விதிமுறை மீறலுக்கு விளக்கம் இல்லை...

அடுத்து வருகிறது உள்ளாட்சி தேர்தல்!உள்ளாட்சி தேர்தல்

ன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கப் போகிறது. இந்தத் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் என்னென்ன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பதைப் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்டோம்.

2006 முதல் 2014 வரை எத்தனை தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? இந்த வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளன? தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தல் முடிந்த உடன் தேர்தல் விதிமுறை வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? அதுபோல் நடவடிக்கை எடுத்துள்ளதா? பணம் வாங்கிய வாக்காளர்கள் மீது 2006 முதல் 2014 வரை எதேனும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன? பணம் வாங்கிய வாக்காளர் மீது எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? 2006 முதல் 2016 வரை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2006 முதல் 2016 வரை ஏதேனும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா... அல்லது வேறு  நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் தொடர்பாக 2006 முதல் 2016 வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன? தேர்தல் ஆணையம் செயல்பாடுகள் தொடர்பாக எத்தனை புகார்கள் வந்தன? அந்தப் புகார்களின் தற்போதைய நிலவரம் என்ன? செய்திக்குப் பணம் கொடுத்து விளம்பரம் செய்ததாக 2006 முதல் 2016 வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன? தமிழகத்தில் 1952 முதல் 2014 வரை எத்தனை மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் விதிமுறை தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்? என்ன என்ன காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்?... என்ற கேள்விகள் அடங்கிய தகவல் அறியும் சட்ட மனுவைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம்.

அந்த மனுவின் நகலை காவல் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு ஒன்று முதல் ஒன்பது கேள்விகளுக்கான பதிலை அளிக்ககோரி கடித நகல், தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டது. அதற்கு காவல் துறை இயக்குநர் அனுப்பிய பதிலில் ‘கேட்ட தகவல்களில் 7 மாநகர காவல் அலுவலகங்கள் மற்றும் 33 மாவட்ட காவல் அலுவலகங்களை சார்ந்தவை. ஆகையால் மேற்கூறிய அலுவலகப் பொதுத் தகவல் அதிகாரியிடம் தனித்தனியாக விண்ணப்பம்செய்து தகவல் பெற்று கொள்ளுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டது. தகவல் உரிமை சட்டத்தின்படி ஒரு மனுவை தவறாக அனுப்பினால்கூட அதை உரிய அமைப்புக்குப் பரிமாற்றம்செய்து தகவல்களை வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 5 (ஆ) விளக்குகிறது. இதைத் தவிர்த்து மனுதாரர்களை திசை திருப்பும் வகையில் அல்லது அலைக்கழிக்கும் வகையிலும் இதுபோன்ற பதிலை வழங்கக் கூடாது. ஆனால், காவல் துறை இயக்குநர் இதுபோன்ற பதிலை எப்படி வழங்கினார் என்பது புரியாத புதிர்.

மக்கள் பிரதிநிதிகள் தகுதிநீக்கம் தொடர்பான கேள்விக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பதில் அனுப்பபட்டுள்ளது. ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘1952 முதல் 2014 வரை மக்கள் பிரதிநிதிகள் யாரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை’ என்றும் மதுரை மாவட்டத்தில், ‘நீண்ட கால தகவல்களை வழங்க வழிவகை இல்லை’ என்று மதுரை மாவட்டத்தில் இருந்தும் பதில் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் எம்.லட்சுமி ‘எங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட யாருடைய பட்டியலும் தேர்தல் ஆனையத்திடம் இருந்து வரவில்லை’ என்றும், சிவகங்கை மாவட்டம் தேர்தல் அலுவலர் ‘கேள்விக்குரிய பதில் இந்த அலுவலகத்தில் இல்லை’ என்றும், திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் ‘தகுதி நீக்கம் தொடர்பான விவரங்களை www.eci.gov.in இந்த இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்’ என்றும் ஒரு தகவல் அறியும் உரிமை மனுவுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாறுபட்ட தகவலை அளித்து இருக்கிறார்கள். மற்ற மாவட்ட அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை.

இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், ‘‘காவல் துறையும், தேர்தல் ஆணையமும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பதிலை அளித்து இருக்கிறதே’’ என்று விளக்கம் கேட்டபோது, ‘‘அவர்கள் அப்படி அளித்தால் நான் என்னசெய்ய முடியும்’’ என்றார்.

ஜனநாயகத்தின் ஆணி வேர் தேர்தல். அதில் வெல்பவர்களுக்கு தலைவர்கள் என்று பெயர். இந்த லட்சணத்தில்தான் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்