மோதிய பிஞ்சுகள்... வதைத்த காக்கிகள்!

".........பள்ளியில் படிக்கிற குண்டா?" "உன் ரத்தமும் என் ரத்தமும் ஒண்ணுதான்!"மதுரை கொடூரம்

றத்துக்குப் புறம்பான அத்தனை காரியங்களையும் மொத்தமாகச் செய்வது என்று தமிழ்நாடு போலீஸார் திட்டமிட்டு இருப்பார்கள்போல. பொய் வழக்குகளைப் போடுவது, அப்பாவிகள் மீது வழக்குகளைப் பாய்ச்சுவது போன்றவற்றைக் கேள்விப்பட்டு உள்ளோம். முதன்முதலாகப் பள்ளிச் சிறுவர்கள் மீது பாலியல் வழக்குப்போட்டுத் தனது கம்பீரத்தைக் காட்டி இருக்கிறது தமிழக போலீஸ். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபிறகும் அது பற்றிய எந்தக் கூச்சமும்  இல்லாமல் காவல் துறை இருப்பதுதான் வேதனைக்குரியது.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சூலப்புரம் அருகே உள்ளது உலைப்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், வல்லரசு, முருகதாஸ், சங்கீதா ஆகிய நான்கு பேரும் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். சுந்தரபாண்டி 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன். இந்த  இளஞ்சிறார்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிளேடால் வெட்டுதல், பெண் உறுப்புகளைத் தொடுதல், பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் உட்செலுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதே பிரிவுகளின் கீழ் சங்கீதா என்ற சிறுமியின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதுதான் கொடுமை. 

பாலியல் வழக்குப் போடும் அளவுக்கு என்ன நடந்தது... நடந்திருக்கும்? அந்தக் குழந்தைகளை நாம் மதுரையில் சந்தித்தோம்...

‘‘கடந்த வெள்ளிக்கிழமை (5-ம் தேதி) காலையில 8 மணிக்கு நாங்க அஞ்சு பேரும் எங்க ஸ்கூலுக்குப் போனோம். சீக்கிரமே போனதால, ஸ்கூலில் விளையாடிக்கிட்டு இருந்தோம். அப்போ, அந்த வழியே மூணு பொண்ணுங்களும், ஒரு பையனும் வந்தாங்க. அவங்க இந்து ஆரம்பப் பள்ளியில படிக்கிறவங்க. எங்களைப் பார்த்து, ‘........... பள்ளியில படிக்கிற குண்டா... குண்டா...’னு கேலி செஞ்சாங்க. பதிலுக்கு நாங்களும் கிண்டல் செஞ்சோம். உடனே, அவங்க கல்லை எடுத்து எங்க மேல எறிஞ்சாங்க. நாங்க பயந்துட்டோம். வல்லரசு மட்டும் பதிலுக்குக் கல்லை எடுத்துத் திருப்பி எறிஞ்சான். அப்புறம் அவங்களோட ஊர்க்காரங்க வந்து எங்களை மிரட்டி அடிக்க வந்தாங்க. எங்கள சாதியைச் சொல்லிக் கேவலமாப் பேசுனாங்க. பிறகு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போய் விசாரிக்கணும்னு சொன்னாங்க. எங்கள ஜெயில்ல பிடிச்சுப்போடப் போறதாச் சொல்றாங்க. எங்களுக்குப் பயமா இருக்கு” என்று அழ ஆரம்பித்தார்கள்.

இந்தக் குழந்தைகளின் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் அருகில் இருந்தார். “இந்தச் சிறார்கள் மீது மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளது காவல் துறை. குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறை முதல் ஆயுள்தண்டனை வழங்குவது வரை இந்தப் பிரிவுகளில் இடம் உள்ளது.

7 - 12 வயது வரையுள்ள குழந்தைகள், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத பருவம் என்பதால், அவர்களைக் குற்றவாளிகளாகக் கருத முடியாது என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 83 கூறுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தச் சிறார்களுக்கு எதிராக போலீஸார் அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்தப் பிரச்னையில், சாதி ரீதியில் காவல் துறை செயல்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைத் திருப்திப்படுத்த அந்தச் சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மீது வன்மத்தைப் பாய்ச்சி இருக்கிறார்கள்.

அடிப்படையான, சட்ட அறிவுகூட இல்லாமல் போலீஸார் செயல்பட்டுள்ளனர். பள்ளிகளில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி இல்லை. மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் மற்றும் கல்வித் துறையினர்தான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை, போலீஸாருக்கு இதுபோன்ற சம்பவம் குறித்து முதலில் தெரியவந்தால், மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு குழந்தைகள் நல அலுவலர்கள் மூலம் பிரச்னையைச் சரி செய்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. உசிலம்பட்டி பகுதியில் சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசு கொல்லப்படுவது தடுக்கப்பட்டதுபோல, இங்கு தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள எல்லாக் காவல் நிலையங்களிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். முதலில் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். உசிலம்பட்டி டி.எஸ்.பி-யான ராமகிருஷ்ணன், எழுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் காவல் ஆய்வாளர் எம்.கல்லுப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கையா ஆகியோர் மீது வன்கொடுமைத் திருத்தச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு பாலியல் குற்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்வழக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இளஞ்சிறார்களுக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை திருத்தச் சட்டத்தின்படி உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்