தூக்கி வீசப்பட்ட மரபுகள்!

சி.எம்.சேம்பர் to சட்டசபை!வாக்குவாதம்

மிழக சட்டமன்ற வரலாற்றில் 15 நாட்களில், இரண்டாவது முறையாக பாதியிலே சட்டசபை ஒத்திவைக்கப்​பட்ட ‘பெருமை’யை 15-வது சட்டசபை பெற்றுவிட்டது. பலம் வாய்ந்த எதிர்க் கட்சியின் உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்றிய சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து அஸ்திரங்களையும் தி.மு.க கையாள, அதற்கான எதிர் நடவடிக்கையின் உச்சமாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டிருக்​கிறார். வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடந்தபோது  தி.மு.க உறுப்பினர் ரகுபதி பேசினார். அதன்பிறகு திருப்பூர் தெற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் பேசியபோதுதான் சட்டசபை கொந்தளித்தது.

“ ‘நமக்கு நாமே’ எனச் சொல்லிக்கொண்டு கூக்குரல் போட்டவர்களால் கோட்டையைப் பிடிக்க முடியாது” என்று அவர் பேச... அதற்கு தி.மு.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. துரைமுருகன் எழுந்து, “ ‘நமக்கு நாமே’ திட்டத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் சுற்றி வந்தவர் எங்கள் தலைவர். அவர் பெயரைக் குறிப்பிடாமல் அ.தி.மு.க உறுப்பினர் பேசினாலும், அது எங்கள் தலைவரைத்தான் குறிக்கும். எனவே, அ.தி.மு.க உறுப்பினர் பேசியதை அனுமதித்தால், தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இதுபோல பேசுவார்கள். இரண்டு தரப்பும் மாறி மாறி இப்படிப் பேசுவதால் சபையின் கண்ணியம் குறையும். எனவே, அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். அதற்கு, “யார் பெயரையும் குறிப்பிட்டு ஒருமையில் பேசி இருந்தால், நான் நீக்கி இருப்பேன். அவர், பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாகப் பேசியதால் அதை நீக்கத் தேவையில்லை” என்றார் சபாநாயகர். இதனால் தி.மு.கவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது எதிர்க் கட்சித் தலைவர் அறையில் இருந்து சபைக்குள் வேகமாக வந்தார் ஸ்டாலின். நடந்த விவரங்களை ஸ்டாலினிடம் துரைமுருகன் சொன்னார். ஸ்டாலின் எழுந்து, “ ‘நமக்கு நாமே’ திட்டம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர் பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான்  தமிழகம் முழுவதும் சுற்றியது இந்த அளவுக்குப் பிரபலம் அடைந்துள்ளது” எனக் கூறிவிட்டு, ஜெயலலிதா முன்பு பேசிய ஒரு கருத்தையும் பதிவு செய்தார். உடனே, அதை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கிவிட்டார். அதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, “எதிர்க் கட்சித் தலைவர் தேவையில்லாமல், அ.தி.மு.க பொதுக்குழு பற்றிப் பேசியுள்ளார். பொதுக்குழுவில் பேசியது எதையும் நாங்கள் வெளியிடவில்லை” என்றார். சபாநாயகர் தனபால், ‘‘முதல்வர் பொதுக்குழுவில் பேசிய கருத்தை அவையில் பதிவு செய்ய முடியாது’’ என்றார். இதனால் அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் பேச வாய்ப்புக் கேட்டார். ‘‘யாருக்கும் பேச வாய்ப்புத் தர முடியாது’’ என்றார் சபாநாயகர்.

