பில் டாய்லெட் வசதி கிடையாது. டாய்லெட் இருந்திருந்தா என் பொண்ணு செத்திருக்க மாட்டா...” என்று அழுது புலம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்