"செத்துப்போ என தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார்!"

காரோடு மனைவியை கொன்றாரா கணவன்?

சென்னை நந்தனம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு முதலாவது பிரதான சாலை அருகே நின்றுகொண்டு இருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார்கள் இப்படித் திடீரென தீப்பிடித்து எரிவது சகஜம் ஆகிவருவது அனைவரும் அறிந்ததுதான். எனவே, பெரிய பரபரப்பு இல்லாமல் அப்போது அது பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளே ஒரு பெண் எரிந்துகொண்டு இருப்பதுதான் பதற்றத்தை அதிகம் ஆக்கியது. அந்தப் பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள் அக்கம்பக்கத்தினர். படுகாயத்துடன் படுக்கவைக்கப்பட்டு இருந்த அவரை போலீஸார் வந்து விசாரணை நடத்தியபோது... அவர் சொன்னது போலீஸை உறையவைத்தது.

‘‘என் பெயர் பிரேமா. என்னை எனது கணவர் நாகராஜே உயிரோடு எரித்துக் கொலை செய்ய முயற்சித்தார்” என்று அந்தப் பெண் சொன்னார். அப்போதுதான் தெரிந்தது நடந்தது கார் எரிப்பு அல்ல, ஆள் எரிப்பு என்று!

சென்னை தியாகராய நகரில் கால்டாக்சி டிரைவராக இருக்கிறார் நாகராஜ். அவர் மனைவிதான் இந்த பிரேமா. இவர்களுக்கு யஷ்வந்த், நிஷந்த்ராஜ் என்று இரண்டு மகன்கள். இவர்கள் நான்கு பேரும் காரில் போய் இருக்கிறார்கள்.  ‘‘கார்ல போனபோது, நாகராஜுக்கும் பிரேமாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ‘பிள்ளைகளையும், என்னையும் சம்பாதித்து காப்பாற்ற வழியில்ல.... உனக்கு எதுக்குடா கல்யாணம்’ என்று பிரேமா திட்டி இருக்கிறார். ‘உன்னோடு வாழ்றதைவிடச் செத்துப்போகலாம்’ என்றபடியே காருக்குள் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  பெட்ரோலை எடுத்துத் தன் மீது ஊற்றியிருக்கிறார். மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர் நாகராஜ், ‘செத்துப்போ’ எனக் கூறியபடி தீக்குச்சியை உரசி மனைவி மேல் போட்டுவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்” என்று பிரேமா தனது வாக்குமூலத்தில் சொன்னதாக ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார். ‘‘என்னை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தது நாகராஜ்தான்” என்று மூன்று முறை சொன்னாராம் பிரேமா.

நாகராஜை கைதுசெய்துள்ளது போலீஸ். காரில் அவர்கள் இருவரோடு இருந்த குழந்தைகள் இருவரும் தீக்காயங்களுடன் தப்பி விட்டார்கள். ‘‘நான்தான் குழந்தைகளை மீட்டேன்” என்று நாகராஜ் சொல்கிறார். ‘‘பிரேமாதான் அந்தக் குழந்தைகளை வெளியில் தள்ளிவிட்டார்” என்று போலீஸார் சொல்கிறார்கள். போலீஸாரிடம் நாகராஜ் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பிரேமா என்னிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே தற்கொலை செய்துகொண்டார். அவரே பெட்ரோலை வாங்கி மறைத்து வைத்திருந்தார்” என்று சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்