"வேட்டையில் மானை துரத்துவது போல் துரத்தி அடிக்கிறார்கள்!" துரைமுருகன் தடாலடி

பேட்டி

நாற்பது ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினர், நகைச்சுவை பேச்சால் எதிர்க் கட்சியினரையும் தன்வசப்​படுத்தும் ஆற்ற​ல்கொண்டவர் எனப்பல முகங்களைக்  கொண்ட சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனிடம், சட்டசபை நிகழ்வுகள் குறித்து கேள்விகளை அடுக்கினோம். தனக்கே உரிய பாணியில் பதில் அளிக்கிறார் துரைமுருகன்.

‘‘மூத்த உறுப்பினரான நீங்கள், சட்டமன்ற கூட்டத் தொடரை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க-வுக்கு சட்டமன்றத்தை சிறப்பாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எதிர்க் கட்சியை எப்படி அடக்கி ஒடுக்கலாம், எதிர்க் கட்சியினரை எப்படி தங்கள் ஆளுகைக்குக் கீழ் வைக்கலாம் என்றுதான் சபாநாயகரும், அமைச்சர்களும் நினைக்கிறார்களே ஒழிய சபையை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எங்களைப் பேசவிட்டால் ஆளும் கட்சியின் அலங்கோலங்களை அலசி எடுத்துவிடுவோம் என்கிற பயம் ஆளும் கட்சிக்கும், சபாநாயகருக்கும் வந்திருப்பதாக கருதுகிறேன். எங்கள் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தாலே அனைத்து மந்திரிகளும் குறுக்கீடு செய்கிறார்கள். ‘வேட்டையில் மானை துரத்துவது போல’ துரத்துகிறார்கள். உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டு, கடைசியாக அதற்குப் பதில் அளிப்பார்கள். ஆனால், இப்போது எந்த அமைச்சரும் குறிப்பு எடுப்பதில்லை. அதிகாரிகள் எழுதித் தருவதை வாசித்துவிட்டுச் செல்கிறார்கள். அமைச்சர்களின் பதிலுரை, வெறும் படிப்புரையாக​தான் இருக்கிறது’’

‘‘தி.மு.க உறுப்பினர்கள், ‘செயல்​பட​விடாமல் தடுத்து, என்னை ஒருமையில் கிண்டல் செய்கிறார்கள்’ என சபாநாயகர் குற்றம்சாட்டுகிறாரே?’’

‘‘தி.மு.க உறுப்பினர்கள் மீது தாங்கள் தொடுக்க போகும் தாக்குதலுக்குப் பொது​மக்களிடம் ஒரு பாதுகாப்பு கோரித்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறார்.  ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க-வினர் மீது குற்றம் சுமத்தி, தன் நியாயத்தைக் கற்பிப்பதுபோல ஒரு கிரவுண்ட் தயார் செய்கிறார். நிறைய உறுப்பினர்கள் இருக்கும் இடத்தில் பேச வாய்ப்பு அளிக்காவிட்டால் வாய்ப்பு கேட்கத்தான் செய்வார்கள். ‘எங்களுக்குப் பேச வாய்ப்பு கொடுங்கள்’ என கேட்பதை தன்னை கொச்சைப்படுத்துவதாக சபாநாயகர் கூறுவது அவரது தரத்துக்கு உகந்ததுதல்ல.’’

‘‘தி.மு.க உறுப்பினர்களின் செயலுக்கு ஸ்டாலின் மன்னிப்புகேட்டாரே... மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தி.மு.க உறுப்பினர்கள் செயல்பட்டார்களா?’’

‘‘மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை அவர்கள் பலகீனம் என்று கருதுகிறார்கள். ‘தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கொச்சைப்படுத்தினார்கள்’ என சபாநாயகர் சொல்லும்போது, ‘அப்படி இருக்குமானால் நான் அதற்காக வருத்தப்படுகிறேன்’ என்று சொல்வது ஓர் எதிர்க் கட்சி தலைவரின் கண்ணியத்தைக் காட்டுகிறது. அதே நேரம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்களைப் பற்றிய சொல்லுக்கு ஒருவராவது மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்துள்ளார்களா? மன்னிப்பு என்பது தண்டனை அல்ல. போனமுறை எதிர்க் கட்சியாக இருந்த... கலகலத்துப்போன ஒரு கட்சியைக் கையாண்டது போல், எங்களை கையாளப் பார்க்கிறார்கள். அது தி.மு.க-விடம் நடக்காது. அதற்கு நான் தரும் பதில் ‘கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா என்பது’தான்.’’

‘‘தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்வது பெரும்பாலும், அவர்கள் கட்சி சார்ந்த விஷயங்களுக்குத்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?’’

‘‘முதலில், எதிர்க் கட்சி இல்லாமல் ஆளும் கட்சி, சபையில் உட்கார்ந்து இருப்பதற்கே வெட்கப் படவேண்டும். 110 விதியில் பொதுப்பணித் துறை குறித்து முதல்வர் படித்தார்கள். ஆனால், அதற்கு முன்பே பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை முடிந்துவிட்டது. நான் எழுந்து புதிய அறிவிப்புக்கு தேவையான நிதி ஏது? துறை அமைச்சரோ, நிதி அமைச்சரோ அதற்கு அவையில் ஒப்புதல் வாங்கினார்களா? எனவே, இது வெற்று அறிவிப்பாக இதை வெளியீடுகிறீர்கள் என்றேன். உடனே அதை சபைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதை வெளியே செய்தியாளர்களிடம் தெரிவிக்க வெளிநடப்பு செய்தோம். நாங்கள் கேட்கும் கேள்வி கிடுக்கிப்பிடி கேள்வியாக இருக்கிறது.

அதேபோல் மின்துறை மானியக்கோரிக்கையில் சபாநாயகர் ‘அதிகாரிகள் கேபினட் ரூமில் உட்கார்ந்து விவாதத்தை டி.வி-யில் பார்க்கிறார்கள்’ என்று அவராகவே வந்து மாட்டிக்கொண்டார். அது தவறு என்று நாங்கள் சொன்னால், சபைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார். எதை எடுத்தாலும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கினால், வெளிநடப்புதான் செய்ய முடியும். அவையில் அந்த அம்மா வருவார்...  110 வாசிப்பார். அவர்கள் சின்னத்திலே நின்று ஜெயித்த மூன்று பேர் பாராட்டுவார்கள். அவ்வளவுதான்... எழுந்து சென்றுவிடுவார். நாங்கள் சபையின் நேரத்தை வீணடிக்கிறோம் என்கின்றார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் ஒவ்வொரு அமைச்சரும் பேச தொடங்கும்போதே, ‘எங்கோ இருந்த என்னை இப்படி ஆக்கி... ஈராக்கி... பேனாக்கிய தெய்வமே, உயிரேனு’ 15 நிமிடங்கள், வர்ணிக்கிறார்கள். அழகர்ஆற்றில் இறங்குவதைக்கூட இப்படி வர்ணிக்க மாட்டார்கள். அதில் சபை நேரம் போவதில்லையா? இப்படி வர்ணிப்பதைக் குறையுங்கள் என்று சொல்லும் தைரியம் சபாநாயருக்கு உள்ளதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்