“சர்வாதிகாரியாக நடக்கும் சபாநாயகர்” என்று தி.மு.க-வினர் கூச்சலிட்டனர். ‘‘சபையை நடத்தவிடுங்கள்” என்று சபாநாயகர் தி.மு.க உறுப்பினர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், தி.மு.க-வினர் தொடர்ந்து கூச்சலிட்டுக்​கொண்டே இருந்தனர். பொறுமை இழந்த சபாநாயகர், தி.மு.க.  உறுப்பினர்​களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக் காவலர்கள் தி.மு.க உறுப்பினர்களை அவையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்டாலினை சபைக் காவலர்கள், அலேக்காகத் தூக்கிக்கொண்டு லாபியில்விட்டனர். அங்கே தி.மு.க. உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு, “காப்பாற்று... காப்பாற்று... ஜனநாயகத்தைக் காப்பாற்று” என கோஷம் எழுப்பினார். துரைமுருகனையும் குண்டுக்கட்டாகக் காவலர்கள் தூக்க, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட தி.மு.க-வினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினரும் பதறிப் போனார்கள். அவருக்கு உடனடி​யாகத் தண்ணீர் கொடுக்க​ப் பட்டது. அவரை மட்டும் சபைக் காவலர்கள் விட்டுவிட்டனர்.  லாபியில் ஸ்டாலின் அமர்ந்து கொண்டு எழுந்திருக்க மறுத்ததால், அவரை அங்கிருந்த சபைக் காவலர்கள் தூக்க முடியாமல் மல்லுக்கட்டி​னார்கள். ஒரு வழியாக, அவரை அங்கிருந்து மீண்டும் தூக்கிக்கொண்டு நுழைவாயிலுக்குக் கொண்டுவந்தனர். வெளியே வந்து ஸ்டாலினை இறக்கிவிட்டதும், மூச்சிறைக்க நின்றார். பின்னர், தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்​படுத்திக்கொண்டு மீடியாவிடம் பேசினார் ஸ்டாலின்.

“சட்டமன்ற பணியை ஆற்ற வேண்டும் என தொடர்ந்து அவைக்கு வருகிறோம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்​களும் அமைச்சர்களும் வேண்டும் என்றே, எப்படியாவது அவையில் இருந்து எங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டு அவையில் பேசக்கூடாததைப் பேசுகிறார்​கள். எதைப் பேசினால் எங்களுக்குக் கோபம் வரும் என்பதை அறிந்து அதைப் பேசுகிறார்கள். எதிரிக் கட்சியாக இல்லாமல் எதிர்க் கட்சியாக இருந்து செயல்படுவோம். ‘நமக்கு நாமே’ விஷயத்தை ஆளும்கட்சி உறுப்பினர் பேசியபோது, ‘அந்த வார்த்தையை நீக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை. நமக்கு நாமே பயணம் பற்றி முதல்வர் ஜெயலலிதா

அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில்கூட ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஆகவே, அவர் மனத்தில்கூட ஆழமாக இது பதிந்திருக்கிறது. இதுகூட எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றேன். தி.மு.க உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சொன்னேன். அதன்பிறகு அவை நடவடிக்கை தொடங்கிவிட்டது. சபாநாயகரிடம் நிதி அமைச்சரோ, சட்டசபை செயலாளரோ சென்று சொல்லி, நான் பேசியதில், ‘முதல்வர் அ.தி.மு.க பொதுக்குழுவில்’ என்று சொன்னதை நீக்கினார்கள். நான் உடனே எழுந்து, ‘நீக்குங்கள் அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்களுக்கான உரிமை. அதே நேரத்தில், அ.தி.மு.க உறுப்பினர் ‘நமக்கு நாமே’ என்று சொன்னதை நீக்குங்கள். அதை நீக்கினால், இதையும் நீக்குங்கள்... இல்லையென்றால் அதுவும் இருக்கட்டும், இதுவும் இருக்கட்டும்’ என்றேன். ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு திடீரென சபாநாயகர், காவலர்களைக் கூப்பிட்டு, ‘அத்தனை பேரையும் இழுத்துச்சென்று வெளியே போடுங்கள்’ என்று உத்தரவிட்டார்’’ என பத்திரிகையாளர்களிடம் சொன்னார் ஸ்டாலின்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்