"காஷ்மீர்... பியூட்டிஃபுல் காஷ்மீர்... வொண்டர்ஃபுல் காஷ்மீர்..!"

இதுதான் அ.தி.மு.க. பாணி காஷ்மீர் பிரச்னை!வெட்கம்

10 மாவட்டங்களில் கலவரம்... பதற்றம்.

ஒரு மாதத்துக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு.

மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.

இணையதளம், டி.வி சேனல்கள், பத்திரிகை சுதந்திரம் முடக்கம்.

அப்பாவி மக்கள் பாதிப்பு.

மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள்.

50-க்கும் மேற்பட்டோர் பலி. 6 ஆயிரம் பேர் காயம்.

இதெல்லாம் ஜம்மு காஷ்மீரில்தான். ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்துதான் ஜம்மு - காஷ்மீரில் வன்முறை வெடித்தது. பற்றி எரியும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பாகக் கொண்டு வர வேண்டும் என நோட்டீஸ் எல்லாம் கொடுத்துப் போராடி விவாதத்துக்குக் கொண்டு வந்தார்கள் எதிர்க் கட்சியினர். இந்தியாவின் உயிர்நாடிப் பிரச்னையான காஷ்மீர் விவாதம் நடந்தபோது தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றினார் அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன். அவர் ஆற்றிய உரைதான் தலைநகர் எங்கும் சந்தி சிரிக்கிறது. குலாம்நபி ஆசாத், ராம்ஜெத்மலானி, சீத்தாரம் யெச்சூரி என முக்கியத் தலைகள் எல்லாம் உணச்சிப்பொங்க கர்ஜனை செய்ய... உயிர் போகும் பிரச்னையில் நவநீதகிருஷ்ணன் பேச ஆரம்பித்ததுமே, “காஷ்மீர்... பியூட்டிஃபுல் காஷ்மீர்... வொண்டர்புல் காஷ்மீர்” எனச் சிரித்தபடியே பாடியதுதான் கொடூரத்தின் உச்சம். சீரியஸான விவாதம் நடந்துகொண்டிருந்தபோது நவநீதகிருஷ்ணன் அப்படி என்னதான் பேசினார். அவர் பேசிய பேச்சைச் சிரிக்காமல் படியுங்கள்.

‘‘காஷ்மீர்... பியூட்டி ஃபுல் காஷ்மீர்...

காஷ்மீர்... வொண்டர்புல் காஷ்மீர்...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பாடி நடித்த பாட்டு இது. காஷ்மீரில் நிறைய தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படி எடுக்கப்பட்ட படங்கள் பிரபலமாகின. காஷ்மீரில் விளையும் குங்குமப்பூவைத்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுகிறார்கள். இதனால் அழகான குழந்தை பிறக்கிறது. என் மனைவியும் காஷ்மீர் குங்குமப்பூவைத்தான் சாப்பிட்டார். என்னுடைய மகளுக்கும் கொடுத்தேன். நாளை என் பேத்தியும் சாப்பிடுவார். காஷ்மீரோடு தொடர்பு இருப்பதால் நான் பெருமைப்படுகிறேன். அம்மா தயவால் தேர்வாணையத் தலைவராக இருந்தபோது காஷ்மீரைச் சுற்றிப் பார்க்கப் போனேன். அங்கே பல இடங்களைப் பார்த்தேன். நல்ல உணவு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தஞ்சாவூர்தான் செழிப்பான பூமி என நினைத்திருந்தேன். காஷ்மீரைப் பார்த்ததும் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கும், நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி சர்ச்சுக்கும் போவோம். எல்லா இடங்களிலும் வணங்குவோம். காஷ்மீரில் தவறு நடந்திருக்கிறது. எங்கே நடந்தது... யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தீர்வு. காஷ்மீர் மக்கள் தமிழகத்தை நேசிக்கிறார்கள். நான் அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது காஷ்மீர் நீதிபதிகள் சென்னைக்கு வந்திருந்தார்கள். அவர்களை மெரீனா , மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்குப் போக ஏற்பாடு செய்தேன். சென்னை ஹைகோர்ட்டில் இருந்து இரண்டு நீதிபதிகள் காஷ்மீர் சென்றிருக்கிறார்கள். அதனால் காஷ்மீருக்கும் தமிழகத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அழகான அமைதியான காஷ்மீரையே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதுதான் புரட்சித்தலைவி அம்மாவின் விருப்பம். காஷ்மீரில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர கடவுளை வேண்டுகிறேன்’’ அவ்வளவுதான்.

இந்த நவநீதகிருஷ்ணன் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர். அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அட்வகேட் ஜெனரல் ஆக்கப்பட்டார். அதன்பிறகு தமிழ்நாடு தேர்வாணயத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். அதன்பிறகு, ராஜ்யசபா எம்.பி ஆக்கப்பட்டார். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒரு மேட்டர் இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்