மதுவிலக்கு... மெட்ரோ ரயில்!

சட்டசபை

"மதுவிலக்கில் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா’’ என்று ஜெயலலிதா, தி.மு.க-வினருக்குக் கிடுக்குப்பிடி போட, ‘‘ ‘மெட்ரோவே வேண்டாம்’ என்று நீங்கள் சொன்னது தெரியுமா’’ என்று தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் ஜெயலலிதாவுக்கு  செக்வைக்க, கிடுகிடுத்துள்ளது சட்டசபை.

மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது, ‘‘தி.மு.க ஆட்சியில்தான் மதுவிலக்கு ரத்தானது’’ என்று அமைச்சர் தங்கமணி கூறிய கருத்துக்கு தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘1971-ல் அன்றைய முதல்வர்  கருணாநிதியால் பூரண மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. 2007-ம் ஆண்டு சட்டசபையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ‘மதுவிலக்கு வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி சட்டசபையில், ‘கள்ளச்சாராயம் என்பது ஒழிக்க முடியாத ஒன்று. மதுவிலக்கில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களைவிட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்தான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியில் வெற்றி பெற முடியாது’ என்று கூறியுள்ளார். இதுதான்தி.மு.க-வின் மதுவிலக்குக் கொள்கை’’ என்று சொல்லி தி.மு.க-வினருக்குக் கிடுக்குப்பிடி போட்டார்.

இதற்குப் பதில் சொல்ல தி.மு.க-வினர் வாய்ப்புக் கேட்க... சபாநாயகர் மறுக்கவே வெளிநடப்பு செய்தனர். வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ‘‘மதுவிலக்குக் கொள்கையில் ஜெயலலிதா, மகாத்மாவின் பேத்திபோல் பேசுகிறார்’’ என்று நக்கலடித்தார்.

உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது பழைய சபைக்குறிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு பேசிய தி.மு.க உறுப்பினர் மா.சுப்பிரமணியன், ‘‘இப்போது நீங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், 2006 சட்டப்பேரவையில் நீங்கள் எதிர்க் கட்சித்தலைவராக இருந்தபோது,  ‘சென்னை மாநகருக்கு எந்தவகையிலும் ஒத்துவராத மெட்ரோ ரயில் திட்டத்தை தி.மு.க அரசு ஏன் கொண்டு வருகிறது. மக்கள் பணத்தை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்? மெட்ரோவால் காற்று மாசுபடும்’ என்று பேசியிருக்கிறீர்கள். இன்று, ‘2003-ம் ஆண்டிலேயே மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வந்தோம்’ என்று நீங்கள் சொல்கிறீர்களே?’’ என்று ஜெ-வை மடக்க, அதற்குப் பதில் அளித்த முதல்வர், ‘‘மெட்ரோ ரயில் பற்றி நான் சொன்ன கருத்துகளை  மறுக்கவில்லை. நான் பேசியது உண்மை. மெட்ரோ ரயில்  செயல்பாட்டில் இருக்கும்போது அதைத் தடுக்கவும் நினைக்கவில்லை’’ என்று பேசினார்.

வழக்கத்துக்கு மாறாக  எதிர்க் கட்சி வரிசையில் இருந்து உறுப்பினர்கள் மேஜையைத் தட்டினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்