மிஸ்டர் கழுகு : விஜயகாந்தைக் கிண்டலடித்த வைகோ!

"தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பரபரப்பு பற்றத் தொடங்கி​விட்டது. அரசியல் கட்சிகள், கூட்டணிக் கணக்குகளைக் கச்சிதமாகப் போடத் தொடங்கிவிட்டன. அதனால், தமிழகத்துக்கு விரைவில் மற்றொரு தேர்தல் வேடிக்கை வரப்போகிறது” என்ற பரபரப்புத் தகவலோடு ஆரம்பித்தார் கழுகார்.

‘‘விரிவாகச் சொல்லும்.”

‘‘2015 ஆகஸ்டு 17-ம் நாள் காமராஜர் அரங்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது பிறந்ததுதான், ‘மாற்று அரசியல்... கூட்டணி ஆட்சி’ என்ற கோஷம். அதன் நீட்சிதான் ‘மக்கள் நலக்கூட்டு இயக்கம்’. அதுதான் பிறகு மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்து, தமிழக சட்டசபைத் தேர்தலில், பல கணக்குகளைப் பொய்யாக்கி, சில யூகங்களை நிஜமாக்கியது. அதுபோல, இந்த ஆண்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திருமாவளவனின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. தனிநபர் பிறந்தநாள் கொண்டாட்டமாக இல்லாமல், ‘மதச்சார்பின்மைப் பாதுகாப்பு மாநாடு’ என்று அதை விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியில்​தான், உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகங்களின் முன்னோட்டங்கள் கிடைத்தன. அதைச் சொல்வதற்கு முன், மாநாடு பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.”

‘‘சொல்லும்!”

‘‘விடுதலைச் சிறுத்தைகளின், ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’, 7 மணிக்குத் தொடங்கியது. முதலில், கவிஞர் இன்குலாப் தலைமையில், கவியரங்கம் நடைபெற்றது. வி.சி.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புக் கவிதை வாசித்தார். அதன்பிறகு, கவிஞர்கள் கனல் மைந்தன், இளவேனில், ரசாக், தணிகைச் செல்வன் ஆகியோர் கவிதை படித்தனர். அதில் வைகோவும் புகழப்பட்டார். கவிதைகள் வாசிக்கப்படும்போது, திருமாவளவனின் முகத்தில் பூரிப்பு தெரித்தது. அதன்பிறகு, பெரம்பலூர் கிட்டு, கட்சி நிதிக்காக திருமாவளவனின் எடைக்கு எடை அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட திருமாவளவன், ‘என்னுடைய எடை 83 கிலோதான். ஆனால், பெரம்பலூர் கிட்டு வழங்கிய நாணயங்களின் எடை 93 கிலோ 600 கிராம். கட்சி நிதிக்காக என் எடையைவிட கூடுதலாகவே கொடுத்துள்ளார்’ என்று பாராட்டினார். கவியரங்கம் முடிந்ததும், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மேடைக்கு வந்தனர். ஒவ்வொருவர் பேச்சிலும், மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கான விளக்கமும் இந்தக் கூட்டணிதான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற ஆவலும் தெரிந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியபோது, ‘மக்கள் நலக்கூட்டணி சட்டசபைத் தேர்தலில் தோற்றுவிட்டது. அதனால், உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி நீடிக்குமா? என்று கேட்கிறார்கள். அதற்கு, நான் நீடிக்கும் என்று சொன்னேன். இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடித்தால், வெற்றி பெறுமா? என்று அடுத்த கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது? மக்கள் ஓட்டுப்போட்டால் கூட்டணி வெற்றி பெறும்... இல்லையென்றால் தோற்றுப் போகும். ஆனால், எங்கள் கூட்டணியும், சாதிய மதவாத சக்திகளை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டங்களும் தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணியும் தொடரும்’ என்றார்.”

‘‘ம்!”

‘‘ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, ‘இந்தக் கூட்டணியில், அம்பேத்கரியத்தை கொள்கையாகக்கொண்ட திருமாவளவன் இருக்கிறார். மார்க்சியக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இடதுசாரிகளாகிய நாங்கள் இடம்பெற்றுள்ளோம். பெரியாரின் பாசறையில் இருந்து வந்த வைகோ இருக்கிறார். ஆக, இதுதான் மதவாத - ஆதிக்க சாதி உணர்வுகளுக்கு எதிரான உண்மையான கூட்டணி. ஒரு தேர்தல் தோல்வியால், நாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்தக் கூட்டணி முறிந்துவிடக்கூடாது’ என்றார். வைகோ தன்னுடைய பேச்சில், ‘திருமாவளவன் முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நாங்கள் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினோம். தமிழக அரசியல் அரங்கில் பல அதிர்வுகளை அந்தக் கூட்டணி உருவாக்கியது. ஆனால், தே.மு.தி.க-வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்கள் கூட்டணியில் இணைந்த பிறகு, நாங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டோம்; ஏகடியத்துக்கு ஆளானோம்’’ என்றபோது வைகோவின் மறைமுகக் கிண்டலுக்கு அரங்கில் சிரிப்பொலி. தொடர்ந்து, ‘‘அதன் விளைவு மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. ஏனென்றால், போராளிகள் நாங்கள். யுத்தத்தைத்தான் இழந்திருக்கிறோம்; களத்தை இழக்கவில்லை. இன்னும் பல களங்கள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில் நாங்கள் வெல்வோம்’ என்றார். ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன், ‘சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றையும், மதவாத சக்திகளுக்கு எதிரான தொடர் போராட்டங்களையும் நிகழ்த்தும் இடது சாரிகளும், பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் பாசறையில் இருந்து வந்த வைகோவுடனும் நாம் சேர்ந்து போராட வேண்டும். இந்தப் போராட்டம் தொடரும்’ என்றார்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்